வைட்டமின் சீக்ரெட்ஸ் - 4

வைட்டமின் சி

சோர்வாக இருக்கும்போது ஒரு கிளாஸ் லெமன் அல்லது ஆரஞ்சு ஜூஸ் குடித்துப்பாருங்களேன். உடலுக்கு எனர்ஜியும் புத்துணர்ச்சியும் உடனடியாகக் கிடைக்கும். இதற்குக் காரணம் வைட்டமின் சி. நமக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய மிக முக்கியமான வைட்டமின் இது. தாவரங்களிலும் விலங்குகளிலும் இருக்கும் இந்த வைட்டமின் நீரில் கரையக்கூடிய  நுண்ஊட்டச்சத்து என்பதால்,  உடலால் தேக்கிவைக்க முடியாது. எனவே, தினமும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைட்டமின் சி ஏன் தேவை?

இணைப்புத் திசுக்களில் முக்கியமானது கொலாஜன். கொலாஜன் இருப்பதால்தான், எலும்புகள், பற்கள் வலிமையாக இருக்கின்றன. வைட்டமின் சி இணைப்புத் திசுக்கள் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டவுடன் அந்த இடத்தில் உள்ள புண் ஆறும்போது, மேலே தோல் சேர்ந்து தழும்பாக மாறும். தோல் சேருவதற்கு முக்கியக் காரணம் கொலாஜன். அதன் உருவாக்கத்துக்கு உதவுவது வைட்டமின் சி. எனவே, இதனை ‘மருத்துவக் குணம் கொண்ட வைட்டமின்’ என அழைக்கலாம். இரும்புச்சத்தைக் கிரகிப்பதில் வைட்டமின் சி முக்கியப் பங்காற்றுகிறது.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 4

வைட்டமின் சி குறைந்தால்...

‘ஸ்கர்வி’ எனும் நோய் வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும். ஈறுகளில் இருந்து ரத்தம் கசிந்துகொண்டே இருக்கும். தற்போது உலக அளவில் வைட்டமின்சி-யின் முக்கியத்துவம் உணரப்பட்டு, ஸ்கர்வி நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. எனினும், கப்பல்களில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு, இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

சிறுசிறு ரத்த நாளங்களும் உறுதியாக இருப்பதற்கு, வைட்டமின் சி உதவிபுரிகிறது. வைட்டமின் சி குறைபாடு ஏற்படும்போது, இந்தச் சிறிய ரத்த நாளங்களில் இருந்து ரத்தம் கசிவதால்தான் ஈறுகள், தோல் போன்றவற்றில் இருந்து, வெளியே ஊசி குத்தினால் வருவதுபோல மிகச் சிறிய அளவில் ரத்தம் ஆங்காங்கே கசிகிறது.

ஒருவர் ஒரு மாதத்துக்கும் மேல் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அறவே தவிர்த்துவந்தால், அவரின் தோல் அடிக்கடி உலரும்; காயம் ஏற்பட்டால் ஆறாது; எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்; ரத்தசோகை  வரலாம்; நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

வைட்டமின் சி அதிகமானால்...

வைட்டமின் சி நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம், சளிப் பிரச்னைகள் மற்றும் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகின்றன. பலர் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டால் சளி பிடிக்கும் என நினைக்கின்றனர். இது தவறான கருத்து.

ஒரு சிலருக்கு சில பழங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்களைத் தவிர, மற்றவர்கள் தாராளமாக வைட்டமின் சி நிறைந்த பழங்களைத் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் சி-யை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டாலும், பொதுவாக எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாது. ஆனால், ஒரு சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றில் காயங்கள் ஏற்படலாம். அவர்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்கு மட்டும் வைட்டமின் சி எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 4

வைட்டமின் சி மாத்திரை எடுத்துக்கொள்ளலாமா?

பொதுவாக, வைட்டமின் சி-க்கு என எந்தவித மாத்திரைகளையும் வாங்கிச் சாப்பிட வேண்டாம். உணவுகள் மூலமாகவே எடுத்துக்கொள்ளலாம். அறுவைசிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும், வைட்டமின் சி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஓட்டப்பந்தய வீரர்கள், மாரத்தான் போன்றவற்றில் பங்கேற்பவர்கள், நீண்ட தூர நீச்சலில் பங்கேற்பவர்கள் போன்றோருக்கு உடலில் காயங்கள் ஏற்பட, அதிக வாய்ப்பு உள்ளது.  இவர்கள் மட்டும் மருத்துவரின் அனுமதி பெற்று, ஒரு வாரம் வரை வைட்டமின் சி மாத்திரைகள் எடுத்துக்கொள்வது நல்லது.

- பு.விவேக் ஆனந்த்

ஆன்டிஆக்ஸிடன்ட்

நாம் சாப்பிடும் உணவில் உள்ள நீரில் கரையும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்குச் செல்லும்போது, அவற்றுக்கு ஒரு பாதுகாப்பு அரண்போல இருப்பது வைட்டமின் சி. உடலில் உள்ள செல்களிலும், உடலில் உற்பத்தியாகும் ரசாயனங்களிலும் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை இது குறைக்கிறது. இதனால், செல்கள் பாதுகாக்கப்பட்டு, நோய்கள் தடுக்கப்படுகின்றன.

அன்றாட உணவில் வைட்டமின் சி கிடைக்க...

இட்லி, தோசையுடன் புதினா, கொத்தமல்லி சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.

புதினா ஜூஸ், தக்காளி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் அருந்தலாம்.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம்.

வாரத்துக்கு மூன்று நான்கு முறையாவது கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி யாருக்கு எவ்வளவு தேவை?

ஒருநாளைக்கு...

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் -  40 மி.கி.

கர்ப்பிணிகள்  - 60 மி.கி.

பாலூட்டும் தாய்மார்கள் - 80 மி.கி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism