Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

ஜி.பிரேமா, சென்னை.

“நான் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறேன். என் முகத்தில் ரோமங்கள் அதிகமாக இருக்கின்றன. இதனால், என்னுடன் வேலை செய்பவர்கள் என்னைக் கேலி செய்கின்றனர். முகத்தில் இப்படி அதிக ரோமங்கள் வளர என்ன காரணம்? முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற வழிகள் உண்டா?”

டாக்டர் இரா.மனோன்மணி,தோல் மருத்துவ நிபுணர், திருச்செங்கோடு.

கன்சல்ட்டிங் ரூம்

“பெண்களுக்கான முக அழகைக் கெடுப்பதில் தேவையற்று வளரும் இந்த ரோமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெண்களுக்கு, ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் கோளாறுகளால், இவ்வாறு தேவையற்ற முடிகள் முகத்தில் வளர்கின்றன. இதற்குத் தீர்வு உண்டு. டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் டெஸ்ட் செய்து லேசர் ட்ரீட்மென்ட் மூலம் இந்த முடிகளை நீக்கலாம்.

இப்போது, கடைகளில் கிடைக்கும் ஹேர் ரிமூவிங் க்ரீம்கள், லோஷன் போன்றவற்றால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். பெண்களுக்கு, ஆண்களைப்போல முகத்தில் மீசை இருந்து மஞ்சள் தடவியும் பலன் இல்லை எனில், ஒவ்வொரு முடியாக த்ரெடிங் செய்துகொள்ளலாம். ப்ளீச் செய்வதால் ரோமத்தின் நிறத்தைத் தோலின் நிறத்துக்குக்கொண்டு வரலாம். இதனால், முகத்தைப் பார்த்ததும் முடிகள் இருப்பது பளிச்சென தெரியாது. ஆனால், ப்ளீச் செய்வதன் மூலம் முடிகள் உதிராது.

உதட்டின் மேல்பகுதியிலும், தாடைப்பகுதியிலும் இருக்கும் முடிகளை நீக்க, வாக்சிங் செய்வது நல்லது அல்ல. க்ரீம்கள் சருமத்தின் அடிப்பகுதி வரை பரவுவதால், சரும நிறம் காலப்போக்கில் மாறி சுருக்கங்கள் விழலாம்.

கன்சல்ட்டிங் ரூம்

இயற்கைமுறையில் தீர்வு வேண்டும் என்றால், ஹார்மோன் குறைபாட்டைச் சரிசெய்வதுடன், கஸ்தூரி மஞ்சளோடு பாலாடை கலந்து முகத்தில் தடவிவர, தேவையற்ற முடிகள் மெள்ள மெள்ள குறையும். மஞ்சளுடன் பப்பாளிக்காயையும் கலந்து பயன்படுத்தலாம். இதனால், முடிகள் மறைவதோடு முகமும் பொலிவு பெறும். பசும்பாலுடன் பாசிப்பயறு தோலையும், எலுமிச்சைச் சாற்றையும் கலந்து முகத்தில் தடவிவர, நல்ல பலன் உண்டு. மேலும், முட்டையின் வெள்ளைப் பகுதியுடன் சர்க்கரை, சோள மாவைக் கலந்து பசைபோல் ஆனதும், முகத்தில் தடவி, காய்ந்தவுடன் அதனை நீக்கினால் முடிகள் நீங்கும்.”

சரவணன், திருச்சி.

“நான் மளிகைக் கடை வைத்திருக்கிறேன். நீண்ட நேரம் நின்றபடி வேலை செய்கிறேன். அதனால், அடிக்கடி குதி்காலில் வலி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?”

டாக்டர் ஜி.சீனிவாசன்,ஆயுர்வேத மருத்துவர், திருப்பத்தூர்.

கன்சல்ட்டிங் ரூம்

“நம் உடல் எடையைத் தாங்கும் முக்கிய மூன்று எலும்புகளில் ஒன்று, பின் பாதத்தில் அமைந்துள்ளது. சிலர் வேலை காரணமாக தொடர்ந்து நீண்ட நேரம் நிற்கவேண்டியோ அல்லது நடக்கவேண்டியோ இருக்கிறது. இதனால், இந்த எலும்பில் ஏற்படும் பளு காரணமாக வலி ஏற்படுகிறது.

குதி்கால் எலும்பு அதிக எடையைத் தாங்க நேரும்போது, மூட்டுகளைச் சுற்றி இருக்கும் சவ்வு அதிக வேலையைச் செய்ய நேரிடுவதாலும் பாத வலி வரலாம். நேரம் கிடைக்கும்போது அமர்ந்தோம் என்றால், வலியைக் குறைக்கலாம். சிலர், ‘எங்களுக்கு உட்கார வாய்ப்பு கிடைக்காது’ என பதில் சொல்வார்கள். அவர்கள் அணியும் செருப்பை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றலாம். மேலும்,

‘எம்.சி.ஆர்’ எனப்படும் மைக்ரோ செல்லுலார் ரப்பரால் செய்யப்பட்ட காலணிகளை அணிவதன் மூலமும் இந்தப் பிரச்னையை ஓரளவுக்குத் தவிர்க்கலாம்.

கன்சல்ட்டிங் ரூம்

நீண்ட நேரம் நின்றபடி வேலை செய்பவர்கள், தினமும் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும், மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால், குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும். ஒரு பெரிய பாத்திரத்தில், தாங்கும் பதத்தில் வெந்நீர் விட்டு, பாதங்களை 10 நிமிடங்கள்  வரை வைத்திருக்க வேண்டும். இதே போன்று காலை, மாலை இரு வேளைகளும் செய்துவந்தால், குதிகால் வலி குணமாகும். ஒத்தடம் கொடுப்பதற்கு என, கடைகளில் தேன் மெழுகு கிடைக்கும். இந்த மெழுகை சிறிது நேரம் காய்ச்சி, ஒரு துணியை அதில் நனைத்தால், மெழுகு அதில் ஒட்டிக்கொள்ளும். அதை அப்படியே எடுத்து, குதிகாலில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

கால்களை நீட்டி, கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு, அவற்றை விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்ற பயிற்சிகளைச் செய்வதன் மூலமும் குதிகால் வலியைத் தவிர்க்கலாம்.”

ங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம்,டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002. doctor@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.