ஹெல்த்
Published:Updated:

ஆன்டிபயாட்டிக் ஆபத்து!

ஆன்டிபயாட்டிக் ஆபத்து!

ஆன்டிபயாட்டிக் ஆபத்து!

ப்போது, ‘ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்’ எனச் சொல்லப்படும், ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிராக பாக்டீரியா வலுப்பெறும் பிரச்னை உலகம் முழுவதும் பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. ஆன்டிபயாட்டிக் பற்றி `உலக சுகாதார நிறுவனம்' சமீபத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டது.

• ‘64 சதவிகித மக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஃப்ளூ காய்ச்சல், சளி போன்றவற்றைக் குணப்படுத்தும் என நம்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர்’ என `உலக சுகாதார நிறுவனம்'  நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தவறான பழக்கம், வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் நோய்களை ஆன்டிபயாட்டிக் ஒன்றும் செய்ய முடியாது. மேலும், இவ்வாறு சாப்பிடுவதால் ஆன்டிபயாட்டிக் மருந்து வீரியம் இழக்கிறது.

• 32 சதவிகிதம் பேர் மருத்துவர் மூன்று, நான்கு நாட்களுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளைச் சாப்பிடச் சொன்னால், நோய் ஓரிரு நாளில் சரியானதுபோல தெரிந்தாலே மாத்திரை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். இதுவும், தவறான பழக்கம். டாக்டர் நான்கு நாட்கள் மாத்திரை சாப்பிடச் சொன்னால், நோயில் இருந்து மீண்டு வந்ததுபோலத் தெரிந்தாலும், நான்கு நாட்களுக்கு கட்டாயம் அந்த மாத்திரையைச் சாப்பிட வேண்டும்.

ஆன்டிபயாட்டிக் ஆபத்து!

• காய்ச்சல், சளி, உடல்வலி, பல்வலி என எதற்காகவும் மருத்துவர் பரிந்துரை இன்றி ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஆன்டிபயாட்டிக் பற்றிய உங்களது சந்தேகம் எதுவாக இருப்பினும், மருத்துவரிடம் கேட்டுத் தெளிவுபெற வேண்டும்.

• ‘ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் வீரியம் இழப்பு, 21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்’ என்றும், ‘அதைத் தடுப்பதற்கு மக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பற்றிய விழிப்புஉணர்வு பெறுவது அவசியம்’ என்றும் `உலக சுகாதார நிறுவனம்' தெரிவித்துள்ளது.

ஏன் ஏற்படுகிறது?

• ஆன்டிபயாட்டிக்குக்கு ‘ஆன்டிபாக்டீரியல்’ என்று ஒரு பெயரும் உண்டு. உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுப்பது, ஆன்டிபயாடிக் மருந்துகளின் வேலை.

• ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தேவையற்ற நேரத்தில் உட்கொள்வதாலும், அதிக அளவு இந்த மருந்தைச் சாப்பிடுவதாலும் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியா இந்த வகையான மருந்துக்கு எதிராகச் செயல்படும் தன்மையைப் பெற்றுவிடும். அதாவது, அந்த மருந்தை எதிர்த்து வாழப் பழகிக்கொள்ளும். இதனால், மருந்து எடுத்தும் பலன் இல்லாத நிலை ஏற்படும். நோய்களின் வீரியம் அதிகரித்து, உடல்நலம் குன்றிவிடும்.

 - பு.விவேக் ஆனந்த்