Published:Updated:

கொழுப்பைக் கூட்டும், உயர் ரத்த அழுத்தம் தரும் பீட்சா... வேண்டாமே! #PizzaHealthEffects

கொழுப்பைக் கூட்டும், உயர் ரத்த அழுத்தம் தரும் பீட்சா... வேண்டாமே! #PizzaHealthEffects
கொழுப்பைக் கூட்டும், உயர் ரத்த அழுத்தம் தரும் பீட்சா... வேண்டாமே! #PizzaHealthEffects

பீட்சா… இன்றைய இளசுகளுக்கு மிகவும் பிடித்த ஓர் உணவு; உணர்வு என்றுகூடச் சொல்லலாம். பீட்சாவின் மீது உணர்வுரீதியான காதல் இன்றைய இளவட்டங்களுக்கு! கடந்த பத்தாண்டுகளில், நமது தேசத்தில் அசுர வளர்ச்சியடைந்த உணவு எதுவென்று கேட்டால், பீட்சாவே உயிர்ப்பெற்று தனது கையை உயர்த்தி, ‘நான்தான்’ என்று கர்வம்கொள்ளும்.

மிகப்பெரிய விளம்பரத்தோடு புதிதாக அறிமுகமாகும் உணவுக்கு அடியமையாகிவிடுவது நமது இயல்பு. அந்த உணவையே தொடர்ந்து சாப்பிடும்போது, பாதிப்புகள் ஏற்பட்டால், அதிலிருந்து விலகிவிட வேண்டியது அவசியம். அப்படி 90-களின் மத்தியில் நம்மிடையே அறிமுகமாகி, நோய்களுக்கு ஆதாரமாக இருக்கும் பீட்சாவைவிட்டு நாம் விலகிவிட்டோமா? விலகமுடியாத அளவுக்கு, பீட்சா நிறுவனங்களின் வியாபார சூழ்ச்சியால் கட்டுப்பட்டு நிற்கிறோம். குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உணவியலில் ஆதிக்கம் செலுத்திவரும் பீட்சாவின் வரலாறு, அதைச் சாப்பிடும்போது நம் உடலில் நடக்கும் கெமிஸ்ட்ரி (ரசாயன மாற்றங்கள்), அதன் வியாபாரத்தால் பெரு நிறுவனங்கள் அடையும் லாபக்கணக்கு… அலசுவோம்!

நவீன பீட்சாவின் வரலாறு:

நமக்கு திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, திருப்பதி லட்டுபோல, இத்தாலி நாட்டு மக்களுக்கு பீட்சா என்றால் அவ்வளவு ஆசை. இப்போதிருக்கும் நவீன பீட்சாவின் வடிவத்துக்கு அடிக்கல் நாட்டியவர்கள் இத்தாலி நாட்டிலிருக்கும் நேப்பிள் பகுதி மக்களே. கிட்டத்தட்ட நான்கு, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர், குறைந்த விலையில் பசியைப் போக்கும் உணவாக, ரொட்டியின் மீது தக்காளி, பூண்டு, எண்ணெய் தூவப்பட்டு நேப்பிள் பகுதி மக்களுக்கு கிடைத்த பீட்சா, விரைவில் அவர்களது பிரதான உணவானது. நாம் பணியாரம் சாப்பிடுவதைப்போல, பீட்சாவைப் பல தரப்பினரும் தேடி சாப்பிடத் தொடங்கினார்கள். அந்தப் பகுதிக்கு வருபவர்கள் ஆவலோடு சாப்பிடும் உணவானது பீட்சா. வேலைக்கு போகும்போது, கட்டுச்சோறு கட்டிக்கொண்டு போவதைப்போல பீட்சா, கட்டுச்சோறானது. இப்போது இந்தியாவிலும் அதே நிலைதான். பீட்சாபோல ரொட்டி சார்ந்த உணவுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, கிரேக்கம், எகிப்து ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. 

