Election bannerElection banner
Published:Updated:

பார்கின்சனை வெல்லத் தேவை நம்பிக்கை! – அறிகுறிகள், சிகிச்சைகள், வாழும் உதாரண மனிதர்! #ParkinsonsDisease

பார்கின்சனை வெல்லத் தேவை நம்பிக்கை! – அறிகுறிகள், சிகிச்சைகள், வாழும் உதாரண மனிதர்! #ParkinsonsDisease
பார்கின்சனை வெல்லத் தேவை நம்பிக்கை! – அறிகுறிகள், சிகிச்சைகள், வாழும் உதாரண மனிதர்! #ParkinsonsDisease

பார்கின்சனை வெல்லத் தேவை நம்பிக்கை! – அறிகுறிகள், சிகிச்சைகள், வாழும் உதாரண மனிதர்! #ParkinsonsDisease

னித உடலின் மிக முக்கியமான இரண்டு பகுதிகள்’ என மூளையையும் இதயத்தையும் சொல்லலாம். உயிர் இயக்கத்துக்கு இதயம் எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு உடலின் இயக்கத்துக்கு மூளை அவசியம். அப்படிப்பட்ட மூளை செயல்பாட்டுக்கு உதவுவது நரம்பு மண்டலங்கள். நரம்பு செயலிழந்தால் ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில், ‘அல்சைமர்’ (Alzheimer's disease) எனப்படும் ஞாபக மறதி முதல் இடத்திலும், ‘பார்கின்சன்’ (Parkinson) இரண்டாவது இடத்திலும் உள்ளன. அல்சைமர் பாதிப்பு, பலராலும் அறியப்பட்ட ஒன்று! அதென்ன பார்கின்சன் பாதிப்பு? நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் டோபமைன் (Dopamine) ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஏற்படும் பாதிப்புதான் பார்கின்சன்.

பார்கின்சன்

நரம்பு மண்டலத்தின் மிக முக்கியமான பாதிப்பான இது, தசை இயக்கத்தை பாதிக்கக்கூடியது. மூட்டுகள், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக குறைந்துவிடும். நிலைமை கடினமாகும்போது, நிற்பது, நடப்பது,

பொருள்களைக் கையாள்வது, உடலை பேலன்ஸ் செய்வது... என அன்றாடச் செயல்கள் பலவும் பாதிக்கப்படும். இந்தப் பிரச்னையை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், பாதிப்பின் வீரியத்தை பிஸியோதெரபி மூலம் குறைக்க முடியும்.

இதுபற்றி நியூரோ ஃபிஸியோதெரபிஸ்ட் ஃபமிதாவிடம் கேட்டோம்... "பார்கின்சன் பாதிப்பு ஏற்படுவதற்கு, வயது முதிர்வு, மரபுக்குறைபாடு, குடும்பச்சூழல் எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதுதான் காரணம் எனக் குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. பெரும்பாலும் 50 முதல் 60 வயதைத் தாண்டியவர்களுக்கு, பார்கின்சன் எளிதில் ஏற்படும். பாதிக்கப்படுபவர்களில் ஆண்கள்தான் அதிகமிருக்கிறார்கள். பார்கின்சன் தசை இயக்கத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். இந்த பாதிப்புக்கு ஆளானவர்களால் தொடர்ந்து பேசவோ, எழுதவோ, ஒரு பொருளைச் சரியாகப் பிடிக்கவோ முடியாது. கை நடுக்கம், சுருக்கமாகப் பேசுவது, முறையற்ற கையழுத்து நடை, கவனச்சிதறல் இவர்களுக்கு இருக்கும்.” என்றார்.

இந்த நோய்க்கான அறிகுறிகள் பற்றி நரம்பியல் மருத்துவர் பாலமுருகன் கூறிய தகவல்கள்:

அறிகுறிகள்:

* உடல் இயக்கம் தொடர்பான பிரச்னைகள் - கை, விரல் நடுக்கங்கள், உடலியக்கம் மாற்றம், மிக மெதுவாகச் செயல்களைச் செய்தல், கூன் விழுவது போன்ற உணர்வு, நடப்பதில் சிக்கல் போன்றவை.

* ஆற்றல் பிரச்னைகள் - உடலில் திடீரென எந்தச் செயல்களையும் சரியாகச் செய்ய முடியாமல் சக்தி குறைந்துபோவது.


* தகவல் பரிமாற்றம் தொடர்பான பிரச்னைகள் - பேசுவது, எழுதுவதில் பிரச்னை. பேசும்போது கோர்வையாக வார்த்தை வராமல் தடுமாறுவது. எழுதும்போது எழுத்து வழக்கம்போல் இல்லாமல், கிறுக்கலாக விழுவது.

* தூக்கப் பிரச்னைகள் - அரைத் தூக்கத்தில் விழித்துக்கொள்ளுதல், தூக்கமின்மை போன்றவை. 

* பார்வைப் பிரச்னைகள் - எதிரில் இருக்கும் பிம்பங்களைப் பார்க்கும்போது, படிக்கும்போது சரியாகப் புலனாகாமல் இருத்தல்.
இவையெல்லாம், பொதுவான சில அறிகுறிகள். சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும்.

சிகிச்சை:

இதற்கான சிகிச்சை ஃபிஸியோதெரபிதான். கொலோரடோ மருத்துவப் பள்ளி (Northwestern Medicine and the University of Colorado School of Medicine) நடத்திய அண்மைய ஆய்வில், இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தீவிரமாகப் பயிற்சியும் சிகிச்சையும் கொடுத்து வந்தால், பாதிப்பு அதிகரிப்பதைத் தடுக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு, டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிப்பதுதான். மாத்திரைகள், எல்டோபா (L-Dopa) முறைகள் மூலம் அவற்றை வலிந்து உற்பத்தி செய்வது, மூளைக்கு அதிக வேலை கொடுக்கப்பட்டு அதன்  உற்பத்தியை அதிகரிப்பது என இரு வழிகள் உள்ளன. மருந்து வகை சிகிச்சை ஒருபக்கமும், பிஸியோதெரபி மற்றொரு பக்கமும் மேற்கொள்ளப்படும். உடற்பயிற்சி என்றவுடன், எடை தூக்குதல், நடைப்பயிற்சி என்று நினைத்துவிட வேண்டாம். தசை வலிமைக்கான சில பயிற்சிகள் மட்டுமே இவர்களுக்கு அளிக்கப்படும். 

தசைக்கான பயிற்சிகள் பற்றி ஃபிஸியோதெரபிஸ்ட் ஃபமிதா கூறும்போது,

"* பிடிமானத்திலும் நடையிலும் பிரச்னை இருக்குமென்பதால், ஒரு பொருளை கையில் எடுத்து, நடந்துசென்று வேறோர் இடத்தில்

வைப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

* எழுத எழுதக் கையெழுத்தை சிறிதாக்கிக்கொண்டே வரும் பழக்கம் இவர்களுக்கு இருக்குமென்பதால், நிறைய எழுதச் சொல்லி வலியுறுத்தப்படும். பேனா பிடித்து எழுதும்போது, பிடிமானமும் கிடைக்கும்

* கண்ணை மூடிக்கொண்டு என்ன செய்யச் சொன்னாலும், இவர்கள் சிரமப்படுவார்கள். கண்ணை மூடிக்கொண்டு மூக்கைத் தொடச் சொல்வது, நேராக நிற்கச் சொல்வது, பொருள்களைக் கைகளில் பிடித்துக்கொள்வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

* பேசும்போது, ஓரிரு வார்த்தையில் பேசி முடிக்கும் பழக்கம் இவர்களுக்கு இருக்கும். எனவே, பேசும் பயிற்சிகள் அளிக்கப்படும்." என்றார்.

சிகிச்சை முறையின் நோக்கத்தைச் சுருக்கமாகச் சொன்னால், 'அதிக உழைப்பு, குறைவான ஓய்வு!' ஓய்வு அதிகம் கொடுத்துவிட்டால், அடுத்த செய்கைக்கு இவர்கள் தயாராக மாட்டார்கள். அப்படியான தொடர் ஓய்வு, இவர்களை எளிதில் முடக்கிப்போட்டுவிடும். பிஸியோதெரபி பார்கின்சனுக்கான முழுமையான தீர்வாக இருக்காது என்றாலும், பாதிப்பு மேலும் தீவிரமடையாமல் தடுக்க உதவும். முதல் நிலைகளிலேயே பார்கின்சன் கண்டறியப்பட்டு, இதுபோன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அவர்கள் உயிர்ப்புடன் செயல்படலாம். இவை மட்டுமன்றி, மூளையில் அறுவைசிகிச்சை ஒன்றைச் செய்வதன் மூலம், பாதிப்பின் வீரியத்தைக் குறைக்கலாம். என்றாலும் அது ஆபத்தாக முடியக்கூடும் என்பதால், பெரும்பாலான மருத்துவப் பரிந்துரையில் அறுவைசிகிச்சை இருப்பதில்லை.

நம்பிக்கை மனிதர்!

பார்கின்சன் பாதிப்பின் வளர்ச்சி, சம்பந்தப்பட்ட நபரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். சிலர் வேகமாக பாதிக்கப்படுவார்கள். இன்னும் சிலருக்கு மெள்ள மெள்ள பாதிப்பு ஏற்படும். அப்படி, பார்கின்சனில் இருந்து மீண்டுகொண்டிருக்கும் ஒருவர்தான் ரங்கராஜன். 1996ம் ஆண்டு வரை மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவந்த இவர், 1996-ம் ஆண்டுக்குப் பிறகு பாதிப்புக்குள்ளானார். 2011-ம் ஆண்டில் இதற்கான அறுவைசிகிச்சையையும் செய்துகொண்டார். பாதிப்பு ஏற்பட்டவுடன், சோர்ந்துவிடாமல், பல்வேறு தளத்தில் இருந்தும் நோய் பற்றிய தகவல்களைத் திரட்டினார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, மாத்திரைகளின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும், அறிகுறிகள் என்னென்ன என பார்கின்சன் பற்றி 360 கோணத்தில் இருந்தும் யோசித்து அனைத்துத் தகவல்களையும் திரட்டி அதனைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார். கணினி மூலம் மின் சமிக்ஞை செய்ய உதவியாக இருக்கும் பேஸ்மேக்கரைக் கண்டறியத் தொடங்கிய கணம் முதல், இந்தக் கணம் வரை பார்கின்சன் தொடர்பான இவருடைய தேடல் நீண்டுகொண்டே இருக்கிறது. இப்போது, பார்கின்சன் தாக்கத்துக்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட உளவியல், உடல் மாற்றங்கள், பார்கின்சனின் பாதிப்புகள் என்னென்ன, பார்கின்சன் என்றால் என்ன - இப்படி ஏராளமான தகவல்களைத் திரட்டியுள்ள ரங்கராஜன், விரைவில் புத்தக வடிவில் அதை வெளியிடயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சுயக்குறிப்பில் ரங்கராஜன் தன்னைப் பற்றிக் கூறும்போது, ‘எனது பயமெல்லாம் நான் எங்கே செடி, கொடிகள்போல ஆகிவிடுவேனோ என்பதுதான். என் மனமும் அறிவும் நோயால் சிறிதும் பாதிக்கப்படாமல் இருந்தன. அவற்றை அப்படியே வைத்துக்கொள்வது எனக்கு முக்கியமாகப்பட்டது. வெறிபிடித்தவன்போல எழுதித் தள்ளினேன். இரண்டு ஆங்கில நாவல்களை எழுதினேன். அதில் ஒன்றைத் தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறேன். வாழ்ந்துதான் ஆக வேண்டும், நோய்க்கு அடிபணிந்துவிடக் கூடாது என்ற எண்ணம் தீவிரமாக இருந்ததால்தான் இது சாத்தியமானது’ எனக் குறிப்பிட்டுள்ளார். மருந்து, மாத்திரை, அறுவைசிகிச்சைகளைவிடவும், ரங்கராஜனை இன்று வரை உயிர்ப்போடுவைத்திருப்பது, அவரின் நம்பிக்கையும் தைரியமும்தான்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு