ஹெல்த்
Published:Updated:

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

பூச்சிக்கொல்லி முதல் காஸ்மெட்டிக் வரைதவிர்க்க... தப்பிக்க... வழிகள்

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

புற்றுநோயின் பாதிப்பு அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரத்த தானம், கண்தானம், உடல் உறுப்பு தானத்தைப்போல ஸ்டெம்செல் தானம், கீமோவால் முடி இழந்தவர்களை ஊக்கப்படுத்த, முடி தானம் எனப் புதுப்புது தானங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

‘புற்றுநோய் உயிரைப் பறிக்குமா... கீமோ வலி தருமா... முடி கொட்டுமா?’ இதுபோன்ற கேள்விகளைவிட, புற்றுநோயை நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும் தற்காப்பை அறிவதே முக்கியம். ‘அடுத்தது நீங்களா?’ என்று கேட்கும் புற்றுநோயின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, புற்றுநோயைத் தவிர்க்கும் வழிமுறைகளைத் தெரிந்துவைத்திருப்பதே புத்திசாலித்தனம். இதுதான் காரணம், இதைச் சாப்பிட்டதால், இதைப் பயன்படுத்தியதால், இதனால்தான் வருகிறது புற்றுநோய் என இன்றுவரை உறுதிபடச் சொல்ல முடியவில்லை. ஆனால், இதை எல்லாம் தவிர்த்தால், ரிஸ்க் குரூப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

புகைபிடிப்பது

சிகரெட் புகைக்கும்போது, 4000-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உருவாகின்றன. அதில் 70-க்கும் மேற்பட்டவை  புற்றுநோயை நேரடியாக உருவாக்கக்கூடியவை. சிகரெட்டின் இத்தனைக் கொடிய ரசாயனங்களும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதித்து, புற்றுநோய் செல்களை அழிக்கவிடாமல் செய்துவிடும். 10 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அவர்களில் 9 பேர் புகைபிடிப்பவராக இருக்கின்றனர். புகைபிடித்தால், நுரையீரல் புற்றுநோய் மட்டும் அல்ல, ரத்தம், சிறுநீர்ப்பை, மலக்குடல், பெருங்குடல், கல்லீரல், வாய், தொண்டை, கணையம், உணவுக் குழாய் புற்றுநோய்கள்கூட வரலாம்.

புகைபிடிப்பதை நிறுத்தி, 5 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றால், வாய், தொண்டை, உணவுக்குழாய், சிறிநீர்ப்பை போன்ற இடங்களில் புற்றுநோய் வரும் வாய்ப்பு பாதியாகக் குறைகிறது. இதுவே, 10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் வாய்ப்பும், 15 ஆண்டுகளில் இதய நோய்களுக்கான வாய்ப்பும் குறைகின்றன.

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

புகைப்பவர் அருகில் இருப்பது

புகைபிடிக்காவிட்டாலும் புகைப்பவருடன் இருந்தால், நுரையீரல் புற்றுநோய் வரும். இதயம், ரத்த நாளங்கள் பாதிப்படையும். மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வர வாய்ப்புகள் அதிகரிக்கும். பெரியவர்களைவிட குழந்தைகளும் கர்ப்பிணிகளும்தான் இதில் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். உடல்நலக் குறைவு, நுரையீரல் தொற்று, இருமல், வீசிங், ஆஸ்துமா, காதில் தொற்று போன்ற தொல்லைகள் குழந்தைகளுக்கு அடிக்கடி வரலாம். காரில் உட்கார்ந்து புகைபிடித்தால், உடன் இருப்பவர்களுக்கு இருமடங்கு பாதிப்புகளை அது ஏற்படுத்தும். புகை, கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். குறைப்பிரசவம், குழந்தையின் எடை குறைதல் போன்ற பிரச்னைகளும் வரலாம்.

திறந்தவெளி இல்லாத இடங்களில் யாரேனும் புகை பிடித்தால் அங்கு செல்வதைத் தவிர்க்கலாம். ஸ்மோக் ஃப்ரீ இடங்களை அனைவரும் உருவாக்க முயற்சிக்கலாம். பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும்.

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

புகையிலை

மாவா, பான் வஸ்துக்கள், சீவல், ஹான்ஸ் போன்ற எந்த வகையில் சுவைத்தாலும், புற்றுநோய் வருவது நிச்சயம். புகையிலையால், இந்தியாவில் தினமும் 2,500 பேர் இறக்கின்றனர். புகையிலை அல்லது பாக்கை மெல்லும் போது, வெள்ளை மற்றும் சிவப்புத் திட்டுக்கள் வாயிலும் நாக்கிலும் உண்டாகும். அதுவே, புண்ணாக மாறி புற்றுநோயாகிவிடும். புகையிலை சுவைப்போரின் பழக்கமானது, நகர்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. உடலில் உள்ள ஸ்டெம் செல்லை அழிக்கும் தன்மை புகையிலைக்கு உண்டு என்பதால், உடனடியாகப் புகையிலை பழக்கத்தை நிறுத்துவது உயிர் காக்க உதவும்.

புகையிலையைச் சுவைக்கும் பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது மட்டுமே ஒரே வழி. மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டு, அதன்படி நடப்பது நல்லது.

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

குடி

உலக அளவில், ஒவ்வொரு 10 விநாடிகளுக்கும் ஒருவர் குடிப்பழக்கத்தால் இறக்கிறார். ‘நான் சோஷியல் டிரிங்க்கர் எப்போதாவதுதான் குடிப்பேன்’ என்று சிலர் சொல்வார்கள். குறைந்த அளவில் மது குடிப்பவருக்குப் புற்றுநோய் வர, குறைந்த வாய்ப்புகள் உள்ளன. ஒயின், பீர், ஸ்பிரிட் என எதுவாக இருந்தாலும் கல்லீரல், இதயம், வயிறு போன்றவை பாதிக்கத்தான் செய்யும். குடிப்பழக்கத்தினருக்கு ஏழுவகையான புற்றுநோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். வாய், மேல் தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், மார்பகம், கல்லீரல், குடல் புற்றுநோய்கள் வரலாம்.  குடி மற்றும் புகையிலை பழக்கம் இருப்போருக்கு, புற்றுநோய் வர வாய்ப்புகள் இரட்டிப்பாகின்றன.

குடிப்பழக்கத்தை உடனடியாக நிறுத்துவதே சரி. பிடித்தவர்களுடன் நேரம் செலவழிப்பது, பிடித்த பொழுதுபோக்குகளைச் செய்வது எனத் தன் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம்.

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

ஆரோக்கியமற்ற உணவுகள்

உப்பு, சர்க்கரை, கொழுப்பு, சுவையூட்டிகள் போன்றவை அளவில் அதிகமாகச் சேர்க்கப்பட்டு, நம்மை அடிமையாக்கும் உணவுகள். இவை உடலைப் பருமனாக்குவதுடன், புற்றுநோய் வருவதற்கான ரிஸ்க்கையும் ஏற்படுத்தும். மரபணு மாற்றப்பட்ட சோளம், சோயா பீன்ஸ், கத்திரிக்காய், தக்காளி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மைக்ரோவேவ் பாப்கார்ன், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மீண்டும் மீண்டும் சூடேற்றப்படும் எண்ணெய், பாக்கெட் சிப்ஸ், குளிர்பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றால் ஏற்படும் உடல்பருமன் மெள்ள மெள்ள உள்ளுறுப்புகளையும் தாக்கும். இதனால், வயிறு, பெருங்குடல் மற்றும் மலக்குடல் தொடர்பான புற்றுநோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்.

நிலக்கடலை, மொச்சை, பட்டாணி, மூக்கடலை, ஹெல்த் மிக்ஸ் கஞ்சி, சிறுதானியப் பணியாரம், அவல், பொரி, எள் உருண்டை, கமர்கட், பனங்கற்கண்டுப் பால், பழக்கலவை, பாதாம், பேரீச்சை, உலர்பழங்கள் போன்றவை சாப்பிட உகந்தவை.

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

உடல் உழைப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு

30-35 சதவிகிதப் புற்றுநோய்க்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல் உழைப்பு இன்மை காரணமாகின்றன. உடல் உழைப்புக் குறைவதால், உடல் பருமன் ஏற்படுகிறது. அரிசி உணவுகள், துரித உணவுகள், கேடு விளைவிக்கும் நொறுக்குத்தீனிகளைத்தான் நாம் அதிகம் உண்கிறோம். இவற்றில் மாவுச்சத்து மட்டுமே இருக்கும். நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்ஸிடன்கள் ஆகியவை இருக்காது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தேவையான அளவு கிடைக்கவில்லை எனில், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால், புற்றுநோய் செல்கள் அதிகமாக வளர வாய்ப்பு உள்ளது.

கீரைகள், காய்கனிகள், முழு தானியங்கள், பயறு, நட்ஸ், முட்டை, மீன், தோல் நீக்கப்பட்ட இறைச்சி போன்றவற்றைச் சாப்பிடலாம். வாரத்தில் ஐந்து நாட்கள் ஏதாவது ஓர் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குங்கள்.

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

பூச்சிக்கொல்லி தெளித்த உணவுகள்

அரிசி, பயறுகள், காய்கறிகள், பழங்கள் அனைத்திலும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. ஆர்கானிக் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ‘கிரீன் டீ அருந்தினால் புற்றுநோய் பயம் இல்லை’ என்று சொல்வர். ஆனால், இந்த டீ இலைகள் வளர்க்கப்பட்டு, உலர்த்தி, பக்குவப்படுத்தி பாக்கெட்டில் அடைக்கும் வரை நடக்கும் கெமிக்கல் மழை, இதன் பலனை அழிக்கிறது. ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, காலிஃபிளவர், முட்டைகோஸ், திராட்சை போன்றவை அதிகப்படியான ரசாயனங்களில் முக்கி எடுக்கப்படுகின்றன. இப்படி, பூச்சிக்கொல்லி தெளித்த உணவுகளை உண்பவர்களும் ரிஸ்க் குரூப்பில்தான் உள்ளனர்.

தனியாகவோ, ஒன்றிணைந்து கூட்டாகவோ முயற்சித்து வீட்டுத் தோட்டம் அமைத்து, அதில் விளைவதை உண்பது பாதுகாப்பைத் தரும். நம்பகமான வியாபாரிகளிடம் உணவுப் பொருட்களை வாங்குங்கள். பூச்சிக்கொல்லி தேவைப்படாத சிறுதானியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

மன அழுத்தம், மனச்சோர்வு

மனநிலை, உணர்வுகள், உணர்வுரீதியாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உயர் ரத்த அழுத்தம், வேகமான இதயத் துடிப்பு, அதிகபடியான சர்க்கரை அளவு, செரிமானப் பிரச்னை, தலைவலி, பயம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. மனப் பிரச்னைகள் உடலை பலவீனப்படுத்தி, மறைமுகமாகப் புற்றுநோய்க்கும் வழிவகுக்கிறது. மன அழுத்தத்தைப் போக்க பிடிக்கும் சிகரெட்டும், குடிபழக்கமும் நேரடி புற்றுநோய் காரணியாகுகிறது. மனச்சோர்வில் அதிகமாக உணவு உண்ணும் பழக்கமும் உண்டு. இதனால், உடல்பருமனாகும். உள்ளுறுப்புகளின் இயக்கங்கள் பாதிக்கும்.

ஓய்வும் தூக்கமும் அவசியம். தியானம், யோகா, உடற்பயிற்சிகள் போன்றவை உணர்வுகளை மேம்படுத்தும். நண்பர், உறவுகளுடன் நேரம் செலவழித்து, மனப் பிரச்னைகளிலிருந்து மீள முடியும். தகுந்த மனநல மருத்துவரின் ஆலோசனை பெறுவது மனதைப் புதுப்பிக்க உதவும். உற்சாகப்படுத்தும் நிகழ்வுகள், இசை, புத்தகம், விளையாட்டு எனப் பிடித்ததைச் செய்ய வேண்டும்.

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

அதிக காஸ்மெட்டிக்ஸ்

  காலையில் பேஸ்டில் தொடங்கி நைட் கிரீம் தடவுவது வரை கெமிக்கல்களோடு வாழ்பவர்கள் பலர். லோஷன், லிப்ஸ் ஸ்டிக், ஷேவிங் கிரீம், நகப்பூச்சு, பர்ஃப்யூம், ஷாம்பு, சருமத்தைத் தற்காலிகமாக வெள்ளையாக்கும் ஸ்கின் வொயிட் கிரீம் போன்றவற்றில், தாலேட்ஸ், டயாக்சேன், பாரபின், எத்லீன், காரியம், பாதரசம் போன்றவைக் கலக்கப்படுகின்றன. ஆன்டிஏஜிங் கிரீம், ஹேர்டை, ஸ்கின் லைட்னிங் கிரீம்கள் பயன்படுத்தும் முன், சரும மருத்துவரின் ஆலோசனை முக்கியம். இதில் கலக்கப்படும் கெமிக்கல்களின் வீரியம், புற்றுநோயை வரவழைக்கும்.

சரும மருத்துவரைப் பரிந்துரைக்கச் சொல்லி, காஸ்மெட்டிக்ஸைப் பயன்படுத்தலாம். முடிந்த அளவுக்கு ஆர்கானிக் அழகுப் பொருட்களும் பயன்படுத்தலாம். வீட்டுப் பெரியவர்கள் பயன்படுத்தியமுறைகளும் நல்வழிதான். ஒரே வாரத்தில் பளிச் முக அழகு, இரு வாரங்களில் பளிச் பற்கள், சில நொடிகளில் மறையும் நரைமுடி, சுருண்ட முடியை நேராக்கும் ஷாம்பு என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

