Published:Updated:

நோய் நாடி!

புற்றுநோய்... உலை வைக்கும் உணவுகள்!கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!

முக்கிய நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்து வரும் ‘நோய் நாடி’ தொடரில், புற்றுநோய் பற்றிய அடிப்படை விஷயங்களை கடந்த இதழில் பேசிய புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரும், சென்னை, சவீதா மருத்துவக் கல்லூரியின் முதல்வருமான டாக்டர் குணசாகரன், தொடர்ந்து பேசுகிறார் இந்த இதழில்.

‘‘உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் புற்றுநோய்த் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என்பதால், புற்று நோய் வகைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. எனினும், ரத்த வெள்ளையணு புற்று (ரத்தப் புற்று), கர்ப்பப்பை புற்று, வாய்ப்புற்று, தொண்டைப் புற்று, இரைப்பை புற்று, இதயப் புற்று (மிக அரிதாக வரக்கூடியது) போன்றவை அடிப்படைப் புற்றுநோய் வகைகள்.

நோய் நாடி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொதுவாக, சிகரெட், பீடி, பான்பராக் போன்ற புகையிலைப் பழக்கம் உள்ளவர்களுக்கு வாய், நுரையீரல், தொண்டைக்குழி, மூச்சுக்குழல், உணவுப்பாதை, சிறுநீர்ப்பை, கணையம், சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படுகிறது. அளவுக்கதிகமாக மது எடுத்துக்கொள்கிறவர்களுக்கு கல்லீரல் மற்றும் உணவுப் பாதை ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுகிறது. தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளாதது போன்றவை குடல் புற்றுநோய்க்குக் காரணமாகின்றன. பதப்படுத்திய இறைச்சி, உணவுப் பொருட்களை தொடர்ந்து உண்பது இரைப்பை புற்றுநோய்க்கு இலக்காக்குகிறது. தவிர, வாய், தொண்டை, நுரையீரல், இரைப்பை புற்றுநோய் ஆண்களையும், கர்ப்பப்பைப்புற்று (கிராமங்களில் அதிகம்), மார்பகப்புற்று (நகர்புறங்களில் அதிகம்), வாய், தொண்டை, இரைப்பை புற்றுநோய் பெண்களையும் அதிக இலக்காக்குகின்றன.

நம்பிக்கை நட்சத்திரம் யுவராஜ்!

நோய் நாடி!

சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்குள் அந்த நோயில் இருந்து விடுபட்டு சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு பல புற்றுநோயாளர்களுக்கும் நம்பிக்கை ஊட்டினார். யுவராஜ் மட்டுமல்ல... புற்றில் இருந்து மீண்டவர்களின் பட்டியல் மிக நீளம். எனவே, புற்றுநோய் வந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டது என முடங்கத் தேவையில்லை. அந்நோயை வெல்ல தேவை மன உறுதியும், சிகிச்சையுமே. ‘கேன்சரா? ட்ரீட்மென்ட் எடுத்தா க்யூர் பண்ணிடலாம்!’ என்ற மனநிலை வளர, பரவ வேண்டும்!’’

- அக்கறையுடன் வலியுறுத்தினார் டாக்டர் குணசாகரன்.

இலவசப் பரிசோதனை!

புற்றுநோய்க்கான பரிசோதனை முக்கிய அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கேன்சருக்கான இலவசப் பரிசோதனை கள் செய்யப்படுகின்றன. உடலின் அறிகுறிகளால் ‘கேன்சரா இருக்குமோ?’ என்ற ஐயம் ஏற்பட்டுவிட்டால், தாமதிக்காமல் உடனடியாக இந்தப் பரிசோதனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் முன் காப்பது நன்று என்பதால், முழு உடல் மருத்துவப் பரிசோதனை போல, அனைவருமே புற்றுநோய் பரிசோதனையையும் மேற்கொள்வது பரிந்துரைக்கத்தக்கது.

இலவச ஆலோசனை!

உலகில் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் மட்டும் 13% என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

நோய் நாடி!

உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பயனுள்ள தகவல்களை அமெரிக்கப் புற்றுநோய் அமைப்பின் (American Cancer Society) இணையதளம் வழங்குகிறது. இதில் ‘புற்றுநோய் அடிப்படைகள்' (Cancer Basics) எனும் தலைப்பை கிளிக் செய்தால், புற்றுநோய் ஏற்படக் காரணங்களில் இருந்து, மார்பகப் புற்றுநோய், பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய் என அனைத்து வகைப் புற்றுநோய்கள் பற்றிய தகவல்கள், செய்திகள், கண்டறியும் முறை, தடுப்பு முறை, சிகிச்சை முறை, புற்றுநோய் சொற்களஞ்சியம் என கேன்சர் தொடர்பான ஏ டு இஸட் தகவல்களும் பதியப்பட்டுள்ளன. பயன்பெற: www.cancer.org

பெண்களைத் தாக்கும் புற்றுநோய்கள் குறித்து அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.

- நோய் நாடி வெல்வோம்...

சா.வடிவரசு

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!

புற்றுநோய் வராமல் தடுக்க, வந்த பின்னும் புற்று செல்களை அழிக்கவல்ல உணவு வகைகளைத் தெரிந்துகொள்வதுடன், தினசரி உணவில் அதை வாடிக்கை யாக்குவதும் அவசியம்.

நோய் நாடி!

•  திராட்சையின் தோலில், குறிப்பாக சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவேதான், திராட்சை சாப்பிடுவது புற்று செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் என்கின்றன ஆய்வுகள். 

நோய் நாடி!

•  தக்காளியில் உள்ள விட்டமின் `சி' ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, தக்காளியில் உள்ள ‘லைகோபைன்’ வாய்ப்புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கவல்லது என்றும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

•  புரொக்கோலி, மார்பகப் புற்றுநோய்க்கான மருந்துணவு. புரொக்கோலியில் உள்ள ‘இன்டோல் 3-கார்பினோல்’, பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.

நோய் நாடி!

•  பூண்டு... குடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே, நாள்தோறும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

நோய் நாடி!

•  தினமும் கேரட் எடுத்துக் கொண்டால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படு வதைத் தவிர்க்கலாம்.

நோய் நாடி!

•  காளான், உடலில் உள்ள செல்களை வலுவாக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.

நோய் நாடி!

•  புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தி அளிப்பதில், நட்ஸ் மிகச் சிறந்த உணவு. இவற்றில் உள்ள க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும்.

நோய் நாடி!

•  பப்பாளியை தொடர்ந்து சாப்பிட, புற்றுநோய் வரும் அபாயத்தைத் தவிர்க்கலாம். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வலு தரும். தொடர்ந்து சாப்பிடும்போது, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி  வெளியேற்றும். 

•  ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும் இது ஆல்கஹால் என்பதால் அளவாகப் பருகவில்லை எனில் எதிர்விளைவுகள் ஏற்படும்.

அதிர்ச்சிப் புள்ளிவிவரம்!

உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.4 கோடி பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புதிய புற்றுநோயாளிகள் எண் ணிக்கை 70% அதிகரிக்கலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும், உலக அளவில் பாதிக்கப்படும் புற்று நோயாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் இருப்ப தாகவும் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் அபாயச் சங்கு ஊதியிருக்கிறது. மனிதர் களைப் பொறுத்தவரை, புற்று நோய்க்கு 80% - 90% சுற்றுச்சூழலே காரணமாக இருக்கிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சையும்... சில புரிதல்களும்!

•  மருத்துவத் துறையில் பெருகியுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, புற்றுநோய் குறித்த அச்சத்தை விலக்கி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. 

•  சருமப் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களை முழுவதுமாக எளிதில் குணப்படுத்திவிடமுடியும்.

•  புற்றுநோயை பொறுத்தவரையில் விரைவில் கண்டறியப்படுவதும், உடனடி சிகிச்சையும்தான் மிக முக்கியம்.

•  ஆரம்பநிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்கள் உண்மையில் அதிர்ஷ்டக்காரர்கள். உடனடியாக சிகிச்சையைத் தொடங்கி குணம் பெறலாம்.

•  ‘முதல் வாய்ப்பு... சிறந்த வாய்ப்பு!’ என்பது புற்றுநோயின் தாரக மந்திரம் எனலாம்.

•  புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின், அது எந்த நிலையென்றாலும் நம்பிக்கை இழக்காமலும், ஒரு நிமிடம்கூட தாமதம் செய்யாமலும் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.