பல வகை பீட்சாக்கள் இருக்கின்றன. அவற்றில் ’மார்கரீட்டா பீட்சா’ என்ற வகை, பீட்சா உலகத்தில் மிகவும் பிரபலம். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நேப்பிள் பகுதியில் வலம் வந்த ராணி மார்கரீட்டாவுக்கு வழங்கப்பட்ட பாலாடைக்கட்டி, தக்காளி, துளசி சேர்ந்த பீட்சா அவருக்கு மிகவும் பிடித்துப்போக விரைவில் பிரபலமானது. ‘அரசி எவ்வழியோ மக்கள் அவ்வழி.’ ஆனாலும் பல ஆண்டுகளுக்கு இத்தாலியைத் தாண்டி, உலகம் முழுவதும் பீட்சா அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. வழக்கம்போல, நமது இரண்டாம் உலகப் போர்... அழிவுக்கு காரணியாக இருந்ததுபோல, பல்வேறு பகுதிகளுக்கு பீட்சா பரவவும் காரணியானது. பிறகென்ன அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில், பல பெயர்களில் பீட்சாக்களின் விற்பனை சக்கைபோடு போட்டது. பாரம்பர்ய உணவு கலாசாரம் அதிகம் கொண்ட நமது நாட்டில், உலகமயமாக்கலுக்குப் பிறகு மெள்ள மெள்ள எட்டிப்பார்த்த பீட்சா நிறுவனங்கள், இப்போது தலைநிமிர்த்தி நடக்கும் அளவுக்கு வியாபாரத்தின் மூலம் பன்மடங்கு லாபம் பார்த்துவிட்டன... இளைஞர்களையும் குழந்தைகளையும் பலிகடாவாக்கி! 

பீட்சா சரித்திரம் சொல்லும் பாடம் என்ன?

நவீன பீட்சாவின் மேலோட்டமான சரித்திரத்தைப் படிக்கும்போது, உங்களுக்கு என்ன புரிகிறது? நமது நாட்டு உணவுப் பாரம்பர்யத்துக்கும் பீட்சாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. எக்கச்சக்க கலோரிகளை உடனடியாகக் கொடுக்கும் பீட்சா, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதிக உடல் உழைப்பைக் கொடுத்த நேப்பிள் பகுதி மக்களுக்குத் தேவைப்பட்டது. ஆனால், உடல் உழைப்பு குறைந்த வாழ்வில் பயணித்துக்கொண்டிருக்கும் நமக்கு, பீட்சா தேவையா? சுவைக்கு அடிமைப்பட்டு அடிக்கடி பீட்சாவை சாப்பிட்டால், கூடுதல் கலோரிகள் கிடைத்து, உடல் பருமன் நோய் கட்டாயம் உருவாகும்.

அந்தக் காலத்தில் வயல்களில் உடல் உழைப்பைக் கொடுப்பவர்கள், காலையில் கேழ்வரகு, கம்மங்கூழைக் குடித்துவிட்டு, உற்சாகத்துடன் செயல்பட்டனர். இந்தக் காலத்திலோ அமர்ந்த நிலையிலே நீண்ட நேரம் மனதளவில் உழைப்பவர்கள், பீட்சாவை முக்கிய உணவாகச் சாப்பிட்டுவிட்டு, பல நோய்களுக்கு வழியமைக்கின்றனர். பீட்சா பல மணிநேரத்துக்குப் பசியை அடக்குமே? நிச்சயமாக, அடுத்த வேளைக்கான பசி உணர்வையும் சேர்த்து அடக்கி, செரிமானம் சார்ந்த நோய்களை உண்டாக்கும். பசியை அடக்குவதோடு சேர்த்து மலத்தையும் அடக்கும். மலத்தை இளக்கும் வகையிலான உணவுகளை சாப்பிடப் பழகிவிட்ட நமக்கு, மலத்தை குடலிலேயே கட்டிப்போடும் பீட்சா, நமது மரபுக்கு அந்நிய உணவுதானே!

‘பீட்சா போன்ற உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது, இடுப்பைச் சுற்றி அதிகளவில் கொழுப்புச் சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்’ என ’The American Journal of Clinical Nutrition ஆய்விதழ் பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்துவிட்டது. இடுப்புப் பகுதியில் சேரும் கொழுப்பு, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு தூண்டில் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். ஏற்கெனவே தேவையான அளவைவிட அதிகமாக உப்பைப் பயன்படுத்திவருகிறோம். பீட்சாவின் மூலம் இலவசமாகக் கிடைக்கும் உப்பு, அதிவிரைவில் உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். ‘சீஸ்’ கலந்து சுவைத்துச் சாப்பிடும்போது, கொழுப்புச்சத்தை அதிகரித்து இதயநோய்களை வரவழைக்கும். 

