Published:Updated:

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 5

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 5

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 5

வைட்டமின் கே

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் கே-வும் ஒன்று. ரத்த உறைதலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து, வைட்டமின் கே. வெளிநாடுகளில், வைட்டமின் கே  குறைபாட்டால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில், நம்  உணவுப்பழக்கம் காரணமாக வைட்டமின் கே தேவையான அளவு கிடைத்துவிடுகிறது. தற்போது, வெளிநாட்டு நுகர்வுக் கலாசாரம் காரணமாக உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்தியர்களுக்கும் வைட்டமின் கே பற்றாக்குறையை அதிக அளவில் ஏற்படுத்திவருகிறது. வைட்டமின் கே இயற்கையாகவே தாவரங்கள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கிறது. இதை, வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 என இரு வகைப்படுத்தலாம்.

தாவரங்களில் இருந்து கிடைக்கும்  பைலோகுயினோன் (Phylloquinone) ‘வைட்டமின் கே 1’ என்றும், விலங்கினங்களில் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கும்  மெனாகுயினோன் (Menaquinone) ‘வைட்டமின் கே 2’ என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

நமது வயிற்றில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன. இவை, மெனாகுயினோன் எனும் வைட்டமின் கே 2-வை உற்பத்தி செய்கின்றன.  வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 இரண்டுமே  மனிதர்களுக்கு அவசியம் தேவையான வைட்டமின்களே.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 5

என்ன செய்கிறது வைட்டமின் கே?

உடலில்  உள்ள  கால்சியம் மற்றும் புரதம் ஆகியவற்றை எலும்புகள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள  உதவுகிறது.

பெண்களுக்கு மெனோபாஸ் நிலையில் எலும்பு அடர்த்தி குறைந்து, எலும்பு பலவீனமடையத் தொடங்கும். வைட்டமின் கே ஆஸ்டியோபொரோசிஸ் வருவதைத் தடுக்கிறது.

வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டாலும் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும். தேவையான நேரத்தில் ரத்தத்தை உறையவைப்பதற்கும் வைட்டமின் கே-தான் உதவுகிறது. ரத்தம், உடலின் தேவைக்கு ஏற்ப பாய்வதற்கு உதவுகிறது.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 5

எவ்வளவு தேவை?

இந்தியர்களுக்கு  ஒரு நாளைக்கு 55 மைக்ரோ கிராம் வைட்டமின் கே தேவை.

வைட்டமின் கே அதிகமானால்... 

தாவரத்தில் இருந்து கிடைக்கும் வைட்டமின் கே 1 அதிகமானால், நஞ்சாகிவிடும். இதனால், ஹைப்பர்பிலிரூபினிமியா (Hyperbilirubinemia) எனும் பிரச்னை ஏற்பட்டு தீவிர மஞ்சள் காமாலை நோய் வரலாம்.

- பு.விவேக் ஆனந்த்

பெயர் வந்த கதை

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 5

1929-ம் ஆண்டில் டேனிஷ் (டென்மார்க்) விஞ்ஞானி ‘ஹென்ரிக் டேம்’ கொலஸ்ட்ராலின் செயல்திறன் பற்றி ஆய்வு மேற்கொண்டார். இதற்காக, கோழிகளுக்குக் கொழுப்பு நீக்கப்பட்ட உணவை அளித்துவந்தார். சில நாட்களில் அந்தக் கோழிகளுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. ஏன் இந்த பாதிப்பு ஏற்பட்டது என ஆய்வு செய்தபோது, ரத்தத்தை உறையவைக்கும் பொருள் ஒன்று உணவில் இருப்பதைக் கண்டுபிடித்தார். ரத்தம் உறைவதற்கு ஆங்கிலத்தில் காக்குலேட்டட் (Coagulated) என்றொரு பெயர் உள்ளது. அதனால், இதை ‘காக்குலேஷன் வைட்டமின்’ (Coagulation vitamin) என அழைத்தார். காக்குலேஷன் வைட்டமின் என்பதை ‘வைட்டமின் சி’ என தவறாக நினைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதால், இதற்கு, ‘வைட்டமின் கே’ எனப் பெயரிடப்பட்டது. வைட்டமின் கே வடிவம் பற்றிய மேலும் சில தகவல்களை ‘எட்வேர்ட் அடல்பெர்ட் டாய்ஸி’ கண்டுபிடிக்க, இந்த இரு விஞ்ஞானிகளுக்கும் வைட்டமின் கே  1, கே 2 - வை கண்டுபிடித்ததற்காக 1943-ம் ஆண்டில் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.