புற்றுநோயின் பாதிப்பு அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரத்த தானம், கண்தானம், உடல் உறுப்பு தானத்தைப்போல ஸ்டெம்செல் தானம், கீமோவால் முடி இழந்தவர்களை ஊக்கப்படுத்த, முடி தானம் எனப் புதுப்புது தானங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ‘புற்றுநோய் உயிரைப் பறிக்குமா... கீமோ வலி தருமா... முடி கொட்டுமா?’ இதுபோன்ற கேள்விகளைவிட, புற்றுநோயை நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும் தற்காப்பை அறிவதே முக்கியம். ‘அடுத்தது நீங்களா?’ என்று கேட்கும் புற்றுநோயின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, புற்றுநோயைத் தவிர்க்கும் வழிமுறைகளைத் தெரிந்துவைத்திருப்பதே புத்திசாலித்தனம். இதுதான் காரணம், இதைச் சாப்பிட்டதால், இதைப் பயன்படுத்தியதால், இதனால்தான் வருகிறது புற்றுநோய் என இன்றுவரை உறுதிபடச் சொல்ல முடியவில்லை. ஆனால், இதை எல்லாம் தவிர்த்தால், ரிஸ்க் குரூப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

பிளாஸ்டிக் அபாயம்

டெரர் 10 புற்றுநோய் ஏஜென்ட்ஸ்

ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. இதில், 6,000 கெமிக்கல்கள் பற்றி மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம் உள்ளவை என்ன தீங்கை அளிக்கும் என யாருக்கும் தெரியாது. பொருளாதாரத்தில் வளமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் ரத்தத்தை ஆய்வுசெய்து பார்த்தபோது, அதில், 275 ரசாயனங்கள் கலந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவை வைக்கும்போது, பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனம் உணவோடு கலந்துவிடும். பிளாஸ்டிக்கில் சேர்க்கப்படும் தாலேட்ஸ்கள் ஆபத்தானவை. அதுபோல் டயாக்சின், பிஸ்பீனால் ஏ, பிவிசி போன்ற ரசாயனங்கள் கலந்தவற்றை பல ஆண்டுகள் பயன்படுத்துகையில், வெளியாகும் ரசாயனங்கள் உணவோடு கலந்து உடலுக்குள் சென்று, ஹார்மோன் இயக்கத்தில் மாற்றம் உண்டாகும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் சுரந்து, மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்கு ப்ராஸ்டேட் வரலாம்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், மண்பாண்டங்கள், போர்சிலேன், கண்ணாடி ஆகியவை சமைப்பதற்கு ஏற்ற பாத்திரங்கள். வாட்டர் பாட்டில், லன்ச் பாக்ஸ்க்கு, முன்னர் பயன்படுத்தபட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களே பெஸ்ட்!

- ப்ரீத்தி

படம்: தே.தீட்ஷித்

புற்றுநோய் தடுக்க... தவிர்க்க!

மாதம் ஒரு முறை உங்கள் எடையை செக் செய்து சீரான  உடல் எடையைப் பராமரியுங்கள்.

ஒரு நாளில் 30 நிமிடங்களாவது துடிப்புடன் உடலுக்கு வேலை கொடுங்கள். உடலை உறுதிசெய்யும் உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.

40 வயதைக் கடந்தவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரைச் சந்தித்து, பொது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு ஏழெட்டு மணி நேரம் தூங்குவது அவசியம். இரவு 11-3 மணி வரை ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது அவசியம்.

சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை, பர்ப்பிள் போன்ற ஒவ்வொரு நிறத்தில் உள்ள காய்கனிகளை நாள்தோறும் பட்டியலிட்டுச் சுவைத்திடுங்கள்.

காய்ச்சி, வடிகட்டிய நீராக அருந்துங்கள். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.

பாக்கெட், பதப்படுத்தப்பட்ட, ரெடிமேடு உணவுகளைத் தவிர்த்திடுங்கள். அதில், அடிக்டிவ்ஸ் கலந்திருப்பதால் அடிமைப்படுத்திவிடும்.

குளிர்பானங்கள், கேனில் விற்கும் பழச் சாறுகள் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

உப்பு, சர்க்கரை, அதிகமான காரம், மசாலா போன்றவற்றை அளவாகப் பயன்படுத்துங்கள்.

சரிவிகித உணவை உண்ணுங்கள். தட்டில் அரிசியைவிட காய்கறிகள் அதிகமாக இருக்கட்டும். தினமும் பழங்கள், நட்ஸ் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

புற்றுநோய் அறிகுறிகள்

புண் அல்லது அல்சர் குணமாகாமல் இருப்பது.

தொடர் இருமல்.

உணவு விழுங்குவதற்குக்கூட சிரமம்.

செரிமான சக்தி குறைதல்.

மலம், சிறுநீர் கழிப்பது போன்றவற்றில் அதிகப்படியான மாற்றங்கள்.

அதீதப் பசி, சோர்வு, கவலை மற்றும் சில நாட்களில் அதிக அளவு எடை குறைந்துபோதல்.

நவ துவாரங்களில் ரத்தக்கசிவு.

புதிதாக ஏற்பட்ட கட்டி, புண், மச்சம்.