Published:Updated:

ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா?

ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா?
ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா?

டந்த வாரம், சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு பெண்ணுக்கு 'HH' வகை ரத்தம் தேவைப்பட்டது. இந்த அரிய வகை, சென்னையில் எங்குமே கிடைக்கவில்லை. பெங்களுருவைச் சேர்ந்த தன்னார்வலர் ஆதித்யா ஹெட்ஜ் (34) என்பவர் சென்னைக்கு வந்து ரத்தம் கொடுத்து உதவினார். ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் பார்த்து, செய்தியை அறிந்துகொண்டவர், திங்கட் கிழமை மாலை அலுவலகப் பணி முடிந்ததும், ட்ரெயினில் வந்து ரத்தம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

“இது மிகவும் அரிய வகை ரத்தம். இதை நீங்கள் சேகரித்துவைத்துக்கொண்டால் அவசரத்துக்கு உதவும்" என்று கடந்தமுறை சிகிச்சைக்கு வந்திருந்தபோதே அந்தப் பெண்ணிடம் மருத்துவர் சாந்தி குணசிங் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த ஆலோசனையை அந்தப் பெண் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி, மீண்டிருக்கிறார்.

பொதுவாக 'O' பிரிவு ரத்தத்தை `யுனிவர்சல் டோனர்’ என்பார்கள். அதாவது, `A’, `B’, `AB’ ஆகிய அனைத்து ரத்த பிரிவினருக்கும் `O' ரத்தத்தை ஏற்ற முடியும். ஆனால், `HH’ ரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு இதைக்கூட ஏற்ற முடியாது.

'O' பிரிவு ரத்தமும் ஏற்ற முடியாத, எளிதில் எங்குமே கிடைக்காத அளவுக்கு அப்படி என்ன அரிய வகை ரத்தம் `HH’? அதற்குள் போவதற்கு முன்னதாக, ரத்தத்தைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

இன்று, மருத்துவத்துறையில் நாம் அனுபவித்துவரும் வசதிகள் அனைத்துமே பல உயிர்களை பலி கொடுத்து, பல தோல்விகளைக் கடந்துதான் கிடைத்திருக்கிறது. ரத்த மாற்று சிகிச்சையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆரம்பகாலத்தில் யாருக்காவது ரத்தம் தேவைப்பட்டு, ரத்தம் ஏற்றப்பட்டால், அவர்களில் பாதிக்குப் பாதி பேர்தான் உயிர் பிழைத்தார்கள். பெரும்பாலான ரத்த மாற்று சிகிச்சைகள் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. அதற்குக் காரணம் பிரிவுகள் மாற்றி ரத்தம் ஏற்றப்பட்டதுதான் என்பது பின்னாளில் கண்டறியப்பட்டது.

1900-ம் ஆண்டு டாக்டர் கார்ல் லாண்ட்ஸ்டீனர் (Karl Landsteiner) என்பவர்தான் முதன்முதலில் ரத்தத்தில் உள்ள பிரிவுகளைக் கண்டறிந்தார். `A’, `B’, `AB’ மற்றும் `O’ என ரத்த வகைகளைப் பிரித்தார். இதில் `A’ பிரிவு, `A1’, `B2’ என மேலும் இரண்டு துணை வகைகளாகப் பிரிக்கப்பட்டது.

ரத்தப் பிரிவுகளைக் கண்டறிந்த பிறகும்கூட, ரத்த மாற்று சிகிச்சையின்போது பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகுதான் ரத்தத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சமயத்தில், 1940-ம் ஆண்டு`ரேசஸ்’(Rhesus)' என்ற குரங்கிலிருந்து வேறு ஒரு புதிய வகை ரத்தப் பிரிவு கண்டறியப்பட்டது. அதனால் அந்தப் பிரிவுக்கு 'Rh' என்று பெயர் சூட்டப்பட்டது. `Rh’-ல் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டன.

அதற்குப் பிறகு, ஒரே ரத்த வகையாக இருந்தாலும், `Rh’-ம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்ட பிறகே ஒருவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.

பாசிட்டிவ் வகை உள்ளவர்களுக்கு நெகடிவ்வோ அல்லது நெகடிவ் உள்ளவர்களுக்கு பாசிட்டிவ் ரத்தமோ ஏற்றும் பழக்கம் நிறுத்தப்பட்டது. ரத்த வகைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளின் விளைவாக பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டாலும்கூட இன்னும் சவாலாக இருக்கும் ஒரே ரத்த வகை 'பாம்பே குரூப்.’

அது என்ன 'பாம்பே குரூப் '? முதன்முதலில் இது கண்டறியப்பட்டது பம்பாயில்தான். அதனால்தான் 'HH' ரத்தப் பிரிவு , 'பாம்பே குரூப்' என்று அழைக்கப்படுகிறது. பத்து லட்சம் பேர்களில் நால்வருக்குத்தான் இந்த ரத்தவகை இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 179 பேருக்கு இந்த ரத்தப் பிரிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் மும்பையில் மட்டும் 35 பேர் இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் 12 பேரும் மற்றவர்கள் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

இந்த ரத்த வகையைப் பற்றி விரிவாக விளக்குகிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கித் துறைத் தலைவர் மருத்துவர் சுபாஷ்...

"இந்த ரத்தப் பிரிவை, 1952-ம் ஆண்டு பம்பாயில், டாக்டர் பெண்டே (Dr. Y. M. Bhende) என்பவர்தான் முதன்முதலில் கண்டறிந்தார். அதனால் இது, `பாம்பே குரூப்’ என்று அழைக்கப்படுகிறது. மரபணுக்கள்தான் ரத்தப் பிரிவுகளைத் தீர்மானிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மரபணு இருப்பவர்களிடம் மட்டும்தான் இந்த ரத்தவகை இருக்கும். பம்பாயில் சில குறிப்பிட்ட மக்களிடம் இது ஆரம்பகாலத்தில் இருந்தது .

இப்போது அனைத்துப் பகுதிகளிலும் இந்தப் பிரிவு ரத்தம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். மற்ற பிரிவுகளைக்கூட, தவிர்க்க முடியாத சில நேரங்களில் மாற்றி ஏற்றிக்கொள்ளலாம். ஆனால், 'பாம்பே குரூப்' உள்ள ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டால், மற்ற எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்ற முடியாது.

நம் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜென்களும் (Antigens), பிளாஸ்மாவில் ஆன்டி பாடீஸும் (Anti bodies) இருக்கும். இதை வைத்துதான் ரத்தம் எந்த வகை என்பதைக் கண்டறிய முடியும்.

உதாரணமாக `ஏ’ குரூப் ரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு ' ஏ' மற்றும் `ஹெச்’ ஆகிய இரண்டு ஆன்டிஜென்களும், 'பி' ஆன்டிபாடீஸும் இருக்கும்.

'பி’ பிரிவில் `பி’ மற்றும் 'ஹெச் ' ஆன்டிஜென்கள் இருக்கும். 'ஏ'ஆன்டிபாடீஸும் இருக்கும்.

`ஏபி’ பிரிவில் `ஏ’, `பி’ மற்றும் `ஹெச்’ வகை ஆன்டிஜன்கள் இருக்கும்.

பாம்பே பிளட் குரூப்பில் ஆன்டிஜென்கள் இருக்காது. `ஏ’, `பி’, `ஹெச்’ ஆன்டிபாடீஸ் மட்டுமே இருக்கும்.

'ஹெச்' ஆன்டிஜென்னில் இருந்துதான் 'ஏ’, `பி’, `ஓ' ஆகிய மூன்று பிரிவுகளும் பிறக்கின்றன. அனைத்துப் பிரிவுகளிலும் இருக்கும் 'ஹெச்' ஆன்டிஜென் 'HH' பிரிவில் மட்டும் இருக்காது. பிளாஸ்மா சோதனையில் மட்டுமே என்ன வகை என்பதைக் கண்டறிய முடியும்.

`பாம்பே குரூப்’ உள்ளவர்கள் வருடத்துக்கு ஒருவர் அல்லது இருவர்தான் எங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள். இதே ரத்தப் பிரிவில் உள்ள பத்து நபர்கள் எங்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த வகையைச் சேர்ந்த யாராவது வந்து அட்மிட் ஆனால், அவர்களுக்கு போன் பண்ணிச் சொல்லுவோம். அவர்களில், யாராவது ஒருவர் வந்து ரத்த தானம் செய்வார்கள். சென்னையில் மூன்று பேர் இருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியூர்களில் இருக்கிறார்கள். எந்த ரத்தத்தையும் 35 நாள்களுக்கு மேல் சேமித்துவைத்திருக்க முடியாது. இதன் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்படுவது `HH' வகை ரத்தப் பிரிவினர்கள்தான்" என்கிறார் மருத்துவர் சுபாஷ்.