ஹெல்த்
Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

சித்தார்த், சேலம்.

“எனக்கு வயது 25. சில மாதங்களாக உடலில் ஆங்காங்கே மரு ஏற்படுகிறது. கை, கால், தலையில் எனப் பல பகுதிகளில் மரு இருக்கிறது. மரு ஏற்படுவதற்கான காரணம் என்ன? ஏதும் நோயின் அறிகுறியாக இருக்குமோ எனச் சந்தேகம் உள்ளது. இதற்கு ஏதாவது தீர்வு கூறுங்கள்?”

டாக்டர் ரேவதி தினேஷ், தோல்நோய் சிறப்பு நிபுணர், சேலம்.

கன்சல்ட்டிங் ரூம்

“மருவை, ‘உன்னி மரு’, ‘பால் மரு’, ‘பரம்பரை மரு’ என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உன்னி மருவும் பால் மருவும் வைரஸ் கிருமிகளால் வரக்கூடியவை. உன்னி மரு, உடலில் கை, கால் மற்றும் தலை போன்ற இடங்களில், முதலில் ஒன்று அல்லது இரண்டு தோன்றும். பிறகு, எல்லா இடங்களிலும் பரவும். இந்த இரு வகை மருக்களும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவக்கூடியவை. உன்னி மரு, தண்ணீரில் பரவக்கூடிய தன்மை உடையது. ஒன்று அல்லது இரண்டு மரு கை, கால்களில் இருந்தால், தோல் மருத்துவரிடம் சென்று, இந்த மருவுக்குச் சரியான களிம்பை வாங்கிப் போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், மரு சுருங்கிவிடும். முகத்தில் மரு இருந்தால், அதற்குக் களிம்பு போடக் கூடாது. லேசர் சிகிச்சை மூலம் மருவை அகற்றிக்கொள்ளலாம். பரம்பரை மரு (டி.பி.என்) என்பது ஆசனவாய், பிறப்புறுப்புகளில் வரக்கூடியது. பரம்பரை மரு என்று பெயர் இருந்தாலும், இது பெற்றோரிடமிருந்து வருவது என்ற அர்த்தம் இல்லை.

நிறைய மருக்கள் இருந்தால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, உன்னி மருவும் பால் மருவும் உடலில் வேகமாகப் பரவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்கு, சர்க்கரை நோய், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் எனப் பல காரணங்கள் இருக்கலாம். நமது உடலில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மரு ஏற்படும்போதே முறையான சிகிச்சை மேற்கொண்டு அகற்றிவிட வேண்டும். உங்களுக்கு எந்த வகையான மரு ஏற்பட்டுள்ளது எனப் பரிசோதனை செய்து பார்க்காமல் சொல்ல முடியாது. எனவே, உங்கள் அருகில் உள்ள தோல் நோய் சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.”

ஜி.ராமசுந்தரம் கோவை.

“எனக்கு வயது 38. எனக்கு ஃபேட்டி லிவர் (Fatty liver) பிரச்னை உள்ளதாகப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஃபேட்டி லிவர் பிரச்னை ஏன் வருகிறது... இதற்கான வைத்தியம் என்ன... இதற்கு என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும்?”

டாக்டர் எம்.ராஜிவ், வயிறு, கல்லீரல் மற்றும் இரைப்பைநோய் சிறப்பு நிபுணர், கோவை.

கன்சல்ட்டிங் ரூம்

“ஃபேட்டி லிவர் என்பது நம் கல்லீரல் வீக்கம் அடைவது. மதுப் பழக்கத்தால் கல்லீரல் வீக்கம் ஏற்படுவதை ‘ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்’ என்கிறோம். இதைத் தவிர உடல்பருமன், சர்க்கரை நோய், ஹெபடைட்டிஸ் சி ஆகிய காரணங்களால் கல்லீரல் வீக்கம் அடைவதை ‘நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்’ என்கிறோம். உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது உடல் பருமன் ஏற்படுகிறது. பெரும்பாலும், இந்த ஃபேட்டி லிவர் 25-ல் இருந்து 50 வயது உள்ளவர்களுக்கு வருகிறது. சரியான தூக்கமின்மை, அதிகப்படியான மன அழுத்தம், நள்ளிரவில் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் அதிகமாக உள்ள ஐ.டி பணியாளர்கள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால், உயர் ரத்த அழுத்தம், உடல் வலி, பித்தப்பைக் கற்கள் என வேறு பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.  மேலும், கல்லீரல் செயல்திறன் பரிசோதனையில் மாறுதல் ஏற்படும். ஆரம்பத்திலேயே கவனித்தால், மாத்திரை மூலமாகவே குணப்படுத்திவிடலாம். உடல் பருமனால் இந்தப் பிரச்னை வந்தவர்களுக்கு, உடற்பருமன் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும். கல்லீரல் முற்றிலுமாகச் செயல் இழந்தால், கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைதான் இதற்குத் தீர்வு. 

கன்சல்ட்டிங் ரூம்

ஃபேட்டி லிவர் பிரச்னையைத் தவிர்க்க, மது, புகைப் பழக்கத்தை நிறுத்த வேண்டும். உடல் எடையைக் கட்டுக்குள்வைக்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட், ஃபிரைடு ஃபுட், ஜங்க் ஃபுட்டைத் தவிர்த்து, தினசரி உணவில் அதிக அளவில் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது நல்லது. கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்ப்பது நல்லது. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் இ உள்ள உணவுகளை உண்ணலாம். தினமும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவற்றைச் சரியாகப் பின்பற்றினாலே போதும், இந்த பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம்.”

கன்சல்ட்டிங் ரூம்

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம்,டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002.  doctor@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.