ஹெல்த்
Published:Updated:

இதயத்தை இதமாக்கும் லவ்லி விஷயங்கள்

இதயத்தை இதமாக்கும் லவ்லி விஷயங்கள்

இதயத்தை இதமாக்கும் லவ்லி விஷயங்கள்

மக்குப் பிடித்த ஒருவரைப் பார்த்தால் மட்டும் அல்ல, அவர்களைப் பற்றிய இனிமையான, இதமான நிகழ்வுகளை நினைத்தாலே மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் இல்லையா... நம் மூளையில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்கள்தான் இந்த உணர்வுக்கு முக்கியக் காரணம். மூளையில் ஏற்படும் இந்த நல்ல ரசாயன மாற்றம், உடல் முழுவதுக்கும் ஆரோக்கியம் தருகிறது என்பது  ஆச்சர்யமான உண்மை. எப்படி... விரிவாகப் பார்க்கலாமா?

இதயத்தை இதமாக்கும் லவ்லி விஷயங்கள்

சிரிப்பு மற்றும் லவ் ஹார்மோன்கள்

• நம்மை மகிழ்ச்சியாக உணரச் செய்யக்கூடியது மூளையில் சுரக்கும் ‘எண்டார்ஃபின்’ என்னும் ரசாயனம். இது, மனதளவில் நம்மை குதூகலமாக உணரச்செய்வதோடு, உடல் வலியையும் குறைக்கும் சக்திகொண்டது. இந்த வேதிப்பொருளை அதிக அளவில் சுரக்கச் செய்யும் சக்தி சிரிப்புக்கு உண்டு.

• ஒரு முறை வாய்விட்டுச் சிரிப்பதால், நம்முடைய தசைகள் 45 நிமிடங்களுக்கு ரிலாக்ஸ் ஆகும்.

• இயல்பான சிரிப்பு ரத்தக் குழாய்களின் செயல்பாட்டை அதிகரிப்பதால், ரத்த ஓட்டம் சீராகும்.

• அன்பாக ஒருவரைக் கட்டி அணைக்கும்போது, இருவருக்குமே மன அழுத்தம் குறையும்.

• மனதுக்குப் பிடித்தவரைப் பார்க்கும்போது அல்லது கட்டிப்பிடிக்கும்போது, உடல் உணரக்கூடிய இதமான சூட்டுக்கும் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படுவதற்கும் பாதுகாப்பாக உணர்வதற்கும் ‘ஆக்சிடோசின்’ என்னும் ஹார்மோன் சுரப்புதான் காரணம். இதனால் மன அழுத்தம் மற்றும் மற்ற உடல் பாதிப்புகளும் குறைந்துவிடும்.

• மூளையிலிருந்து சுரக்கும் ஆக்சிடோசினின் மற்றொரு பெயர் ‘லவ் ஹார்மோன்’!

• தனிமையின் காரணமாக ஏற்படும் மிகப் பெரிய பாதிப்பு, ஆக்சிடோசின் சுரப்பு குறைவது. தனிமையில் அவதிப்படுபவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் உருவாக முக்கியக் காரணம் இதுதான்.

இதயத்தை இதமாக்கும் லவ்லி விஷயங்கள்

அன்பு தெரப்பி!

• நமக்குப் பிடித்தவர்களுக்குக் கடிதம் எழுதும்போது அவர்களைப் பற்றிய நல்ல, மகிழ்ச்சியான, நெகிழ்வான விஷயங்களை யோசிக்க ஆரம்பிப்போம். அப்போது, தன்னிச்சையாகவே மனதில் உள்ள கவலைகள் மறைந்துபோகும்.

• அதேபோல் நம்மைப் பற்றிப் பாசமாக ஒருவர் எழுதிய கடிதத்தைப் படிக்கும்போது, அந்த வர்ணனை வார்த்தைகளே நமக்குள் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடும்.

• பிரியமானவர்களுக்கு தினமும் கடிதம் எழுதுபவர்களுக்கு, மன அழுத்தம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  இது மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்கும்.

• பிடித்தவர்களிடம் உள்ள ஐந்து நல்ல விஷயங்களைத் தினமும் பட்டியல் இடுங்கள். அன்பு அதிகமாவதோடு ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

நினைத்தாலே இனிக்கும்!

• பிடித்த ஒருவரைப் பார்க்கும்போதோ அல்லது அவர்களுடன் இருக்கும்போதோ, அவர்களுடனான மகிழ்ச்சியான தருணங்களை ஆசையோடு அசைபோட ஆரம்பித்துவிடும் நம் மனது.

• இதனால் மூளையிலிருந்து ‘டோபமைன்’ அதிகமாகச் சுரக்கும்.

• இந்த டோபமைன்கூட மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு ரசாயனம்தான்.

• மகிழ்ச்சியான தருணங்களில் இது அதிகமாகச் சுரப்பதால், இதயத்தின் செயல்பாடு அதிகமாகி, ரத்த அழுத்தம் இயல்பாகும்.

கையைப் பிடித்து கோபத்தைக் குறைக்கலாம்

• ஒருவர் கோபமாக இருக்கும்போது, அவர்களது கையைப் பிடித்தால், அந்தச் செயல் நரம்புகளைக் கட்டுப்படுத்தி அவர்களை அமைதியாக்கும்.

• சோகமாக இருக்கும் ஒருவரின் கைகளைப் பற்றினால், அவருக்காக நாம் இருக்கிறோம் என்கிற பாதுகாப்பு உணர்வை அது ஏற்படுத்திவிடும். தேவை இல்லாத கவலையைக் கைவிட்டாலே, பாதி நோய் நீங்கிவிடும்.

• கைகோத்து நடக்கும்போது ஒருவர் மீதான அன்பை மற்றொருவருக்கு அழகாக வெளிப்படுத்துகிறோம்.

• ஒருவருடைய கையை நாம் எப்படிப் பிடிக்கிறோம் என்பதிலேயே, புரிதல், காதல் என அனைத்து உணர்வுகளையும் தெளிவாக விளக்கிவிட முடியும்.

இனியன விரும்பு!

• எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, பாசிட்டிவ்வாகப் பேசுவது, பேசுபவர்களுக்கு மட்டும் அல்ல, கேட்பவர்களுக்கும் நல்லது. பாசிட்டிவ் எண்ணங்கள் கவலை, பயத்தை மட்டும் அல்ல, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களையும் விரட்டுகின்றன.

• மனதுக்கு வருத்தத்தைத் தரக்கூடிய சில தவறான முடிவுகளும் எண்ணங்களும்தான் இதய நோய்க்கு முக்கியக் காரணம். பாசிட்டிவாக யோசிப்போம்... இதயப் பிரச்னைகளுக்கு குட்பை சொல்வோம்!

- தி.கௌதீஸ்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்