Published:Updated:

அந்தப்புரம் - 24

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 24

நாட்கள் சென்றுகொண்டே இருந்தன. அனிதாவுக்கு ஆறு மாதங்கள் கடந்தன. ஒரே பெண் என்பதால், அனிதாவைவிட்டுப் பிரியாமல் அவரது அம்மாவும் அனிதாவுக்குத் துணையாகத் தங்கிவிட்டார். சில அசௌகரியங்கள் இருந்தாலும் குழந்தையின் அசைவுகள், அம்மாவின் கவனிப்பு என அனைத்தும் சேர்ந்து அனிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தினசரி, காலை டிபன் முதல் இரவு டின்னர் வரை விதவிதமாக சமைத்துக்கொடுத்தார் அம்மா. அனிதா, போதும் என்றாலும் ‘இரண்டு பேருக்குச் சாப்பிடணும்’ என்று சொல்லிச் சொல்லி அனிதாவுக்கு ஊட்டிவிடுவார்.

அஸ்வினும் அனிதாவிடம் மிகவும் பாசமாக இருந்தான். குறிப்பிட்ட நாட்களில் டாக்டரிடம் அழைத்துச் செல்வது, குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என ஸ்கேன் பரிசோதனை செய்வது என்று பொறுப்புள்ள கணவனாக நடக்க ஆரம்பித்தான். அனிதா எதைக்கேட்டாலும் வாங்கிக்கொடுத்தான். எந்த வேலையும் செய்யாமல், சாப்பிட்டு ஓய்வு எடுத்ததில் அனிதாவின் எடை அதிகரித்துவிட்டது. கர்ப்ப காலத்தில் இது சாதாரணம் என்று அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அந்தப்புரம் - 24

ஆனால், டாக்டர்தான், ‘எடை அதிகமானால் சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பு குறைந்துவிடும். எனவே, சில பயிற்சிகளை செய்ய வேண்டும்’ என்று பரிந்துரைத்தார். அஸ்வின், அனிதாவைத் தேர்ந்த பிரசவகால உடற்பயிற்சியாளரிடம் அழைத்துச் சென்று, சில பயிற்சிகளை செய்யவைத்தான். மூச்சுப் பயிற்சி, பாஸ்ச்சர் பயிற்சி எனப் பயிற்சிகளை செய்துவந்தாள் அனிதா.

இதற்கிடையில், அனிதாவுக்கு வளைகாப்பு செய்து, தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அதில் இருந்து எப்போது டெலிவரி எனக் காத்திருந்தாள் அனிதா.

சிசு வளர்ச்சி

ஏன்... எதற்கு... எப்படி?

இரண்டாவது மாதத்தில், எம்பிரியோ என்ற நிலையில் இருந்த கருவானது ஃபியூட்டஸ் என்ற நிலையை அடைந்திருக்கும். இப்போது குழந்தையின் எடை 25 கிராம் இருக்கும். குழந்தையின் நீளம் 6 செ.மீ அளவே இருக்கும். மூன்றாம் மாதங்களில் உள் உறுப்புக்கள் அனைத்தும் வளர்ச்சியடைந்திருக்கும். இனப்பெருக்க மண்டல உறுப்புகளும் வளர ஆரம்பிக்கும். குழந்தை இப்போது பனிக்குட (amnion) நீரால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இதனால் குழந்தைக்கு எந்த அதிர்வும் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். இந்த நேரத்தில், வயிறும் பெரிதாக ஆரம்பிக்கும். அதே நேரத்தில், அசௌகரியங்களும் அதிகரிக்கும். குழந்தையின் அசைவுகளையும் இந்தக் காலத்தில் உணர ஆரம்பிக்கலாம்.

ஆறு மாதங்கள் ஆன நிலையில், குழந்தையின் எடை ஒரு கிலோவாக அதிகரித்திருக்கும். அடுத்த மூன்று மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி நிறைவு பெற்றுவிடும். அதன்பிறகு, குழந்தை இந்த உலகத்துக்கு வரத் தயாராகிவிடும். கர்ப்ப காலத்தில் உடல்நலப் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஆரோக்கியமான தாயால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையைப் பிரசவிக்க முடியும். இதற்கு, தினசரி அதிக அளவில் சுத்தமான காற்றை சுவாசித்தபடி, நடைபயிற்சி மேற்கொண்டு, ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். டாக்டர் பரிந்துரைத்தபடி நடந்து, டாக்டர் ஆலோசனை பெற்று வந்தால், கர்ப்பகாலம் சுகமானதாகவே இருக்கும்.

