Published:Updated:

அந்தப்புரம் - 22

அந்தப்புரம் - 22

அந்தப்புரம் - 22

அந்தப்புரம் - 22

Published:Updated:
அந்தப்புரம் - 22

ஷீலாவின் க்ளினிக்... கர்ப்பம் உறுதியான சந்தோஷத்தில் அனிதாவும் அஸ்வினும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போய் இருந்தனர். இருவர் கண்களிலும் பரவசம். ஆனந்தக் கண்ணீர்.  ‘இந்த முதல் மூன்று மாதங்கள் மிக முக்கியம். ஜாக்கிரதையாக இருக்கணும் அனிதா. கவனமாப் பார்த்துக்கோங்க அஸ்வின்’ என்று இருவரிடமும் ஷீலா சொல்லியிருந்ததால், சற்று பயமும் வந்தது. இருவரும் க்ளினிக்கை விட்டு வெளியே வந்து அமைதியாக காரில் ஏறினர். கார் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

இருவருக்கும் மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனிதாவின் மனது, இந்த கர்ப்ப காலத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்கிற யோசனையில் மூழ்கியது. ‘இதுவரைக்கும் நாம் தனி ஆள். இப்போ, வயித்துக்்குள்ள ஒரு ஜீவன் வந்தாச்சு. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இப்பவே டயர்டா இருக்கு. போகப்போக என்னல்லாம் ஆகுமோ தெரியலை... நம்மால இனி வேலைக்குப் போக முடியுமா?’  - இப்படி ஏதேதோ எண்ணங்கள்.

அஸ்வினின் மனமோ ‘நார்மல் டெலிவரிக்கு என்ன செய்ய வேண்டும். டெலிவரிக்கு எந்த ஹாஸ்பிட்டல்ல சேர்க்கலாம்... அனிதா கர்ப்பமா இருக்கும்போது செக்ஸ் வெச்சுக்க முடியாது. கொஞ்சம் கட்டுப்பாடா இருக்கணும்’ என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தது.
அனிதாவுக்கும் அஸ்வினுக்கும் மட்டும் இதுபோன்ற சந்தேகங்கள் ஏற்படுவது இல்லை. கர்ப்பம்தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும் இதுபோல ஆயிரம் சந்தேகங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அறிவியல்பூர்வமாக, மருத்துவம் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால், பல வீண் சந்தேகங்களைத் தவிர்த்துவிடலாம்.

அந்தப்புரம் - 22

ஏன்... எதற்கு... எப்படி?

கருத்தரித்த ஐந்தாவது நாளில் கரு கர்ப்பப்பையை அடைகிறது. அங்கு எண்டோமெட்ரியத்தில் அது தங்குகிறது. பெண் கருத்தரித்ததும், நஞ்சுக்கொடி (பிளசன்டா) என்ற சிறப்பான அமைப்பு உருவாகிறது. கரு, எண்டோமெட்ரியத்தில் தங்கிய பிறகும் செல்களின் பெருக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 14-வது நாளில் அது 1 முதல் 2 மி.மீ் அளவுக்கு வளர்ந்திருக்கும். இந்த செல்களின் தொகுப்புக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் எண்டோமெட்ரியத்தில் இருந்து நஞ்சுக்கொடி மூலமாகத்தான் செல்கின்றன. எண்டோமெட்ரியத்தில் இருந்து தேவையான ரத்தம், ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை நஞ்சுக்கொடி எடுத்து, தொப்புள்கொடி வழியாக ‘எம்ரியோ’ என அழைக்கப்படும், அந்தக் கரு செல்களின் தொகுப்புக்குக் கொடுக்கிறது. தொப்புள்கொடி என்பது, கயிறு போன்ற அமைப்பு. இதன் வழியாக ரத்தம், ஊட்டச்சத்து உள்ளே கொண்டுசெல்லப்படுகின்றன. அது மட்டும் அல்ல, குழந்தையின் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களும் இதன் வழியாகத்தான் தாயின் உடலுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

