Published:Updated:

சினேகா கதாபாத்திரம் போல தன் உடலையே ஆய்வுக்கு உட்படுத்தி ஆவணப்படம் எடுத்த இயக்குநர்... இது நிஜ `வேலைக்காரன்’ கதை! #SuperSizeMe

சினேகா கதாபாத்திரம் போல தன் உடலையே  ஆய்வுக்கு உட்படுத்தி  ஆவணப்படம் எடுத்த இயக்குநர்... இது நிஜ `வேலைக்காரன்’ கதை! #SuperSizeMe
சினேகா கதாபாத்திரம் போல தன் உடலையே ஆய்வுக்கு உட்படுத்தி ஆவணப்படம் எடுத்த இயக்குநர்... இது நிஜ `வேலைக்காரன்’ கதை! #SuperSizeMe

மீபத்தில் வெளியான ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் கஸ்தூரி என்ற பெண் கதாபாத்திரத்தில் சினேகா நடித்திருந்தார். ஜங்க் ஃபுட் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துபோன தன் குழந்தைக்காக பெரு முதலாளிகளை எதிர்த்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து, ஆதாரங்களை நிரூபிக்க இயலாமல் போகும் கதாபாத்திரம் அவருக்கு.

சில காட்சிகளே தோன்றியிருக்கும் சினேகாவின் கதாபாத்திரம் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் போக்கையே மாற்றக்கூடியதாக அமைந்திருந்தது. தன் வீடு முழுவதும் சிசிடிவி கேமரா வைத்து, மூன்று வேளையும் ஒரே கம்பெனியின் ஜங்க் ஃபுட்டையே உணவாகச் சாப்பிட்டு, தன் உடல் மீதே ஆய்வுசெய்து ஆவணப்படுத்திக்கொண்டிருப்பார். தன் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்குக் காரணமான கம்பெனியை அம்பலப்படுத்துவதே அவரது நோக்கமாக இருக்கும்.

இதேபோன்ற ஆபத்தான முயற்சியை 2004-ம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியா பகுதியைச் சேர்ந்த மார்கன் ஸ்பர்லாக் (Morgan Spurlock) என்பவர் செய்திருந்தார். அவர் அதற்காகத் தேர்ந்தெடுத்திருந்தது உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனமான `மெக்டொனால்ட்ஸ்.’ மார்கன் ஸ்பர்லாக், தன் குடும்பத்தோடு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தால் தாங்கள் உடல் பருமனடைந்துவிட்டதாகக் கூறி, அதற்காக இரண்டு சிறுமிகள் வழக்கு தொடுத்த ஒரு செய்தியைப் பார்த்தார். அப்போதுதான் அவருக்கு இந்த விசித்திரமான ஐடியா தோன்றியதாம்.

அதன்படி அவர் மூன்று மருத்துவர்களை சந்திக்கிறார் – முதலில் பொதுநல மருத்துவர், இரண்டாவதாக இதயநோய் நிபுணர், மூன்றாவதாக குடல் மற்றும் இரைப்பைக்கான சிறப்பு மருத்துவர். மார்கன் ஸ்பர்லாக்கின் உடல்நலம் இயல்பாக இருப்பதாக மூன்று மருத்துவர்களும் கூறிய பின்னர், அவர் இந்த ஆய்வைத் தொடங்குகிறார். இந்த ஆய்வு முழுவதையும் ஆவணப்படமாகவும் தயாரிக்கிறார். ’முப்பது நாள்களுக்கு, ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும் தண்ணீர் உட்பட, மெக்டொனால்ட்ஸ் உணவையே சாப்பிட வேண்டும். முப்பது நாள்களுக்குள் மெக்டொனால்ட்ஸ் மெனுவில் இருக்கும் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டிருக்க வேண்டும்; மெக்டொனால்ட்ஸ் ஊழியர்கள் அவருக்கு ‘சூப்பர் சைஸ் உணவை அளிக்கவா?’ என்று கேட்டால், அதை மறுக்காமல் வாங்கிச் சாப்பிட வேண்டும்’ என்று தனக்குத் தானே ரூல்ஸ் போட்டுக்கொள்கிறார்.

முதல் ஐந்து நாள்களிலேயே மார்கன் தன் உடலில் நடக்கும் மாற்றங்களை உணரத் தொடங்கியிருந்தார். அவரது உடல் எடை நாலரை கிலோ கூடியிருந்தது. பன்னிரண்டு நாள்களில் ஏழரை கிலோவாக அது மாறியிருந்தது. மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி, முப்பது நாள்களை வெற்றிகரமாக மார்கன் ஸ்பர்லாக் கடந்திருந்தபோது அவரது உடல் எடை பதினொரு கிலோ கூடியிருந்தது. கல்லீரல் பாதிப்படைந்திருந்தது. உடலில் கொழுப்பு அளவும் எகிறியிருந்தது. முப்பது நாள்கள் தன்னையே ஆய்வுப் பொருளாக்கி, ஆவணப்படுத்திய மார்கன் ஸ்பர்லாக் அதற்குச் சூட்டிய பெயர் ‘சூப்பர் சைஸ் மீ’ (Super Size Me).

அமெரிக்கா முழுவதும் மக்களிடையே பரவி வந்த ஜங்க் ஃபுட் கலாசாரத்துக்கு எதிராகவும், உடல் பருமன் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதிலும் ‘சூப்பர் சைஸ் மீ’ ஆவணப்படம் சிறப்பான பங்களிப்பைத் தந்தது. 2004-ம் ஆண்டு, ஆஸ்கர் விருதுகளுக்காகவும் இந்த ஆவணப்படம் நாமினேட் செய்யப்பட்டது. ஒரு மாதத்தில் மாற்றம் கண்ட மார்கனின் உடல், மீண்டும் பழையநிலைக்குத் திரும்புவதற்குப் பதினான்கு மாதங்கள் தேவைப்பட்டன. ’சூப்பர் சைஸ் மீ’ ஏற்படுத்திய தாக்கம் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்துக்குப் பெரும் பின்னடைவைத் தந்தது. ஆவணப்படம் வெளியான ஆறே வாரத்துக்குள் மெக்டொனால்ட்ஸ் ‘சூப்பர் சைஸ்’ உணவுப் பொருள்களை விற்பனை செய்வதை நிறுத்தியது. ஆனாலும், `அதற்குக் காரணம் இந்த ஆவணப்படம் அல்ல’ என்றெல்லாம் அறிக்கையும் வெளியிட்டது. மேலும், பல கோடி டாலர் செலவில், உலகம் முழுக்க மெக்டொனால்டுக்கான விளம்பரங்கள் செய்யப்பட்டன.

மார்கன் ஸ்பர்லாக்கின் ‘சூப்பர் சைஸ் மீ’ இன்றும் அமெரிக்காவில் உடல் பருமன் தொடர்பான விவாதங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.