Published:Updated:

புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்துவது சாத்தியம்தானா? - மருத்துவ உண்மைகள் #ChildhoodCancer

புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்துவது சாத்தியம்தானா? - மருத்துவ உண்மைகள் #ChildhoodCancer
புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்துவது சாத்தியம்தானா? - மருத்துவ உண்மைகள் #ChildhoodCancer

'புற்றுநோய்'... கேட்டவுடனேயே கதிகலங்கவைக்கும் வார்த்தை. அப்படியிருக்க, அதை அனுபவித்துக் கடப்பவர்கள் எத்தனை சிரமத்துக்குள்ளாவார்கள்? அதிலும் குழந்தைகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால்?! நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது இல்லையா? அத்தனை வலி நிரம்பிய ஒரு நோய்க்கும், கடினமான சிகிச்சைக்கும் ஒரு குழந்தை தள்ளப்படுவது வேதனையல்லவா? சரி... புற்றுநோய்க்கான கடுமையான சிகிச்சைக்கு உட்படும் குழந்தைகளில், எத்தனை குழந்தைகள் குணமடைகிறார்கள்? இந்தக் கேள்வியுடன் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்துக்குச் சென்றோம். புற்றுநோயியல் (Oncology) துறையின் இணைப் பேராசிரியர் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணனைச் சந்தித்தோம். ``புற்றுநோய் சிகிச்சை முறைகள் கடந்த 15 ஆண்டுகளில், மருத்துவத் துறை பெற்றிருக்கும் மாபெரும் வளர்ச்சிக்கான சிறந்த உதாரணம். குறிப்பாக, குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புக்கான சிகிச்சைகளைச் சொல்லலாம். எங்களிடம் புற்றுநோய் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளில், ஆண்டுக்கு 100-ல் 70 குழந்தைகள் முழுநலம் பெற்று வெளியே செல்கிறார்கள்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

``குழந்தைகளுக்குப் புற்றுநோய் வருவதற்கான காரணமென்பது, புரியாத புதிர்தான். பெரியவர்களுக்கு வருவதற்கு வாழ்வியல் மாற்றங்கள், அதிக உடல் எடை, மோசமான உணவு முறைகள், மது-புகை போன்ற பழக்கங்கள் காரணங்களாக இருக்கின்றன. இவற்றில் எதையுமே அறியாதவர்கள் குழந்தைகள். யூகத்தின் அடிப்படையில், சில காரணங்களை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேற்கூறிய பழக்கங்கள் பெற்றோருக்கு இருப்பது குழந்தையின் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடும். குழந்தையை அதிகக் கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் சூழல் ஏற்பட்டாலும் புற்றுநோய் வரலாம். புதிதாக உருவாகும் டி.என்.ஏ என்பது, ஏதோவொரு டி.என்.ஏ-வின் நகலாகத்தான் இருக்கும். அப்படி நகல் எடுத்தலில் சிக்கல் ஏற்பட்டால், கேன்சர் உருவாகும். இதை, `Gene Mutation’ என்பார்கள்.

குழந்தைகளைத் தாக்கும் முக்கியமான புற்றுநோய்கள்:

* லுகேமியா (Leukemia) - எலும்பு மற்றும் ரத்தத்தில் வரும் புற்றுநோய் வகை.

* மூளைக்கட்டிகள்

* நியூரோப்ளாஸ்டோமா (Neuroblastoma)

* லிம்போமா (Lymphoma)

* தசை மற்றும் வயிற்றுப் பகுதியில் வருவது (Abdominal tumours, muscle and bone tumours).

சிகிச்சைகள்

கீமோதெரபி (Chemotherapy)

அறுவைசிகிச்சை

ரேடியோதெரபி

மருத்துவ கவுன்சலிங் (பெற்றோருக்கும் குழந்தைக்கும்).

குழந்தைகளுக்கான புற்றுநோய்... சில உண்மைகள்:

* பாதிப்பின் நிலையைப் பொறுத்து, பூரண குணமடைதலுக்கான சதவிகிதம் அமையும். முதல் நிலையிலேயே புற்றுநோயைக் கண்டுபிடித்துவிட்டால், எளிதான சிகிச்சைகளிலேயே குணப்படுத்திவிடலாம்.

* புற்றுநோய், தொற்றுநோய் அல்ல என்கிற அடிப்படை விழிப்புஉணர்வு பெரும்பாலான பெற்றோரிடம் இல்லை.

* மரபணு வழியான புற்றுநோய் பாதிப்பு, சிலருக்கே ஏற்படும்.

* குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்பட்டு, அது தீவிரமடைந்து கீமோதெரபி சிகிச்சை செய்யும் அளவுக்குப் போய்விட்டால், குழந்தைகள் மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ அவ்வளவு எளிதாக அவர்களைக் குணப்படுத்திவிட முடியும்.

* ரத்தப் புற்றுநோய் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் வாழ்நாள் முழுக்க ரத்த மாற்றம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. சிகிச்சைக்குப் பிறகு, மற்ற குழந்தைகள்போல இயல்பாக வளரலாம். குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை, மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

* ஜங் ஃபுட், புகை, மது போன்ற பழக்கங்களிலிருந்து குழந்தைகளை தள்ளியே வைத்திருப்பது, வளர்ந்த பிறகு அவர்களுக்குப் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உதவும்.

குழந்தைகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அறிகுறிகள்...

* கண்ணில் வெள்ளை நிற திட்டுகள் உருவாவது, பார்வைக்குறைபாடு, இமை வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

* வயிறு மற்றும் இடுப்புப் பகுதி, மூட்டு, உள்ளுறுப்புகளில் கட்டிவருவது.

* அதீதக் காய்ச்சல், உடல் எடை குறைவது/அதிகரிப்பது என திடீரென உடலில் ஏற்படும் சில மாற்றங்கள்.

* எலும்பு, மூட்டு, தசைப்பகுதிகளில் தாங்க முடியாத வலி.

* நரம்பு தொடர்பான பிரச்னைகள்.

* தொடர் வாந்தி, அடிக்கடி தலைவலி ஏற்படுவது.

* நடப்பதில் சிரமம் ஏற்படுவது.

இந்த அறிகுறிகளெல்லாம் இருப்பதால் மட்டும் ஒரு குழந்தைக்குப் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. இவையெல்லாம் இருந்தும், புற்றுநோய் ஏற்படாமலிருக்கலாம். குழந்தையின் உடலில் திடீரென ஏதேனும் மாற்றங்கள் தெரிந்து, அது தொடரும் பட்சத்தில், மருத்துவரிடம் அதைத் தெரிவித்து, அது பற்றி விரிவாகக் கேட்டறியவேண்டியது பெற்றோரின் கடமை!’’ என்கிறார் ராதாகிருஷ்ணன்.

அண்மையில், புற்றுநோய் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கான சிகிச்சைக்கு உதவும் நோக்கத்தோடு மாரத்தான் ஓட்டம் மற்றும் சைக்கிளிங் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதன் அறிமுக விழாவில், மருத்துவர் செல்வல‌ஷ்மி, ``குழந்தைகள், மிகவும் மென்மையானவர்கள். அவர்களுக்குப் பொய் சொல்லவோ, உண்மையை மறைக்கவோ தெரியாது. வலி, அழுகை, ஏக்கம் என அனைத்தையும் சிகிச்சையின்போது அப்படியே வெளிக்காட்டிவிடுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும்போது, ஒரு மருத்துவராக எங்களுடைய முழு முயற்சியோடு அவர்களைக் காப்பாற்ற முனைவேன். குறிப்பாக, கடைசிநிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டு எங்களிடம் வரும் குழந்தைகளைக் காப்பாற்ற அதிகமாகச் சிரமப்படவேண்டியிருக்கும். அப்போது மனதில் ஓடும் ஒரே ஒரு விஷயம்... 'இந்தக் குழந்தையைக் காப்பாற்றியே ஆக வேண்டும். எல்லாக் குழந்தைகளையும்போல இவனும்/இவளும் இயல்பாக ஓடி ஆடி விளையாடவும், படிக்கவும் வேண்டும். இதன் காரணமாகவே, குழந்தை என்ன நிலையில் இருந்தாலும் அப்படியே அரவணைத்து, அவர்களை அவர்களாகவே ஏற்பதுதான் ஒரு மருத்துவராக எனது தலையாய கடமை என நினைக்கிறேன்’’ என்றார்.

குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 'இதுதான் காரணம்' என வகைப்படுத்த முடியாது என்பதால், பெரியவர்கள் சந்திக்கும் புற்றுநோய்க்கு நடத்தப்படும் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளைப்போல இதற்கான நிகழ்ச்சிகள் எங்கும் நடப்பதில்லை. குழந்தைக்கு ஏற்படும் புற்றுநோயை நம்மால் தடுக்க முடியாது என்றாலும், முறையான மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சையின் மூலம் முழுமையாக குணப்படுத்திவிடலாம்.