ஹெல்த்
Published:Updated:

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 6

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 6

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 6

வைட்டமின் பி1 - தயமின்

ளர்சிதைமாற்றச் செயல்பாடு சீராக நடப்பதிலும், உண்ணும் உணவில் இருந்து ஆற்றலை சரியான முறையில் பெறுவதிலும், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை உடலில் கிரகிக்கப்படுவதிலும், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. வைட்டமின் பி, நீரில் கரையக்கூடியது; இதை நம்முடைய உடலால் சேமித்துவைக்க முடியாது. எனவே, இந்த வைட்டமின்களை நாம் தினமும் உணவின் மூலம் பெறுவது அவசியம். வைட்டமின் பி காம்ப்ளக்ஸில்  முதலில் நாம் பார்க்கப்போவது ‘பி1’ என்று சொல்லக்கூடிய தயமின்.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 6

• மூளைச் செயல்பாடு மற்றும் செரிமானச் செயல்பாட்டில் தயமின் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரதத்தை, உடல் பயன்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக  மாற்றுவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

• நரம்பு  மண்டலம் மற்றும் இதய ரத்தக் குழாய் (கார்டியோ வாஸ்குலார்) பகுதிகளில் ஏற்படும் ‘பெரிபெரி’ என்ற நோய்க்கு முக்கியக் காரணம், தயமின் குறைபாடுதான். பெரிபெரியில் இரண்டு வகைகள் உள்ளன.

• பசியின்மை, கை, கால்களில் திடீரென ஏற்படும் கூச்ச உணர்வு, உணர்வின்மை ஆகிய பிரச்னைகள் உலர் பெரிபெரி நோய் (Dry beriberi) வகையைச் சேரும்.

• சீரற்ற இதயத்துடிப்பு, மூச்சுவிடுதலில் தொந்தரவு, இதயத்தசைகள் வலுவிழத்தல் ஆகிய பிரச்னைகள் ஈரமான பெரிபெரி நோய் (Wet beriberi)என்ற வகையைச் சேரும்.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 6

• கண்ணில் ஏற்படும் வலி, உடலில் ஏற்படும் ஒரு வகையான எரிச்சல், கவனக்குறைவு,  ஞாபகமறதி, இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது, மலச்சிக்கல்,  வயிற்றுவலி போன்றவற்றுக்கு தயமின் குறைபாடு மிக முக்கியக் காரணம்.

• ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துவது, டீ, காபி அதிகம் அருந்துவது, ஆல்கஹால் எடுத்துக்கொள்வது போன்றவற்றால், நாம் சாப்பிடும் உணவில் இருந்து தயமின் சத்து உடலுக்குப் போய்ச்சேருவதில் தடை ஏற்படுகிறது.

• தொடர்ந்து தயமின் உடலுக்குக் கிடைக்கவில்லை எனில், நரம்புக் கோளாறுகள் அதிகரிக்கும். எனவே, ஆன்டிபயாடிக் மருந்துகள், டீ, காபி போன்றவற்றை அளவாக எடுத்துகொள்ள வேண்டும். ஆல்கஹாலை அறவே தவிர்க்க வேண்டும்.

எதில் இருந்து தயமினைப் பெறுவது ?

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 6

• அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் போன்றவற்றில் தயமின் அதிக அளவு இருக்கிறது. குறிப்பாக, இந்த தானியங்களின் வெளிப்புற அடுக்கில்தான் தயமின் சத்து அதிகமாக உள்ளது.

• அரிசியை பாலீஷ் செய்யும்போது, இந்தச் சத்து வெளியேற்றப்படுகிறது. பாலீஷ் செய்யாத கைக்குத்தல் அரிசி, பழுப்பு அரிசியில் இந்தச் சத்து அதிக அளவில் உள்ளது.

• நட்ஸ் வகைகளிலும் தயமின் உள்ளது. குறிப்பாக, நிலக்கடலையில் தயமின் அதிக அளவு நிறைந்திருக்கிறது. மாவுச்சத்து நிறைந்த பொருட்கள் அனைத்திலுமே தயமின் அதிக அளவு இருக்கும். ஏனெனில், இந்த தயமின்தான்  உடலில் மாவுச்சத்தின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.

• தயமின் நமது உணவில் நிறைந்திருக்கிறது. பாரம்பர்ய உணவுகளான சிறுதானியங்களை நிறையச் சேர்த்துக்கொள்வது நல்லது.

- பு.விவேக் ஆனந்த்