Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்

ப்ரியங்கா, மதுரை.

“எனக்கு வயது 21. அடிக்கடி தலைவலி வருவதாலும், கண்பார்வைக் குறைவாக இருப்பதாலும் மருத்துவர் கண்ணாடி போடச் சொல்லியிருக்கிறார். நான் கண்ணாடி போட்டு இருக்கும்போதும் சில நேரங்களில் கண் சரியாகத் தெரிவதில்லை. இதற்கு தீர்வு சொல்லுங்களேன்?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் க.மாதவன், கண்மருத்துவர், ஆத்தூர்.

கன்சல்ட்டிங் ரூம்

“உங்களுக்குப் பார்வை சில நேரங்களில் சரியாகத் தெரியாததற்கு, கண்ணாடி சம்பந்தப்பட்ட பிரச்னை, கண் சம்பந்தப்பட்ட பிரச்னை, உடல் சம்பந்தப்பட்ட பிரச்னை என மூன்று காரணங்கள் இருக்கலாம். கண்ணாடியின் பவரை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, கண்ணாடி முழுமையும் பவர் இருப்பது. மற்றொன்று, கண்ணாடியில் குறிப்பிட்ட கோணத்தில் பவர் சரியாகப் பொருத்தி இருப்பது. நீங்கள் எந்த மாதிரியான கண்ணாடியை வாங்கினீர்கள், அது சரியானதுதானா எனப் பரிசோதனை செய்தால் தெரிந்துவிடும்.

மேலும், வறண்ட கண் உள்ளவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை இருக்கும். இவர்களுக்குக் கண்களில் கண்ணீர் உற்பத்தி குறைவாக இருப்பதால், பார்வைத்திறன் பாதிக்கப்படலாம்.

21 வயதில் கண்களில் ‘கெரோட்டோகோனஸ்’  (Keratoconus)என்ற பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது, கூர்மையான கருவிழியில் ஏதும் பிரச்னை இருந்தாலும் பார்வைத்திறனில் குறை ஏற்படும்.

மூளைக்கும் கண்ணுக்கும் இடையில் பார்வை நரம்பு உள்ளது. இந்த நரம்பில் பாதிப்பு இருந்தாலும், மூளையில் ஏதும் பாதிப்பு இருந்தாலும் பார்வை சரியாகத் தெரியாது. கருவிழிக்கும் விழித்திரைக்கும் இடையில் உள்ள பகுதி தெளிவாக இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் ‘கேட்ராக்ட்’ என்கிற கண்புரை ஏற்பட்டாலும் பார்வைத்திறன் குறையும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். இதை சர்க்கரை நோயின் அறிகுறியாகக்கூட எடுத்துகொள்ளலாம். தற்போது எந்த வயதினருக்கும் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கண் மருத்துவரிடம் எதனால் பாதிப்பு ஏற்படுகிறது எனப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.”

எஸ்.டி.செல்வி, கரூர்.

“எனக்கு 20 வயது. கல்லூரி மாணவி. என்னுடைய மாமா மகனைக் காதலித்தேன். அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பதாகப் பலர் என்னிடம் தெரிவித்தனர். இதனால், அவரைவிட்டுப் பிரிந்துவிட்டேன். ஆனாலும், என்னுடைய மனது அவரை நோக்கியே செல்கிறது. அவருக்கு வேறு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ‘நான் உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன். மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொல்வதை நம்பாதே’ என்கிறார். எனக்குக் குழப்பமாக இருக்கிறது. நான் எடுத்த முடிவு சரியா தவறா? இந்தப் பிரச்னைக்கு நான் என்ன செய்வது?”

டாக்டர் இரா.குமார், பேராசிரியர், மனநல மருத்துவர், திருச்சி. 

கன்சல்ட்டிங் ரூம்

“அந்தப் பையனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு உள்ளதாக மற்றவர்கள் கூறியது உண்மையா என விசாரித்து முடிவெடுத்து இருக்கலாம். உண்மையில், அவருக்கு மற்ற பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றால், நீங்கள் அவரைவிட்டுப் பிரிந்ததுதான் சரி. இதற்காக நீங்கள் வருந்த வேண்டிய அவசியம் இல்லை. காதலிக்கும்போதே அவரைப் பற்றி தெரிந்ததே என சந்தோஷப்பட வேண்டும். அவர் மீது தவறு இருப்பது உறுதியானால், மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும். அவரைப் பற்றி நினைக்காமல் இருக்க மனதைத் திசை திருப்ப முயன்று பார்க்கலாம். எதுவும் முடியவில்லை எனில், மனநல மருத்துவரைச் சந்தித்து, அதற்கான ஆலோசனைகளையும் மருந்துகளையும் எடுத்துக்கொண்டால் காலப்போக்கில் சரியாகிவிடும்.

அவருக்கு மற்ற பெண்களுடன் தொடர்பு இல்லாமலும் இருக்கலாம். ஆனால், ஏன் மற்றவர்கள் அப்படிச் சொன்னார்கள் என விசாரிக்க வேண்டும். நீங்களே நேரடியாக நன்கு விசாரித்து உறுதி செய்த பிறகே, சரியான முடிவு எடுத்திருக்க வேண்டும். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக சந்தேகம்கொள்ளக் கூடாது. சந்தேகம் ஒரு கொடிய நோய். தன்னுடைய காதலன் அல்லது கணவன் மற்ற பெண்களுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாலே, சில பெண்கள் சந்தேகம்கொள்வார்கள். ஆதலால், உண்மை எதுவென தெரியாமல் சந்தேகம்கொள்ளக் கூடாது.

நீங்கள் இருவரும் தற்போது பிரிந்துவிட்டீர்கள். இனி எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும், தீர்க்கமானதாக இருக்க வேண்டும். எனவே, நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் படிப்பையோ, அன்றாட வாழ்வையோ பாதிப்பதாக இருக்கக் கூடாது. தேவை எனில் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.”

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, மதுரை

“நான் கிராமப்புறத்தைச் சேர்ந்தவள். சமீபத்தில்தான் எனக்கும் பெரு நகரத்தில் வசிக்கும் என்னவருக்கும் திருமணமானது. நான் சில நாட்களுக்கு முன்பு என் கணவருடன் துணி எடுப்பதற்காகக் கடைக்குச் சென்றிருந்தேன். பிரா கேட்டபோது ‘அளவு என்ன?’ என்று கேட்டார்கள். இந்தக் கேள்வி எனக்குப் புதியது. இப்போதுதான் நான் முதல்முறையாக பிரா வாங்குகிறேன். இதுவரைக்கும் அம்மா வாங்கித் தந்ததை அணிந்துவந்தேன். ஆனால், போன் செய்து அம்மாவிடம் கேட்டபோது, ‘ஏதோ ஓர் அளவைத்தான் எடுத்து வந்திருக்கிறேன்’ எனச் சொன்னார்கள். என் நெருங்கிய தோழி, ‘சரியான அளவுள்ள பிரா அணிவதுதான் சரி. இல்லையென்றால் பிரச்னை வரும்’ என்கிறாள். இது உண்மையா... பிரா அளவை எப்படிக் கணக்கிடுவது என்று சொல்ல முடியுமா?”

டாக்டர் மா.தமிழரசி, பொதுநல மற்றும் மகளிர் சிறப்பு நிபுணர், பெரம்பலூர்.

கன்சல்ட்டிங் ரூம்

“மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை அணிந்தால், உடல்நலக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பது உண்மைதான். உடலுக்குச் சரியான அளவுள்ள உள்ளாடை அணிவது மிகவும் அவசியம். பிரா மிகவும் இறுக்கமானதாக இருந்தால், மூச்சுவிட சிரமம் ஏற்படும். எலாஸ்டிக் இறுக்கமானதாக இருக்கும்போது அந்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்படும். இதனால், சருமப் பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பிராவின் அளவு பெரியதாக இருந்தால், மார்பகங்கள் கீழே இறங்கிவிடும்.

நீங்கள் அணியும் ஜாக்கெட்டின் அளவைவைத்து, பிராவின் அளவைச் சரியாக எடுக்கலாம். இல்லை என்றால், துணியின் அளவைக் கணக்கிடும் டேப்பை வைத்து, அளந்து சரியான அளவுகொண்ட பிராவை எடுக்கலாம். மிகவும் இறுக்கமானதாகவும் இல்லாமல், மிகவும் பெரியதாகவும் இல்லாமல் சரியான அளவுள்ள பிராவைப் பயன்படுத்துவதுதான் நல்லது.கோடையானாலும் குளிர்காலமானாலும் பருத்தியால் ஆன உள்ளாடைகளை வாங்குவதே சிறந்தது.”

ங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம்,டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002. doctor@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.