Published:Updated:

ஆலும் வேலும் மட்டுமல்ல... கரும்பும் பல்லுக்கு உறுதியே! #Pongal

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆலும் வேலும் மட்டுமல்ல... கரும்பும் பல்லுக்கு உறுதியே! #Pongal
ஆலும் வேலும் மட்டுமல்ல... கரும்பும் பல்லுக்கு உறுதியே! #Pongal

ஆலும் வேலும் மட்டுமல்ல... கரும்பும் பல்லுக்கு உறுதியே! #Pongal

விவசாய நாடான இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெரிதும் போற்றப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல். இதை `தைத்திருநாள்’ என்று காரணப் பெயர்வைத்து அழைப்பதோடு, `விவசாயத் திருநாள்’ என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். தொடக்கத்தில் சூரியனை வணங்கத் தொடங்கி, பின் சூரியன் துணையால் கிடைத்த அறுவடைப் பொருள்களை ஆதவனுக்கே படைத்து நன்றி தெரிவித்து, அடுத்து விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விழாவாக உருவெடுத்திருப்பது பொங்கல் பண்டிகையின் வரலாற்றுப் பாதை. பொங்கல் பண்டிகை, இனிப்பு மிகுந்த சர்க்கரைப் பொங்கல், சூரியன், கிராமம், பாரம்பர்யம் எனப் பலவற்றோடு தொடர்புகொண்டிருந்தாலும், கரும்போடு அதற்கு இருக்கும் பிணைப்பு சற்றே அதிகம். பொங்கல் என்றதுமே, அனைவரது நினைவிலும் சட்டென உதிப்பது கரும்புதான். சிறப்புமிக்க கரும்பின் அருமை, பெருமைகளைப் பற்றிப் பட்டியலிடப்போகிறது இந்தக் கட்டுரை.

இனிமை தரும் கரும்பு:

கோரை மற்றும் கடைவாய்ப் பற்களால் கரும்பைக் கடித்து, அதன் மேல் தோலை சரேலென இழுத்து, நடுமத்தியை நறுக்கெனக் கடித்து, அதிலிருந்து வெளியாகும் கருப்பஞ்சாற்றைச் சுவைத்து, சக்கையைத் துப்பி கரும்பின் இன்சுவையை ருசிக்காவிட்டால் பொங்கல் பண்டிகை முழுமையடையாது. கரும்புக்காக அடுத்த பொங்கல் வரை வருடக்கணக்கில் காத்துக்கிடந்த நாள்கள் கரும்பைப்போலவே இனிமையானவை.

இனிப்பான கரும்பு வணிகம்:

வெயில் காலம் ஆரம்பித்துவிட்டால் போதும். பிழியப்பட்ட கரும்புச் சாற்றுடன் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஐஸ் கலந்து கொடுக்கும் சாலையோரக் கடைகள் பல முளைத்துவிடும். சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களிலும் கரும்பின் சாற்றுக்கு அதிகமான அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தக் கலவைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. கரும்பின் பயன்பாடு உலகம் முழுவதிலும் அதிகம். என்றாலும், கரும்பை அதிகமாக விளைவிக்கும் நாடுகளில், முதலிடம் வகிப்பது பிரேசில். நமது நாட்டுக்கு அடுத்த இடம். அதிகளவில் கரும்பை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

பல்வேறு நாடுகளில் கரும்பை மையமாகவைத்து, பல வணிகங்கள் இனிப்பாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. எரிபொருள் தயாரிப்பு… சில வகையான மதுபானங்கள் தயாரிப்பு… நாட்டுச்சர்க்கரை, வெள்ளைசர்க்கரை உருவாக்கம்… எனக் கரும்பின் பயன்பாடுகள் அதிகம். மதுபானத்துக்கு பதிலாக, கரும்புச் சாற்றை நொதிக்கச் செய்து தயாரிக்கப்படும் ஒருவகையான மதுவை பல்வேறு நாட்டு மக்கள் பயன்படுத்துகிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில், நொதிக்கவைத்த கரும்புச் சாற்றை ’பாசி’ என்று அழைக்கிறார்கள். இயற்கை பானங்களை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகள், கரும்புச் சாற்றுக்கே முன்னுரிமையளிக்கின்றன.

பதிவுகள்:

‘கரும்பிலிருந்து சாறு எடுத்து, அதிலிருந்து வெல்லம் தயாரித்து விற்பனை செய்வது அந்தக்கால மக்களின் முக்கியமான தொழில்’ என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. ஆரம்பத்தில் மனிதர்களின் உதவியுடன் பிழியப்பட்டு வந்த கரும்புகள், காலப்போக்கில் இயந்திரங்களின் உதவியைத் பெறத் தொடங்கின. இயந்திரங்களில் கரும்பைப் பிழியும் ஒலி, ஆண் யானையின் பிளிறல்போல இருந்ததாக சங்ககால நூல்கள் உவமை கூறுகின்றன. குஷானப் பேரரசு காலத்தில், கருவிகளால் பிழியப்பட்ட கரும்புச் சாறு தரம் தாழ்ந்ததாகக் கருதப்பட்டிருக்கிறது.

கடவுளின் பானம்:

ரிக்வேதம், அதர்வண வேதம் தொடங்கி பல்வேறு பழைமையான வேத நூல்களில் கரும்பு குறித்தப் பதிவுகள் இருக்கின்றன. மிகவும் பழைமையான சிந்துசமவெளி நாகரிகத்துக்கு முற்பட்ட மக்கள்கூட கரும்புச் சாற்றை, ’கடவுளின் பானமாக’க் கருதிப் பருகியிருக்கிறார்கள். ’டேரியஸ்’ எனும் பெர்ஸிய தேசத்து மன்னன், சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், கரும்பை முதன்முறையாக சுவைத்துவிட்டு, அதன் ருசியில் மயங்கி ‘தேனி இல்லாமலே உயிர்ப்பெற்றிருக்கும் தேன்’ என்று தேனுக்கு நிகராக கரும்பின் சுவையை உயர்த்தியிருக்கிறான். அந்தக் காலத்திலிருந்தே கரும்பையும் நெல்லையும் கடவுளாக மக்கள் போற்றிவந்தனர். இப்போதும் பொங்கல் திருநாளின்போது கரும்பை வணங்கும் வழக்கம் நம்மிடையே இருப்பது அதன் நீட்சியே.

கரும்புச் சாற்றின் பயன்கள்:

சங்ககாலத்தில் பயிர்களுக்கு வேலியாகக் கரும்புகள் பயன்பட்டதாக புறநானூறு பதிவுசெய்கிறது. பயிர்களுக்கு வேலியானதைப்போலவே, நோய்கள் நம் உடலைத் தாக்காமல் பாதுகாக்கும் வேலியாகவும் கரும்பு பயன்படும். ’செங்கரும் பதனற்சாறு தீர்த்திடும் பித்தமெல்லாம்’ என்ற அகத்தியர் குணவாகட பாடல்வரி, உடலில் தோன்றும் பித்தத்தைக் குறைக்க கரும்புச் சாறு அற்புதமான மருந்து என்பதை பறைசாற்றுகிறது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கு, கரும்புச் சாற்றை அருந்தும் வழக்கம் இருந்திருக்கிறது. குளிர்ச்சியுண்டாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, அழுகலகற்றி எனக் கரும்புக்குப் பல்வேறு செய்கைகள் இருப்பதாக சித்த மருத்துவம் தெளிவுபடுத்துகிறது. உடலில் தோன்றும் எரிச்சலுக்கு, கருப்பஞ்சாற்றோடு தயிர் அல்லது மோர் சேர்ந்துப் பருக, விரைவில் நிவாரணம் கிடைக்கும்! இனிப்புச் சுவை இருப்பதால், உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும் பானமாகவும் கரும்பிலிருந்து உருவாகும் சாற்றைப் பயன்படுத்தலாம். `செம்பு பற்பம்’ எனும் முக்கியமான சித்த மருந்து தயாரிக்கக் கரும்பு பயன்படுகிறது. விடாத விக்கல் பாடாகப்படுத்தும்போது கரும்புச் சாறு துணை நிற்கும்.

