Published:Updated:

“எந்த நோய் வந்தாலும் இந்த வீடுதான் எங்களுக்கு மருந்து!” - ‘குடிசை வாசம்’ பகிரும் காளியப்பன் தாத்தா

“எந்த நோய் வந்தாலும் இந்த வீடுதான் எங்களுக்கு மருந்து!” - ‘குடிசை வாசம்’ பகிரும் காளியப்பன் தாத்தா
“எந்த நோய் வந்தாலும் இந்த வீடுதான் எங்களுக்கு மருந்து!” - ‘குடிசை வாசம்’ பகிரும் காளியப்பன் தாத்தா

சுற்றிலும் மரங்கள், நடுவே குடிசை வீடு, உடலை மென்மையாக வருடும் காற்று, இதமான சூழ்நிலை... இதற்கு விரும்பாதவர்களே இருக்க முடியாது. என்னதான் கம்ப்யூட்டர், மொபைலில் ட்வீட்டர், வாட்ஸ்அப் என ஓடிக்கொண்டிருந்தாலும் அமைதிக்கு ஏங்குகிற மனம் நம் அனைவருக்குமே உண்டு. குடிசை வாழ்க்கை வறுமையின் அடையாளம் என்றாலும், அமைதிக்கு உத்தரவாதம் தருவதும் அதுதான். குடிசையை மட்டுமே வாழ்வின் ஆதாரமாகக்கொண்டு வாழும் மனிதர்களும் நம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள். குடிசை வாழ்க்கை நிம்மதி தருவது என்பது ஒருபுறம் இருக்கட்டும்... அதில் வாழ்பவர்களின் வலி எப்படி இருக்கும்? `அப்படி ஒருவர், அதிலும் முதியவர் ஒருவரைப் பார்த்துப் பேசினால் எப்படி இருக்கும்?’ இந்த எண்ணம் தோன்றியதுமே களத்தில் இறங்கி ஒருவரைத் தேடினோம். விராலிப்பட்டியில் குடிசை வீட்டில் வசிக்கும் காளியப்பன் தாத்தா இருப்பதாகக் கேள்விப்பட்டோம். கரூரிலிருந்து வெள்ளியணை வழியாகச் சென்றால் விராலிப்பட்டிக்குப் போய்விடலாம் என்றார்கள். தாத்தாவையும் குடிசை வீட்டையும் பார்க்கக் கிளம்பினோம்.

ஊரில் ‘கூரைவீட்டுத் தாத்தா...’ என்று விசாரித்தால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. வீட்டுக்கு வழியை விசாரித்துக்கொண்டு நடந்தோம். சற்று தூரத்திலிருந்து ஒரு பாட்டுச் சத்தம் கேட்டது...

“கையில வாங்கினேன் பையில போடலை

காசு போன இடம் தெரியலை...’’

வயதான குரலாக இருந்தாலும், உச்சரிப்பும் பாடியவிதமும் நம்மை அப்படியே கட்டிப்போட்டுவிட்டன. பாடலைக் கேட்டபடி அப்படியே நின்றுவிட்டோம். எதிரில் வந்த ஒருவரிடம், “யார் பாடுறது?’’ என விசாரித்தோம். “அதுவா தம்பி... நம்ம கூரை வீட்டுக் காளியப்பன்தான் பாடுறாரு...” என்றார் அவர். குரல் வந்த திசையில் நடந்து அவர் வீட்டுக்குச் சென்றோம். அது மாலை வேளை... ஒரு ஈயத்தட்டில் பழையசோற்றை வைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் காளியப்பன் தாத்தா. சுமார் எழுபது வயதுக்கு மேல் மதிக்கத்தக்க தோற்றம். நம்மைப் பார்த்தவுடன் பாட்டை நிறுத்திவிட்டார். ஒருகணம் உற்றுப் பார்த்தார். அவசரமாக எழுந்தபடி, “நீங்கல்லாம் யாரு தம்பி?’’ என்று விசாரித்தார். நாம் அறிமுகப்படுத்திக்கொண்டதும், பேச ஆரம்பித்தார். ``கோவிச்சுக்காதீங்க தம்பி இது பழையசோறு... நேரம் ஆகிப்போச்சுனா கெட்டுப்போயிரும்... அதான் இப்பவே சாப்பிட்டுட்டேன். வீட்டுக்கு வந்தவங்களை பழையசோறு சாப்பிடச் சொல்லலாமா? அதான் உங்களை சாப்பிடச் சொல்லலை...’’ தன் வறுமையை எளிமையாகச் சுட்டிக்காட்டினார் காளியப்பன்.

“எங்களுக்கு இது சொந்த ஊரு இல்லை. எங்க ஊரு மத்தகிரிப் புதூரு. அப்போ எனக்கு மூணு வயசு. என்னோட அம்மாவுக்கு கண்டமாலை வியாதி வந்துருச்சு. அதனால அம்மாவையும் என்னையும் கூட்டிக்கிட்டு இந்த ஊருக்கு வந்துட்டாரு அப்பா. இங்கே வந்த கொஞ்ச நாள்லயே அம்மாவை கண்டமாலை வியாதி கொன்னு போட்டுடுச்சு. அது எனக்குப் பெரிய இடியா இருந்துச்சு. அப்புறமா அப்பா என்னை ஒரு தண்டகாரரு வீட்டுல வேலைக்குச் சேர்த்துவிட்டாரு. மூணு வயசுலயே சோத்துக்காகப் பண்ணையில வேலை. அங்கே அவங்க சொல்லுற வேலையெல்லாம் செய்யணும். ஆடு, மாடு மேய்க்கணும். சாணி அள்ளணும். அங்கே மூணு வேலையும் வயித்துக்குக் கஞ்சி மட்டும் ஊத்துவாங்க. காசு, பணம் தர மாட்டாங்க. எனக்கு அஞ்சு வயசு ஆனதும் பள்ளிக்கூடத்துல சேர்த்துவிட்டாங்க. மூணாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். அந்தக் காலத்துல ஒரு ரூபாய்க்குப் பதினாறு படி சோளம் தருவாங்க. திடீர்னு பஞ்சம் வந்துருச்சு. தவுசு, தானியத்துக்குத் திண்டாட்டம். என்ன பண்றதுனு தெரியலை. ஒரு படி சோளத்தை செக்குல போட்டு ஆட்டி, பெரிய மண்பானையில போட்டு கூழாட்டம் காய்ச்சுவோம். காட்டுல விளையுற பல கீரைகளைப் பறிச்சிட்டு வந்து, உப்பு மட்டும் போட்டு வேகவெச்சோம்னா போதும். அதை `அம்பளிக்கூழு’னு சொல்லுவாங்க. எங்க குடும்பம் பெருசு. மொத்தம் இருபது பேர் இருந்தோம். அதனால அந்தக் கூழும் வயித்துக்குப் பத்தாது. இப்படிக் கஷ்டப்பட முடியாதுனு, என்னைத் திரும்வும் கூட்டிட்டுப் போய் பண்ணையில விட்டாரு அப்பா. நானும் அங்கே அவங்க கொடுத்த வேலையையெல்லாம் செஞ்சேன்...’’ என்று கூறிக்கொண்டே

சொட்டு சொட்டா வேர்வையைவிட்டா

பட்டினியாப் பாடுபட்டா

கட்டுகட்டா நோட்டுச்சேருது

கெட்டிக்காரன் பெட்டியிலே - அது

குட்டியும் போடுது வட்டியிலே...

.....................

என்னைப்போல பலரையும் படைச்சு

இதுக்கும் அதுக்கும் ஏங்கவெச்சான்...

ஏழையா கடவுள் ஏன் படைச்சான்...’’

உருக்கும் குரலில் காளியப்பன் தாத்தா பாட, நாம் நெகிழ்ந்துபோய் கேட்டுக்கொண்டிருந்தோம். பாட்டிலே தன் வறுமையையும் சேர்த்துச் சொல்லியிருந்தார் அவர். மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தார்.

