Election bannerElection banner
Published:Updated:

மன நிம்மதிக்கு என்ன செய்ய வேண்டும்?

அனுஷ்காவின் ஹெல்த் சீக்ரெட்ஸ்

மர்ஷியல் சினிமாவாக இருந்தாலும், சீரியஸ் சினிமாவாக இருந்தாலும் சின்சியர் உழைப்பைக் கொட்டுபவர் அனுஷ்கா. அனுஷ்கா, ஒரு யோகா டீச்சரும்கூட. ‘இஞ்சி  இடுப்பழகி’ எனும் படத்தில் குண்டான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக,  கிட்டத்தட்ட 20 கிலோ வரை எடையைக் கூட்டியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது மீண்டும் எடை குறைப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.

‘நடிகர்களே ரிஸ்க் எடுக்கத் துணியாத நிலையில், எப்படி இது சாத்தியமானது?’ என அனுஷ்காவிடம் கேட்டோம்.

“இயல்பாகவே எனக்கு ஹெல்த், ஃபிட்னெஸ்ல அக்கறை அதிகம். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக வெயிட் ஏத்தணும்னு இயக்குநர் சொன்னதும் ஓ.கே-னு சொல்லிட்டேன். எனக்குப் பொதுவாக கொஞ்சமாகச் சாப்பிட்டாலே வெயிட் போட்டுடும். அதனால 15-20 கிலோ அதிகரிப்பது எல்லாம் பெரிய விஷயமா இருக்காதுன்னு நினைச்சேன். வேகமாக எடை ஏற்றுவதற்காக எந்தவிதமான செயற்கைமுறைகளையும் கடைப்பிடிக்கக் கூடாதுங்கிறதுல உறுதியாக இருந்தேன். அதனால, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உடல் எடை அதிகரித்தது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாம பிரியாணி, சிக்கன்னு வெளுத்துக்கட்டினேன். அதே சமயம் ஐஸ்க்ரீம், வடை, பஜ்ஜி மாதிரியான ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்தேன். தினமும் சிக்கன் சாப்பிட்டதுனால தசைகள் நன்றாக விரிவடைந்து, செம வெயிட் போட்டேன்.”

மன நிம்மதிக்கு என்ன செய்ய வேண்டும்?

“ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், உடல் எடையை  இவ்வளவு அதிகரிப்பதற்கு எப்படி மனதளவில் தயாரானீங்க?”

“குண்டான பெண் கதாபாத் திரத்துக்கு உயிர் கொடுக்கணும்... அதுக்கு எடை ஏற்ற வேண்டும். அது என் வேலை. அதனால முழு மனசோடதான் எடை ஏற்றினேன். ஆனா, வெயிட் அதிகமானதும் நிறைய சிரமங்களைச் சந்திச்சேன். மூட்டுவலி மாதிரியான பிரச்னைகள் எல்லாம் வர ஆரம்பிச்சது. அதனால படப்பிடிப்பு முடிஞ்சதும் அடுத்த வாரத்துல இருந்தே எடை குறைப்புப் பயிற்சிகள்ல இறங்கிட்டேன். எடை கொஞ்சம் கொஞ்சமா குறையுது. இன்னும் கொஞ்ச நாள்ல மறுபடியும் பழைய நிலைமைக்குத் திரும்பிடுவேன்.”

“வெவ்வேறு வகையான படங்களில் நடிப்பதற்கு உடலை வருத்துவதால், ஸ்ட்ரெஸ் ஏற்பட்டால் என்ன செய்வீங்க?”

“ஸ்ட்ரெஸ் ரொம்ப மோசமான விஷயம். அது நம் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை அடியோட காலி செஞ்சிடும். என்னைப் பொறுத்தவரைக்கும் நான் எந்த விஷயத்துக்கும் அதிகமா  ஃபீல் பண்ண மாட்டேன். அப்படியே ஏதாவது கஷ்டம் இருந்தாலும், உடனடியாகப் போய்த் தூங்கிடுவேன். நமக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வு சரியான நேரத்துல கிடைச்சாலே, உடல் புத்துணர்வு அடைஞ்சுடும். யோகா, என்  மனதை சந்தோஷமா வைத்துக்கொள்ள உதவக்கூடிய ஒரு கலை.”

“உங்க ஹெல்த் டிப்ஸ்?”

“தயவுசெஞ்சு உடற்பயிற்சி செய்யுங்க. தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்யணும். குறைந்தபட்சம் வாக்கிங் போங்க. முடிஞ்சா ஜிம் போய் முறையாக உடற்பயிற்சிகளைக் கத்துக்கிட்டு,  செய்யுங்க. வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, பணத்தைவிட ஆரோக்கியம் எப்போதும் முக்கியம்.”

- பா.ஜான்ஸன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு