Published:Updated:

சத்துணவில் பள்ளிக் குழந்தைகளுக்குப் பால்! மதியம் சாப்பிடுவது சரிதானா? #MilkBenefits

சத்துணவில் பள்ளிக் குழந்தைகளுக்குப் பால்! மதியம் சாப்பிடுவது சரிதானா? #MilkBenefits
சத்துணவில் பள்ளிக் குழந்தைகளுக்குப் பால்! மதியம் சாப்பிடுவது சரிதானா? #MilkBenefits

பால்... எல்லா வயதினரும் சாப்பிட ஏற்ற ஊட்டச்சத்துள்ள ஓர் உணவு. டீ, காபி, தயிர், மோர், நெய்... என நம் அன்றாட உணவில் இரண்டறக் கலந்துவிட்ட பால் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ‘பால் மற்றும் பால் பொருள்களைச் சேர்த்துக்கொள்ளலாமா?’ என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், நம்மால் அவற்றைத் தவிர்க்க முடிவதில்லை. அன்றாட உணவில் பாலுக்கு முக்கியமான இடம் உண்டு. இதன் காரணமாகவே, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் பாலையும் சேர்க்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய வேளாண் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியிருக்கிறது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்காக இந்த நடவடிக்கை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

பால் ஊட்டச்சத்துள்ள உணவுதான். இருந்தாலும், அதை எப்போது அருந்தலாம், மதிய உணவுக்குப் பின்னர் சாப்பிடுவதால் ஏதாவது பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா, குழந்தைகளுக்குப் பால் உணவு எந்தளவுக்கு நன்மை தரும் போன்ற கேள்விகளை மூத்த உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் முன்வைத்தோம்..

`` `பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவில் பால் சேர்க்க வேண்டும்’ என்கிற மத்திய அரசின் பரிந்துரை உண்மையில் நல்ல திட்டம்தான். இன்றைய குழந்தைகளிடம் உடல் பருமனுக்கு இணையாக ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துவருகிறது. பால் பற்றிய பல சர்ச்சைகள் இருந்தாலும், அதை முதன்மை உணவாக அல்லாமல் இணை அல்லது துணை உணவாக உட்கொள்ளலாம். அந்த வகையில் பால், மனிதர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

ஆட்டுப் பால், பசும் பால், ஒட்டகப்பால்... என மனிதன் அருந்தும் பால்களின் பட்டியல் கொஞ்சம் நீளம்தான். அதே நேரத்தில் இதில் எத்தனை வகைகள் இருந்தாலும், ‘தாய்ப்பாலுக்கு அடுத்து பசும்பால்தான் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாகும்’ என்கிறது மருத்துவம்.

எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிக முக்கியமானது. வயது அதிகரிக்கும்போது, கால்சியம் குறைய ஆரம்பிக்கும். அப்படி, எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் கிடைக்காமல் போனால், 30 வயதுக்குமேல் `ஆஸ்டியோபோரோசிஸ்’ போன்ற எலும்பு தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பாலில் கால்சியம் நிறைவாக இருக்கிறது.

முக்கியமாக பால், வளரும் குழந்தைகள், சிறுவர்களின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் அடைவதைத் தடுக்கும். குழந்­தையின் பற்களை வலிமை­யாக்­கு­ம். இதிலுள்ள கால்­சியம் உள்ளிட்ட சத்­துகள் குழந்­தை­களின் தசைகள் மற்றும் உடல் இயக்கத்தை மேம்படுத்தும். வயதான பிறகு, உயர் ரத்த அழுத்தம், மார­டைப்பு போன்ற ஆபத்­து­கள் ஏற்படாமல் தடுக்க உதவும். குழந்­தைகளுக்கு வளரும் வயதில் புரோட்டீன் சத்து அவ­சியம். பாலில் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. அதோடு, குழந்தையை நாள் முழு­வதும் உற்­சா­க­மாக வைத்துக்கொள்­வ­தற்குத் தேவையான கார்­போ­ஹைட்­ரேட்டும் இதில் உள்­ளது.

பாலில் இருக்கும் வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு அவசியமானது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவும். மேலும் பாலில் உடலுக்குத் தேவையான பல அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்தான் இரு உணவு வேளைகளின் இடைவெளியில் பால் அருந்த வேண்டும். குழந்தைகள் உணவுக்குப் பிறகு பால் அருந்துவதால் எந்தப் பிரச்னையும் இல்லை. நம் பாரம்பர்யத்தில் உணவுக்குப் பிறகு பால் பாயசம் சாப்பிடுவோம். அதைக்கூட இதற்கு உதாரணமாகச் சொல்லாம். எனவே, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் பால் சேர்ப்பது வரவேற்கக்கூடிய ஒன்றுதான்.

100 கிராம் பாலில் உள்ள ஊட்டச்சத்துகள்...

ஆற்றல் - 66 கிலோ கலோரி

நீர் - 87.8 கிராம்

கார்போஹைட்ரேட்- 5.26 கிராம்

புரதம் - 3.2 கிராம்

கால்சியம் - 113 மி.கி

பொட்டாசியம்- 143 மி.கி

கொழுப்பு - 3.9 மி. கி

சோடியம் - 43 மி.கி

மக்னீசியம் - 10 மி.கி

பாஸ்பரஸ் - 90 மி.கி

இரும்புச்சத்து - 0.2மி.கி

வைட்டமின் சி - 2 மி.கி

தயாமின் (வைட்டமின் பி1) - 0.44 கி

ரிபோஃப்ளாவின் (வைட்டமின் பி2) - 0.183 கி

வைட்டமின் பி 12 - 0.44 கி

கவனிக்க வேண்டியவை...

பாலை எப்போதும் காய்ச்சிக் குடிப்பதே சிறந்தது. அப்போதுதான், அதில் உள்ள தொற்றுக்களும் பாக்டீரியாவும் அழிக்கப்படும். அதேநேரத்தில் பாலை அதிகமாகக் கொதிக்கவைக்கத் தேவையில்லை. சில நிமிடங்கள் காய்ச்சினாலே போதுமானது.

5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பால் அருந்தலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் அருந்தலாம்.

இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது சிறந்தது.

கடையிலிருந்து வாங்கி வந்ததும், பாலை உடனே பயன்படுத்திவிட வேண்டும். அவசியம் ஏற்பட்டால், ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, பாக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் நாள் வரை பயன்படுத்தலாம். முடிந்த வரை தேவையானபோது வாங்கி, அப்போதே பயன்படுத்துவது நல்லது" என்கிறார் தாரிணி கிருஷ்ணன்.