- ரகசியம் பகிர்வோம்

டவுட் கார்னர்

“கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் செய்யலாமா டாக்டர்? செய்யலாம் என்றால், எந்த மாதிரியான பயிற்சிகள் செய்வது நல்லது?”

எஸ்.சுகந்தி, ஈரோடு.

“டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். கடினமான பயிற்சிகள் வேண்டாம். தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வதே மிகச் சிறந்த பயிற்சிதான். தவிர, வயிற்றுத் தசையை உறுதிப்படுத்தவும் சீரான ரத்த ஓட்டத்துக்காகவும் சுகப் பிரசவத்துக்
காகவும் சில பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மூச்சுப்பயிற்சி, பாஸ்ச்சர் பயிற்சி, ரிலாக்சேஷன் டெக்னிக் வகையான பயிற்சிகள் பரிந்துரைக்கப்படும். எல்லா பயிற்சிகளும் எல்லா கர்ப்பிணிகளுக்கும் பொருந்தும் எனச் சொல்ல முடியாது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப டாக்டர்தான் எந்த மாதிரியான பயிற்சிசெய்ய வேண்டும் என்று பரிந்துரைப்பார்.”

“என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டிய பொதுவான நலக் குறிப்புகள் ஏதேனும் உள்ளதா?”

ஆதிநாராயணன், மதுரை.

“தனிநபர் சுகாதாரம்தான் கர்ப்ப காலத்தில் மிக முக்கியமான விஷயம். தினசரி குளிக்க வேண்டும். இது, குறிப்பாக, பிறப்புறுப்பு, மார்பகத்தை நன்கு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தது வாய் சுகாதாரம்... கர்ப்ப காலத்தில் பல் ஈறுகள் மென்மைத் தன்மை அடையும். இதனால், பிரஷ் செய்யும்போதோ, கடினமான உணவை உட்கொள்ளும்போதோ ஈறுகளில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஈறுகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக நோய்த்தொற்று ஏற்படலாம். இது உடல் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்குச் செல்லலாம். எனவே, உங்கள் பல் மருத்துவரை அணுகி வாய் தொடர்பான பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தூங்க வேண்டும். வீட்டு வேலை செய்யும்போது, வெளியே செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வழுக்கலான தரை, படிக்கட்டு, எலெக்ட்ரிக் ஷாக், கதிர்வீச்சு பாதிப்பு, ரசாயனங்கள் பாதிப்பு போன்ற எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஹீல்ஸ் அணியாமல், தட்டையான அடிபாகம் உள்ள காலணிகளை அணிய வேண்டும். அதிக எடை கொண்ட பொருள் எதையும் தூக்க முயற்சிக்கக் கூடாது. இரவு நீண்ட நேரம் உட்கார்ந்து டி.வி., சினிமா பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக வன்முறை நிறைந்த காட்சிகள் கொண்ட படங்களைப் பார்ப்பதுகூட கர்ப்பிணிகளைப் பாதிக்கலாம்.”

“என்னுடைய அம்மா, எனக்கு தினமும் விதவிதமாக சமைத்துக்கொடுத்து `சாப்பிடு... சாப்பிடு’ என்கிறார். வாந்தி எடுத்தாலும்கூட, குழந்தைக்கு வேண்டும் என்று சொல்லிச் சொல்லி சாப்பிட ஏதாவது கொடுத்துக்கொண்டே இருக்கிறார். எனக்கும் குழந்தைக்கும் என நிறைய சாப்பிட வேண்டியது அவசியமா... கூடுதலாகக் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலே போதுமானதா... என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?”

சிந்துஜா, புதுச்சேரி.

“பொதுவாக பெண் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2,300 கலோரி போதுமானது. குழந்தைக்குக் கூடுதலாக 300 கலோரி தேவைப்படலாம். எனவே, தினசரி உணவில் சிறிதளவு அதிகரித்தாலே போதுமானது. உணவில், புரதம், வைட்டமின், கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட இதர தாது உப்புக்கள் நிறைய இருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட, மைதாபோல அதிகம் பக்குவம் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்த்துவிட்டு, முழு தானியங்களாக எடுத்துக்கொள்வது நல்லது. டாக்டர் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே வைட்டமின், தாதுஉப்புக்கள் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நன்கு எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதில், அந்தந்தக் காலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பாலை நன்கு காய்ச்சி அருந்த வேண்டும். கர்ப்பம் என்பது ஒரு நோய் இல்லை. எனவே, உங்கள் அன்றாட வாழ்க்கையை தொடரலாம். நேர்மறையான சிந்தனை, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் என அனைத்தும் கர்ப்ப காலத்தை மேலும் சிறப்பானதாக மாற்றும்.”