இதனால்தான், கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துகள், உணவுப் பொருட்கள் எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

கர்ப்பம் தரித்த காலத்தில் இருந்து, முதல் மூன்று மாதங்களுக்கு வயிற்றில் வளரும் சிசுவுக்கு ‘எம்ரியோ’ என்று பெயர். இந்த மூன்று மாதங்கள்தான் குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் முக்கியமான காலகட்டம். இதயம், மூளை போன்ற மிக முக்கியமான உறுப்புகள் இந்தக் காலக்கட்டத்தில்தான் உருவாகின்றன. அதனால்தான்,  ‘காயங்கள், எக்ஸ்ரே கதிர், ரசாயனப் பாதிப்புகள் போன்றவை ஏதும் தாய்க்கு ஏற்படக் கூடாது’ என்று சொல்கிறோம். தாய்க்கு ஏற்படும் பாதிப்பு, சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் பாதிக்கும். ஒருவேளை, கரு கலையவும் வாய்ப்பு உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில்தான் தாய்க்கு குமட்டல் போன்ற ‘மார்னிங் சிக்னஸ்’ ஏற்படும். மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கும். அதனால் மார்பு கனமானது போன்ற உணர்வு ஏற்படும்.

- ரகசியம் பகிர்வோம்

டவுட் கார்னர்

“ ‘கர்ப்பம் அடைந்தால் ‘மார்னிங் சிக்னஸ்’ வரும்’ என்கிறார்கள். அப்படி என்றால் என்ன டாக்டர்?”

ஒரு வாசகி, வேலூர்.

“முதல் டிரைமெஸ்டர் எனச் சொல்லப்படும் கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு பொதுவாக குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.  சிலருக்கு சில வகையான உணவைப் பார்த்தாலே வாந்தி எடுக்க வேண்டும் என்பதுபோலத் தோன்றும். இந்தப் பிரச்னை பொதுவாக கர்ப்பிணிகளுக்கு காலை நேரத்தில் தெரியும். காலையில், மிகவும் நோயால் பாதிக்கப்பட்டதுபோல உணர்வார்கள். இதையே ‘மார்னிங் சிக்னஸ்’ என்கிறோம். இது மூன்று மாதங்களுக்குப் பிறகு சரியாகிவிடும். சில பெண்களுக்கு இந்தப் பிரச்னை பிரசவம் வரைகூட நீடிப்பது உண்டு.”

“என் மனைவி தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அவள் கர்ப்பமாகியிருக்கிறாள். அதனால், அவளை வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறினேன். ‘அதெல்லாம் பிரச்னை இல்லை. நான் வேலைக்குச் செல்கிறேன்’ என்கிறாள். என் மனைவி வேலைக்குச் செல்வது சரியா? அவர் போகலாம் என்றால், எந்த மாதம் வரை வேலைக்குச் செல்லலாம்?”

எம்.சிவராமன், மதுரை.

“தாராளமாக உங்கள் மனைவி வேலைக்குச் செல்லலாம். ரத்தக்கசிவு, அதீத சோர்வு போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை எனில், வேலைக்குச் செல்வதில் பிரச்னை இல்லை. காலில் வீக்கம் ஏற்படுவது, சுவாசிப்பதில் சிரமம், உயர் ரத்த அழுத்தம், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து ஓய்வு எடுக்கலாம். மற்றவர்கள் பிரசவம் ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்னர் வரை அலுவலகம் செல்வதில் பிரச்னை இல்லை. வாகனங்களில் செல்பவர்கள், மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் குலுங்கிச் செல்லாதவாறு கவனமாகப் பயணிக்க வேண்டும். இதன் மூலம், பிரசவகால விடுப்பை மிச்சம்செய்து, பிரசவத்துக்குப் பிறகு நீண்ட நாள் குழந்தையை கவனித்துக்கொள்ள விடுப்பு எடுத்துக்கொள்ள முடியும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism