Published:Updated:

நலமுடன் வாழ...

நலமுடன் வாழ...

ரோக்கியமாக இருக்க நாம் எல்லோரும் விரும்புகிறோம். வேலைப் பளு, நேரமின்மை போன்ற காரணங்கள் நம் எண்ணத்தை ஆக்கரமித்து, ஆரோக்கியத்துக்தைப் பாதிக்கின்றன. ஒருநாளை திட்டமிட்டு ஆரோக்கியமுடன் வாழ முயற்சிசெய்வோம். பின், அதுவே நம்மை ஈர்த்து, தினமும் அப்படி வாழத் தூண்டும். நலமுடன் வாழத் திட்டமிடுவது மிகவும் அவசியம்.

நலமுடன் வாழ...

காலையில் கண்விழித்தல்

காலை 5 - 6 மணிக்குள் எழுவது, மனதை உற்சாகப்படுத்துவதுடன் உடலையும் லேசாக்கும். காலையில் எழுந்து பார்க், கடற்கரை போகவில்லை என்றாலும் பரவாயில்லை. மொட்டைமாடிக்குச் சென்று, இளங்காற்றில் உங்கள் உடல் மற்றும் மனதை நனைத்திடுங்கள். சூரியனுக்கு வணக்கம் சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கும். அன்றைய தினத்தைப் புத்துணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் தொடங்க வழி பிறக்கும்.

தினமும் இதயத்தைக் கவனி

இதயத்தைத் தினமும் கவனிக்க எளிமையான வழி, அரை மணி நேரம் நடப்பது, சிவப்பு உணவுகளைச் சாப்பிடுவதுதான். இதற்குத் தினமும் காலையில் வாக்கிங் செல்லலாம். அருகில் உள்ள கடைக்கு வண்டியில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, நடந்து செல்லலாம். தக்காளி, மாதுளை, பீட்ரூட், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற சிவப்பு உணவுகளைச் சாப்பிடலாம்.

தியானம்

தியானம் செய்ய கிளாஸுக்குக்கூட போக வேண்டாம். காலையில் எழுந்து கண் மூடி, ஒரு போர்வையின் மேல் சப்பளங்கால் இட்டு மூச்சைக் கவனியுங்கள். இதுவே தியானம். மொட்டைமாடி, வீட்டில் உள்ள அறை, பார்க், பீச் என அவரவர் சௌகர்யத்துக்கு இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். தியானம் உங்களது நாளை முழுமைப்படுத்தும்.

இசை

இசைக்கென 20 நிமிடங்கள் ஒதுங்கிவிடுங்கள். தினமும் இசை கேளுங்கள். பிடித்த பாடல்களைக் கண் மூடி ரசியுங்கள். மனதை லேசாக்கும் இசை. உங்களுக்கான ஒய்வையும் கொடுக்கும். தொடர்ந்து கேட்டால், நாட்பட்ட நோய்கள்கூட குணமாகும் என மியூசிக் தெரப்பி வல்லுநர்கள் அறிவிக்கின்றனர்.

முழு தானியங்கள், பயறு வகைகள்

எப்போதும் வெள்ளை உணவுகளே உண்பது சரியானது இல்லை. இட்லி, தோசை, பொங்கல், சாதம் என அனைத்தும் வெள்ளை உணவுகளே. வாரத்தில் மூன்று நாட்களுக்கு கறுப்பு, பிரவுன், சிவப்பு போன்ற நிறங்கள் உள்ள உணவுகளுக்கு உங்கள் தட்டில் இடம் கொடுங்கள். இவை, உங்களது உடலில் ஆரோக்கியத்திற்கான மாற்றத்தைத் தரும்.

காய்கறிகள்

அரிசி சாதத்தைவிட காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதே சரியான முறை. திங்கள் பச்சை, செவ்வாய் மஞ்சள், புதன் சிவப்பு, வியாழன் ஆரஞ்சு, வெள்ளி பர்பிள், சனி வெள்ளை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறக் காய்கறிகள் சாப்பிடத் தொடங்குங்கள். இவ்வாறு உணவுப் பட்டியலைப் பின்பற்றினால், குழந்தைகளையும் நல்ல உணவுப் பழக்கத்துக்குள் ஈடுபடுத்த முடியும்.

தண்ணீர்

ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்கப் பிடிக்காமல் இருக்கலாம். அதற்கு மாற்றாக 250 மி.லி இளநீர், 125 மி.லி கிரீன் டீ, 125 மி.லி பழச்சாறாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். மீதம் இருக்கும் ஒன்றரை லிட்டர் நீரைக் குடிப்பது எளிமையாகிவிடும். மோர், நீராகாரம் என நீர்த்த வடிவில் இருக்கும் இயற்கையான திரவ உணவுகள் அனைத்துமே உடலுக்கு நல்லவை.

வால்நட், பாதாம்

டி.வி, புக்ஸ் படிக்கும்போது சிப்ஸ், பிஸ்கட்தான் சாப்பிட வேண்டுமா என்ன? வால்நட், பாதாம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, பிளாக்ஸ் விதைகள் என உங்களின் நொறுக்குத் தீனிப் பழக்கத்தை மாற்றி அமைக்கலாம். இதனால், சருமம் அழகாகும், ரத்தசோகை தீரும், எதிர்ப்பு சக்தி அதிகரித்து உங்களைப் பலமானவராக மாற்றும்.

பழங்கள்

பழங்களைச் சாப்பிட்டு, இரவு உணவை எளிமையாகிவிடும். சமைக்கவே வேண்டாம் நேரமும் மிச்சம். வெறும் பாலும் பழங்களும் போதும், அன்றைய உணவு சுவையானதாக மாறிவிடும். இரவு 7 - 8 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதற்கான சிறந்த உணவாக, பாலும் பழங்களும் இருக்கும். ஒரு கிளாஸ் பால் மற்றும் ஒரு கப் பழங்கள் அன்றைய இரவை லேசாக்கிவிடும். மறுநாள் காலை பிரச்னையாக இருக்கும் மலச்சிக்கலை விரட்டியடிக்கும்.

- ப்ரீத்தி, படம்: சி.தினேஷ்குமார்