Published:Updated:

மறுவாழ்வு அளிக்கும் ஸ்டெம் செல்

மறுவாழ்வு அளிக்கும் ஸ்டெம் செல்

மறுவாழ்வு அளிக்கும் ஸ்டெம் செல்

“என் குழ‌ந்தையின் முதல் தொடுத‌ல் என‌க்குள் ஏற்ப‌டுத்திய‌ அந்த‌ அழ‌கான உண‌ர்ச்சியை திரும்ப‌வும் நான் உண‌ர்ந்த‌ நிமிடம், என்னுடைய சின்ன‌ உதவியால்‌ ஒரு குழ‌ந்தை உயிர் பிழைச்ச‌துனு தெரிஞ்ச‌ அந்த‌ தருண‌ம்தான்...” நெகிழ்ச்சியாகிறார் ச‌ர‌ண்யா. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  10 வ‌யதுக் குழந்தையின் வாழ்க்கைக்குப் புத்துயிர் அளித்திருப்ப‌வை இவ‌ருடைய ரத்த ஸ்டெம் செல்க‌ள்தான்.

“ம‌ருத்துவ‌ உல‌குக்கு இன்றும் ச‌வாலாக இருக்கும் விஷ‌ய‌ங்க‌ளில் ஒன்று, த‌லாசீமியா (ம‌ர‌பு நோய்) என்கிற ர‌த்த நோய். ர‌த்த‌ம் தொட‌ர்பான‌ பிர‌ச்னைக‌ளுக்கு சிகிச்சைக‌ள் இன்றும் சிக்க‌லாக‌த்தான் இருக்கின்றன. ஆனால், நாம் அனைவரும் ஒரு படி முன்வைத்தால் நிச்ச‌யம் அதுவும் சாத்தியம்’’என்கிறார் ‘தாத்திரி’தன்னார்வ அமைப்பின் இயக்குநர் ரகு ராஜகோபால்.

“ரத்த ஸ்டெம் செல் என்பது என்ன?”

“நம் உடலில் எலும்பு மஜ்ஜையில் இருக்கும் ரத்தக் குருத்தணுக்களைத்தான் நாம் ‘ரத்த ஸ்டெம் செல்ஸ்’ என்கிறோம். ர‌த்த‌ வெள்ளைய‌ணுக்கள் ம‌ற்றும் சிவப்ப‌ணுக்க‌ள் என‌ எல்லாவ‌ற்றுக்கும் தாய் இந்த‌ ஸ்டெம் செல்தான். இதுதான் பின்பு வெவ்வேறு அணுக்களாகப் பிரிந்து, உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் சென்று அடையும். அங்கு அது அந்த உறுப்பின் செல்லாக முதிர்ச்சி அடையும்.”

மறுவாழ்வு அளிக்கும் ஸ்டெம் செல்

“ரத்த ஸ்டெம் செல் டிரான்ஸ் பிளான்டேஷ‌ன் யாருக்குத் தேவை?”

“ரத்தம் தொட‌ர்பான‌  நோய் உள்ளவர்களுக்கு ர‌த்த‌ அணுக்க‌ள் ச‌ரியான‌ விகித‌த்தில் பிரிவ‌து இல்லை. உதாரணத்துக்கு, ர‌த்த‌தில் வெள்ளை அணுக்கள் மட்டும் அதிகமாக இருப்ப‌தால்தான் ‘லுக்கிமியா’ எனும் ர‌த்த‌ப் புற்றுநோய் ஏற்ப‌டுகிற‌து. இவர்களுக்கு வேறு நபரின் ரத்த ஸ்டெம் செல்களை ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து, நோயாளிக்குச் செலுத்தி நோயைக் குண‌ப்ப‌டுத்த‌ முடியும்.”

“யாரும், யாருக்கும் கொடுக்கலாமா அல்லது ஏதேனும் பொருத்தம் அவசியமா?”

“ர‌த்த‌ தான‌த்தில் ‘ஏ பாசிட்டிவ்’ ரத்தப் பிரிவை சேர்ந்தவர் ஒருவருக்கு ரத்தம் தேவை என்றால், அதே பிரிவைச் சேர்ந்த வேறு நபரிடம் இருந்து அதைப் பெற்று அவருக்குச் செலுத்திவிடலாம். ஆனால், ரத்த ஸ்டெம் செல்களைப் பொறுத்தவரையில், ஒரு ரத்தப் புற்றுநோயாளிக்குத் தேவை எனப்படும்போது, அவரின் மரபணுக்களில் உள்ள எச்.எல்.ஏ (Human Leukocyte Antigen) பொருந்த வேண்டும். இது, எளிதில் சாத்தியப்படும் விஷயம் கிடையாது. ஏனெனில், நம் நாட்டில் பலவ‌கை‌யான‌ இனக் குழுக்கள் உள்ளதால், பல விதமான ம‌ரபணுக்களும் இருக்கின்ற‌ன‌. இந்த‌ எச்.எல்.ஏ பொருந்தினால் ம‌ட்டும்தான் ரத்த ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளேன்டேஷன் செய்ய‌ முடியும்.”

“பாதிக்கப்பட்ட நபருக்குப் பொருத்தமான நபர் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்?”

  “ரத்த ஸ்டெம் செல் தானம் செய்ய‌ வ‌ருப‌வ‌ர்க‌ளிட‌ம் வாயின் உள்பகுதியிலிருந்து செல் எடுத்து, ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, அவர்களின் மரபணு பரிசோதனை செய்யப்படும். இதற்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவது இல்லை.

ரத்த ஸ்டெம் செல் தேவைப்ப‌டுபவ‌ர்க‌ளின் மரபணு மாதிரியைப் பரிசோதனை செய்து, எங்களிடம் இருக்கும் மாதிரியுடன் ஒத்துப்போகிறதா என  இதற்கான பிரத்யேக மென்பொருளைப் பயன்படுத்திக் கண்டறிவோம். பிறகு, ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்ய முன்வருபவர்களுக்குப் பலதரப்பட்ட சோதனைகளைச் செய்த பின், ஸ்டெம் செல் தானம் பெறப்படும்”

மறுவாழ்வு அளிக்கும் ஸ்டெம் செல்

“ரத்த ஸ்டெம் செல் ட்ரான்ஸ்ப்ளான்ட் சிகிச்சையின் செய‌ல்முறை எப்ப‌டி?”

“ஒருவ‌ர் தானம் செய்யத் தகுதியானவர் என முடிவான பின், அவருக்குப் பிரத்யேக ஊசி மருந்தை ஐந்து நாட்களுக்கு அளிப்போம். இதனால், முதுகெலும்பு மஜ்ஜையில் ரத்த ஸ்டெம் செல்கள் அதிக‌ அள‌வில் உற்ப‌த்தியாகி, ரத்தத்தில் கலக்கும். அதன் பின், சிறப்புக் கருவியைப் பயன்படுத்தி, ரத்தம் சேக‌ரிக்க‌ப்பட்டு ரத்தத்திலிருந்து ஸ்டெம் செல்கள் ம‌ட்டும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டு, பின்பு மீண்டும் ரத்தம் உடலுக்குள் செலுத்தப்படும். மூன்று மணி நேரம் நடக்கும் இந்த செயல்முறையில் பெரிய அளவில் வலி ஏதும் கிடையாது.

இதுவரை, 129 ட்ரான்ஸ்ப்ளான்டேஷ‌ன்களை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் 90 சதவிகித ட்ரான்ஸ்ப்ளான்ட்கள் வெற்றிபெற்று உள்ளன. குறிப்பாக‌, இந்த சிகிச்சை அதிக‌ம் தேவைப்ப‌டுவ‌து பிஞ்சுக்  குழ‌ந்தைக‌ளுக்குத்தான். ஒரு கால‌த்தில், முதுகுத்தண்டைத் துளைத்துச் செய்ய‌ப்ப‌ட்ட‌ இந்த‌  சிகிச்சை,  தற்போது மிக  எளிமையான‌தாக‌ மாறிவிட்ட‌து. 18 வயதுக்கு மேற்பட்ட  ஆரோக்கிய‌மான‌ அனைவ‌ரும்  ஸ்டெம் செல் தான‌ம் செய்ய‌லாம். எங்க‌ளுடைய‌ விழிப்புஉண‌ர்வு நிக‌ழ்ச்சிக‌ளின் ப‌லனாக,‌ இதுவ‌ரை 1,06,000 பேர் ஸ்டெம் செல் தான‌ம் செய்ய‌ ப‌திந்துள்ள‌ன‌ர். தீர்வு கையிலிருந்தும் அது இன்னும் தேவையான‌வ‌ர்க‌ளை சென்று அடையாம‌ல்தான் இருக்கிற‌து.”

இற‌ந்த‌ பின் க‌ண்தான‌ம் செய்து ஒருவ‌ருடைய‌ வ‌ழிக்கு ஒளி காட்டுவதுபோல‌‌்‌, ஸ்டெம் செல் தான‌த்தின் மூலம் வாழும்போதே பிற‌ருடைய‌ வாழ்க்கைக்கே வ‌ழியாக‌லாமே!

- பி.நிர்ம‌ல்,

படங்கள்: ச.பிராசந்த்