பெரும்பாலான இளைஞர்கள் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கொஞ்சம் புரதச்சத்து கொடுக்கும் சமச்சீரான உணவு அல்ல பீட்சா! அனைத்தையும் அளவுக்கு மீறிக் கொடுக்கும் சமச்சீரற்ற உணவு. பிரத்யேகச் சுவையூட்டிகள், விரைவாகக் கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் ரசாயனங்கள், உப்புகள், குளிர்பதனப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு சேர்க்கப்படும் அசைவத் துண்டுகள், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி வெளிவரும் பீட்சாவில் நடைபெறும் வேதியியல் மாற்றங்கள், பீட்சா தயாரிக்கத் தேவைப்படும் பிளீச் செய்யப்பட்ட மாவு வகைகள்… இவை அனைத்தும் சேர்ந்து நமது உடலுக்குள் நடத்தும் களேபரத்தை உணர நீண்ட நாள்கள் காத்திருக்கவேண்டியதில்லை. ’The Pizza effect’ விரைவில் வெளிப்படும். 

வணிக மாயம்:

உணவு சார்ந்த உலகளாவிய வணிக நிறுவனங்கள், ஒரு நாட்டில் வலுவாகக் காலூன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும். வியாபாரத்தை அதிகரிக்க அவை குறிவைப்பதோ குழந்தைகளையும் இளவட்டங்களையும்தான். அவர்களின் மனதில் இடம் கிடைத்துவிட்டால் போதும், விற்பனை படு ஜோர்! அதுவும் விளம்பரங்கள் எளிதில் அனைவரையும் சென்றடையும் வகையில் வசதிகளும் அதிகரித்துவிட்டதால், இப்போது வணிக நிறுவனங்களுக்கு வேலை எளிதாகிவிட்டது. வண்ணமயமாக, இசைக்கோர்வையுடன் ஒளிபரப்பாகும் ஒரு விளம்பரம் விரைவாக குழந்தைகளின் மனதில் பதிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைவரிடமும் தங்கள் உணவுப் பொருள் சென்று சேரவில்லை என்று நிறுவனங்கள் நினைத்தால், இருக்கவே இருக்கிறது ’ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ எனும் மந்திரம். `பெரிய சைஸ் பீட்சா வாங்கினால் குழந்தைகளுக்கான பீட்சா இலவசம்’ என்ற விளம்பரம் போதும், குடும்பத்தையே அடிமையாக்க!

எங்கும் பீட்சா எதிலும் பீட்சா:

சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்களின் உணவாக இருந்த பீட்சா, இப்போது அனைவரது இல்லங்களையும் தேடி சீறிப் பாய்கிறது, டோர் டெலிவரியாக! பார்சல் பெட்டி பொருத்தப்பட்ட பல்வேறு பீட்சா நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள், பெருநகரச் சாலைகளில் வேகமாகச் செல்வதை அடிக்கடி பார்க்கநேர்கிறது. வெகு விரைவில் சாலை வசதிகள் இல்லாத கிராம மக்களிடமும் பீட்சாவைக் கிடைக்கச் செய்வதே அவர்களின் இலக்கு. ‘பார்சல் பீட்சாவின் அட்டைப்பெட்டியில் உள்ள ரசாயனங்கள், பீட்சா துண்டோடு ஒட்டிக்கொண்டு நமக்குள் செல்லும்போது பாதிப்புகள் ஏற்படும்…’ இதைச் சொன்னது அமெரிக்காவின் ஃபுட் அண்டு டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் (FDA - Food and Drug Administraion) அமைப்பு. ஒவ்வொரு பகுதிக்கும் பிரத்யேகமாக இருக்கும் உணவை மக்களின் மனதிலிருந்து அழித்துவிட்டு, பீட்சாவை இடம்பெறச்செய்து, தங்கள் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன பெரு நிறுவனங்கள். 

‘தானியப் பஞ்சம் உண்டாகும் என்பதால் இத்தாலி மக்கள் அதிகளவில் பீட்சா சாப்பிட வேண்டாம்’ என்று இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் முசோலினி கேட்டுக்கொண்டதாக வரலாற்று செய்தி உண்டு. ‘ஆரோக்கியப் பஞ்சம் உண்டாகும் என்பதால், இந்திய மக்கள் அதிகளவில் பீட்சா சாப்பிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொள்ளவேண்டிய கட்டாயச் சூழல் இன்று! பீட்சாவே வெளியேறு!