Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

வசந்தா, மதுரை.

“நாங்கள் ஹோட்டல் வைத்திருக்கிறோம். எனவே, பாத்திரம் அதிகமாகத் துலக்க வேண்டிய வேலை உள்ளது. பாத்திர பௌடரில்தான் பாத்திரம் துலக்குகிறோம். சுமார் 1:30 மணி நேரம் வேலை இருக்கும். இப்படித் தொடர்ந்து பாத்திரம் துலக்குவதால் என் அம்மாவின் காலில் சேற்றுப்புண் உண்டாகிவிட்டது. தற்போது, கால் விரல்களில் நிறையத் தசை இல்லை. சேற்றுப்புண் காலில் எல்லா விரல்களிலும் இருக்கிறது. குதிகாலில் வெடிப்பும் உள்ளது. அதிகத் தண்ணீரில் இருப்பதால் இவை உண்டாகின்றனவா... இல்லை பாத்திர பௌடரால் ஏற்பட்டிருக்குமா... இவை குணமாக என்ன தீர்வு?”

டாக்டர் சி.சங்கீதா, தோல்நோய் சிறப்பு நிபுணர், பெரம்பலூர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கன்சல்ட்டிங் ரூம்

“காலில் சேற்றுப்புண் வருவதற்கு முக்கியக் காரணம், அதிக நேரம் தண்ணீரில் இருப்பதுதான். மழைக்காலங்களில் பலருக்கும் இந்தப் பிரச்னை இருக்கும். பாத்திரம் துலக்கும்போது அதிக நேரம் தண்ணீரில் இருப்பதால், சேற்றுப்புண் ஏற்பட்டு இருக்கலாம். ஒரே நேரத்தில் அனைத்துப் பாத்திரங்களையும் துலக்கி முடிப்பது நல்லது. கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யும்போது, அதிக நேரம் கால்கள் தண்ணீரில் ஊறும். வேலையை முடித்துவிட்டு, மென்மையான துணியைக்கொண்டு கால்விரல்களையும் இடுக்குகளையும் நன்றாகத் துடைக்க வேண்டும். பிறகு, சேற்றுப்புண் வராமல் இருக்க, அதற்கான மருந்தைக் காலில் தடவிவந்தால் சேற்றுப்புண் குணமாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலில் சேற்றுப்புண் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்குத்தான் அதிக அளவு சேற்றுப்புண் ஏற்படும். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். காலில் எண்ணெய்ப் பசை இல்லை என்றால், குதிகாலில் வெடிப்பு ஏற்படும். உடலின் எடை அதிகமாக இருந்தாலும் காலில் வெடிப்பு ஏற்படும்.
வெதுவெதுப்பான தண்ணீரில், சிறிது உப்பு சேர்த்து, அதில் கால்களை வைத்திருந்து, வெடிப்புகளில் சுத்தம் செய்யும் பிரஷ்்கொண்டு சுத்தம் செய்து, அதற்கான களிம்பைப் பூசலாம்.

கன்சல்ட்டிங் ரூம்

பாத்திர பௌடர் பயன்படுத்துவதால் அதில் உள்ள ரசாயனங்கள் காரணமாக அலர்ஜி ஏற்படும். கைகள் மற்றும் கால்களில் கொப்புளங்கள் வந்து உடைந்து புண் ஆகும். காலில் வறட்சி ஏற்பட்டு, கோடு கோடாக உருவாகும். கை மற்றும் கால் விரல் இடுக்குகளும், உள்ளங்காலும் கறுப்பாக, தடிமனாக மாறி, அரிப்பு ஏற்படும். சொரிந்தால், புண்ணாக மாறும். கெமிக்கல்கள் காலில் உள்ள எண்ணெய்ப் பசையைக் குறைத்து, புண்களை உருவாக்கும். தொடர்ந்து பாத்திர பௌடர் பயன்படுத்தினால், கால் சீழ் பிடித்துவிடும். எனவே, தோல் மருத்துவரிடம் சென்று அதற்கான களிம்பு, பௌடர், மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம்.”

கே.நாகராஜ், கூடலூர்.

“எனக்கு உள் காது பிரச்னை காரணமாக, `வெர்ட்டிகோ’ (Vertigo) எனும் தலைசுற்றல் பிரச்னை ஆறு வருடங்களாக உள்ளது. ஆங்கில மருத்துவம் பார்த்ததில் அப்போதைக்குக் குணமானது. ஆனால், ஒரு வருடம் கழித்து மீண்டும் வருகிறது. இதை முற்றிலும் குணமாக்க சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளதா?”

டாக்டர் அ.சர்புன்னிசா ஜஹாங்கிர்,சித்த மருத்துவர், ஈரோடு.

கன்சல்ட்டிங் ரூம்

“நமது உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் காது மிக முக்கியமானது. நடைமுறையில் ஒருவருக்கு கிறுகிறுப்பு தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக்கோளாறு என்றுதான் பலர் நினைக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்னைக்கு காதுதான் முக்கியக் காரணமாக இருக்கிறது.

 காது பிரச்னை காரணமாக உடல் சமநிலை இழக்கும்போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமல், தலை சுற்றுவதுபோல் இருக்கும். அல்லது சுற்றி உள்ள பொருட்கள் சுற்றுவதுபோல இருக்கும். இதனை வெர்ட்டிகோ என்பர். உள் காதில் உள்ள `கானாலித்’ (Canalith) எனப்படும் கால்சியத்துகள்கள் அளவில் ஏற்படும் மாற்றத்தால், உள் காதிலிருந்து மூளைக்கு அனுப்பப்படும் அதிர்வலைகளில் ஏற்படும் சமச்சீர் குலைவே இந்தப் பிரச்னைக்குக் காரணம். மேலும், ஒற்றைத் தலைவலி, உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னை, மன அழுத்தம், தூக்கமின்மை, வைரல் தொற்றால் உள் காதில் ஏற்படும் வீக்கம் முதலிய காரணங்களாலும் வெர்ட்டிகோ பிரச்னை ஏற்படலாம்.

கன்சல்ட்டிங் ரூம்

சித்த மருத்துவத்தில் இதற்குத் தீர்வு உண்டு. நீண்ட நாட்கள் மருந்து எடுத்துக்கொண்டால், நிச்சயம் பலன் கிடைக்கும். மல்லிச்சூரணம் ஒரு கிராம் தண்ணீருடன் கலந்து அல்லது திரிகடுகச் சூரணம் ஒரு கிராம் வெந்நீரில் கலந்து அல்லது அமுக்கரா மாத்திரையைப் பாலுடன் கலந்து தினமும் இரு வேளை எடுத்துக்கொள்ளலாம். ஆறு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி மோருடன் எடுத்துக்கொள்ளலாம். மேலும், சுக்குத் தைலம்கொண்டு எண்ணெய் குளியல் எடுத்துவருதல் அவசியம்.

மாத்திரை, மருந்துகளை மட்டுமே நம்பாமல், படுத்திருக்கும்போது கண்களைச் சுழற்றுதல், கழுத்து தோள்பட்டைத் தசைகளுக்குப் பயிற்சி அளித்தல் முதலிய உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்வதும், சரியான அளவு ஓய்வும் உறக்கமும் அவசியம். புகைப்பிடித்தல், மது அருந்துதல் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை காது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.”

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம்,டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002. doctor@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.