“படிப்படியா வளர்ந்தேன். எனக்குத் தொழில் இந்தப் பாய் முடையறது. பதினாறு வயசுல பாய் போடக் கத்துக்கிட்டேன். பதினேழு வயசுல காதல் கல்யாணம். என்னோட காதல் ஒருதலைக்காதல். தாந்தோன்றிமலை, அமராவதி ஆத்துலவெச்சுத்தான் எங்களுக்குக் கல்யாணம் ஆச்சு. அங்கே வர்ற வரைக்கும் அவளுக்குக் கல்யாணம்னு தெரியாது. வந்த பிறகுதான் நான் மாப்பிள்ளைன்னே அவளுக்குத் தெரிஞ்சுது. உடனே ``ஓ...’’னு ஒப்பாரிவெச்சு அழ ஆரம்பிச்சுட்டா. ஆத்துல போற தண்ணீரை விட அவ கண்ணுலயிருந்து மாலை மாலையாத் தண்ணீரு... அப்புறம் ரெண்டு பெரிய மனுசங்க சமாதானம் செஞ்சு கல்யாணம் பண்ணிவெச்சாங்க. இந்த ஊருக்கு வந்தோம்.

எங்களோடது காதல் கல்யாணமில்லையா..? ஊருக்குள்ள நுழைஞ்சதும், ஒரு தமிழ் வாத்தியாரு எங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு, என் முகத்துல காரித் துப்பினாரு. நானும் அவளும் ரொம்ப போயிட்டோம். ஊரைவிட்டுத் தள்ளிவெச்சது மாதிரி யாரும் பேச மாட்டாங்க. என் பொண்டாட்டி ராமாயி ஒருநாள் சொன்னா... “ஏங்க... நாம வாழறதுக்கு ஒரு வீடு வேணாமாங்க?’’னு. அப்பாவிதனமாக அவ சொன்னப்போதான் இந்த மரமண்டைக்கு அது உறைச்சது. நாலு பெரியவங்க உதவியோட இந்தக் கூரை வீட்டைக் கட்ட ஆரம்பிச்சேன். சுத்துக்கு சுத்து சுக்கா மண்ணு வெட்டிட்டு வந்து, அதைக் குழைச்சு கருங்கல்லு எடுத்துட்டு வந்து, வரிவெச்சு கட்ட ஆரம்பிச்சேன். சுவர்வெச்சேன். கூரை மேய பூசுன மரக்குச்சி வெட்டிட்டு வந்து, நாலு மாட்டு வண்டி கம்பந்தட்டை கட்டிட்டு வந்து கூலியாளுகளைவிட்டு மேய்ஞ்சோம். இப்பத்தான், புதுவீட்டுக்குப் `பாலு காய்ச்சணும்’னு சொல்றாங்க. அப்பல்லாம் மாமன், மச்சினன் யாராவது வந்து கூரை வீட்டு மேல ஏறி, சாமியக் கும்பிட்டு வெல்லம் போடுவாங்க. அதை நாங்க எடுத்துச் சாப்பிட்டா ஆண் குழந்தை பிறக்கும்னு சொல்லுவாங்க.

நாங்களும் புதுமணத் தம்பதி இல்லியா? அதை எடுத்து சாப்பிட்டுட்டு எங்க இல்லற வாழ்க்கையைத் தொடங்கினோம். பத்தே மாசத்துல ஆண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவம். ரெட்டை வீட்டு வீரம்மா சின்னாயிதான் அப்போ ஊரு வைத்தியச்சி. சின்னாயிதான் வைத்தியம் பார்த்துச்சு. அப்பறம் ரெண்டு குழந்தை பிறந்து இறந்துபோச்சு. என்னோட பொண்டாட்டியையும் தொலைக்க இருந்தேன். மெட்டராஸுல இருந்து பக்கத்து ஊர் மயிலம்பட்டிக்கு வந்த கருணாகரன் டாக்டர்தான் என் பொண்டாட்டியைப் பொழைக்கவெச்சாரு. ஒரு மாசம் கழிச்சு என்னைப் பார்த்தப்போ, “என்னய்யா... பொண்டாட்டி மாசமா இருக்குதா?’’னு கேட்டாரு. “இல்லைங்க சார்’’னு சொன்னேன். “இனி குழந்தை பெத்துக்குற வேலையை விட்டுரு. உன் பொண்டாட்டி தாங்க மாட்டா’’னு சொன்னாரு. அவர் சொன்னது மனசுல ஏறிடுச்சு. அப்போ குடும்பக்கட்டுப்பாடு பண்றதுக்கு ஆள் சேர்த்தாங்க. எனக்கு இருபத்தி அஞ்சு வயசுதான். அதனால, எனக்குப் பண்ண முடியாதுனுட்டாங்க. நானா போயி கரூர் இன்ஸ்பெக்டர் உதவியோட அரசு மருத்துவமனையில குடும்பக்கட்டுப்பாடு பண்ணிக்கிட்டேன்.

எனக்கு ஒரு பையன்தான். பேரு முத்து. பி.எட். தமிழ் படிக்கவெச்சேன். அவன் அதிர்ஷ்டமா, இல்லை என் துரதிர்ஷ்டமா தெரியலை. ஒரு தடவை தபால் மூலமா வேலைக்கான ஆர்டர் வந்துச்சு. அப்போ தபால்காரங்க போராட்டம். அதனால அந்தத் தபால் வர தாமதம் ஆகிருச்சு. இரண்டாவதா வேலை வந்துச்சு. தேர்வு எழுதித்தான் வேலைக்குச் சேரணும்னு ஆர்டர் போட்டுட்டாங்க. அவனும் எழுதி எழுதிப் பார்த்தான். பேனாவுல மை தீர்ந்ததுதான் மிச்சம். இப்போ ஒரு தனியார் பள்ளிக்கூடத்துல தமிழ் வாத்தியாரா வேலை பார்க்குறான். அவனும் என்னைப் பார்த்துக்குறது இல்லை. இந்தக் வீடுதான் எனக்கும் என் பொண்டாட்டிக்கும் துணை. வெயில் காலத்துல எவ்வளவு வெயில் அடிச்சாலும் சும்மா `குளு குளு’னு ஏ.சி-யில இருந்த மாதிரியிருக்கும். மழை பெஞ்சாதான் சிரமம். தரை முழுக்க ஒரு குண்டா பாக்கியில்லாம வெக்கவேண்டியிருக்கும். எங்களுக்கு எந்த நோய் வந்தாலும் அதுக்கு மருந்து இந்தக் கூரை வீடுதான். ஏதோ ஓய்வு ஊதியத்தொகைனு மூணு மாசமா ஆயிரம் ரூபா தந்தாங்க. அப்புறம் என்னானு தெரியலை. அதுவும் நின்னு போச்சு. இந்தப் பாய்த் தொழில்தான் வயித்துக்கு ஒருவேளை சோறு போடுது. எல்லாம் இருந்தும் நானும் என் மனைவியும் அனாதை மாதிரிதான் இங்கே வாழுறோம்’’ என்று கண்ணீர் துளிர்க்கச் சொல்கிறார் காளியப்பன் தாத்தா. ரேடியோவில் பாடலைக் கேட்டு, அதனோடு சேர்ந்து பாடி பாடக் கற்றுக்கொண்டிருக்கிறார்.

கடைசியாக இப்படிச் சொன்னார்... “இந்தக் கூரை வீடும் மண்பானைச் சோறும் செமையா இருக்கும். இப்பல்லாம் பொங்கல்னு எல்லாரும் கொண்டாடுறாங்களே... அதுவா பொங்கல்? அந்தக் காலத்துல `புல்லுசாமை’னு ஒரு தானியம் இருக்கும். அதை வறுத்து, உரல்ல போட்டு தீட்டினா வெள்ளை வெளேர்னு ஈக்கமாத்துக் குச்சி கணக்கா இருக்கும். அந்த அரிசியில பொங்கல்வெப்போம், மாட்டுப்பொங்கல் அன்னிக்கி கோயிலுக்குப் போயிட்டு வந்து, மாடுகளைக் குளிப்பாட்டி அந்த அரிசியிலதான் பொங்கல் வைப்போம். ருசி அபாரமா இருக்கும்.’’ - புன்னகையுடன் சொல்லி விடைகொடுத்துவிட்டு, தன் பாய் வேலையைத் தொடர்ந்தார் காளியப்பன் தாத்தா.