செரிமானம்... சிறுநீரகம்:

செரிமானத்தை அதிகரிக்க கரும்பைப் பயன்படுத்தலாம். செரிமான நொதிகளின் (Digestive enzymes) செயல்பாடுகளை கரும்புச் சாறு அதிகரிக்கச் செய்யும். செரிமானத்தைக் கெடுக்கும் பன்னாட்டுப் பானங்களுக்கு மத்தியில், கரும்புச் சாறு செரிமானத்தை உறுதியாக அதிகரிக்கும். ஈரல் தேற்றியாகச் செயல்பட்டு, கல்லீரலுக்கு ஊட்டமாக அமையும். சிறுநீரகக் கற்களை வெளியேற்ற உதவும். சிறுநீர்ப்பாதையில் கிருமி சஞ்சாரம் ஏற்படாதபடி பாதுகாக்கும். ருசித்தவுடன் உடனடியாக ஆற்றலைக் கொடுத்து புத்துணர்வுடன் செயல்படவைக்கும்.

இது, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற தாதுச்சத்துகளையும், அமினோ அமிலங்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடென்ட்களும் (Anti-oxidants) கரும்பில் அதிகம். இது, இனிப்புச் சுவையுடன் இருந்தாலும் உடனடியாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தாது. கர்ப்பகாலத்தில் உண்டாகும் வாந்தியைக் குறைக்க, அரை டம்ளர் கரும்புச் சாறு பருகலாம். ’இனிப்புச்சுவையுடன் இருக்கிறதே உடல் எடையை அதிகரித்துவிடுமோ’ என்று பயப்பட வேண்டாம். செயற்கைக் குளிர்பானங்களை அருந்துபவர்களுக்குத்தான் அந்த பயம் தேவை. சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிடலாம். சாறாக அல்லாமல் கரும்பாகச் சாப்பிடுவது சிறந்தது.

பல் மருத்துவர் கரும்பு:

அதே நேரத்தில் கடைகளில் சுகாதாரமான முறையில்தான் கரும்புச் சாறு பிரித்தெடுக்கப்படுகிறதா என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். கரும்பைச் சாறாகக் குடிப்பதைவிட, கரும்பைக் கடித்து அதன் சாற்றை விழுங்குவதில்தான் பயன்கள் அதிகம். கரும்பைக் கடித்ததுமே ஊறும் எச்சில் உங்கள் செரிமானத்தை சிறப்பாகத் தொடங்கிவைக்கும். பற்களுக்கு மிகுந்த பலமளிக்கும். பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் இயற்கையான ’பல்மருத்துவர்’ கரும்பு என்றால் மிகையில்லை. இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களுக்கு மட்டுமில்லாமல், ஈறுகளுக்கும் உறுதி கிடைக்கும். வாய்நாற்றத்தைப் போக்கவும் கரும்புச் சாறு உதவும். ஆலும் வேலும் மட்டுமல்ல... கரும்பும் பல்லுக்கு உறுதிதான்!

கரும்பிலிருந்து வெளிவரும் சாற்றை மையப்படுத்தியே இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அதன் துணைப்பொருள்களைப் பற்றிப் பேசுவதற்கு பல சுவாரஸ்யங்கள் தனியே காத்திருக்கின்றன! நாம் எதைச் சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பன்னாட்டு வணிகப்பிடியிலிருந்து விலக, தைத்திருநாள் முதல் கரும்புச் சாற்றை அதிகளவில் பயன்படுத்துவோம்! கரும்பை ஊன்றுகோலாக பயன்படுத்தி, பன்னாட்டுக் குளிர்பானங்களுக்கு எதிராக முதல் அடியை எடுத்துவைப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு