Published:Updated:

‘உலகின் டாப் 10 காற்று மாசு இந்திய நகரங்களில் உங்கள் நகரம் இருக்கிறதா?!’ - #AirPollution

‘உலகின் டாப் 10 காற்று மாசு இந்திய நகரங்களில் உங்கள் நகரம் இருக்கிறதா?!’ - #AirPollution
‘உலகின் டாப் 10 காற்று மாசு இந்திய நகரங்களில் உங்கள் நகரம் இருக்கிறதா?!’ - #AirPollution

சாலைகளில் நடப்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பேருந்தின் ஜன்னலோர இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள்... அனைவரும் புழுதிக் குளியல் மேற்கொள்வது, இன்றைய புழுதி யுகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வு! இருபது வருடங்களுக்கு முன்னர், இன்டர்நெட் கேபிள் புதைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் தொடங்கி, இப்போதைய பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டப்படும் குழிகள் வரை, பல்வேறு காரணங்களுக்காக சாலைகள் பிளக்கப்படுவது வாடிக்கை. சாலைகளில் ‘டிங்கரிங்’ வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன. தார்ச் சாலைகள் ஆங்காங்கே பிளக்கப்பட்டு, மண்சாலைகளாக மாறிப் புழுதியைப் பெருமளவில் கிளப்பிவிடுகின்றன. இது நிலப்பகுதியில் என்றால், வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளின் புகை, பிளாஸ்டிக் எரியூட்டப்படுவதால் வரும் புகையென காற்று மாசுபடுவதற்கு பல்வேறு காரணங்கள்.

`ஹாய்...’ சொல்லும் குப்பைகள்!

இப்போதைய சூழ்நிலையில், ஆடி மாதக் காற்று வீசும் சமயத்தில் ஆனந்தமாகக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு சாலைகளில் நடந்து இயற்கையோடு அளவளாவ முடியுமா? காற்றின் தீண்டலை மட்டும் தனியாக உணர முடியுமா? நிச்சயமாக முடியாது. காற்றோடு சேர்ந்து மண், பிளாஸ்டிக் கவர்கள், கிழிந்த காகிதங்கள் என அனைத்தும் நமது தேகத்தை தீண்டி, ’ஹாய்’ சொல்லிவிட்டு செல்லும் அளவுக்குக் காற்று மாசு அதிகம். கண்ணுக்குத் தெரியாத பல நுண் துகள்கள், நாசி வழியாக சுவாசப்பாதைக்குள் சென்றுகொண்டேதான் இருக்கின்றன. நம்மைச் சுற்றி வளையம் அமைத்திருக்கும் மாசுகளோடுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கட்டுரைப் போட்டி தொடங்கிய காலம் முதல் இப்போது நடக்கும் கட்டுரைப் போட்டி வரை, ‘காற்று மாசு’ என்ற தலைப்பு இல்லாமல் இருக்காது. எனவே, காற்று மாசு எப்படி ஏற்படுகிறது என்று அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்தக் கட்டுரை பேசப்போவது மாசு ஏற்படுத்தும் காரணிகளை அல்ல... அது உண்டாக்கும் விபரீதங்களை!

தலைநகர் உணர்த்திய பாடம்

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி வீரர்கள், காற்று மாசு காரணமாக முகமூடி அணிந்து பந்துவீசியது மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது. இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, நாம் விழித்துக்கொள்ளவேண்டியது அவசியம். சில வாரங்களுக்கு முன்னர், காற்று மாசைக் குறிக்கும் அளவீடு, நமது தேசிய தலைநகரத்தில் உச்சத்தைத் தொட்டது. இதனால் ஆரோக்கியமாக இருப்பவர்களும் பெரிதளவில் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். தலைநகரம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களில் இந்த நிலைதான். இது தொடர்ந்தால் என்ன செய்யப்போகிறோம் நாம்?

இந்தியாவும் சீனாவும் அனைத்திலும் உச்சம்!

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகம் முழுவதிலும் இருக்கும் முதல் இருபது மாசுபட்ட நகரங்களில், பத்து நகரங்கள் இந்தியாவில் இருக்கிறதாம். மீதிப் பத்தில் மூன்று நகரங்கள் சீனாவில்! காற்று மாசு காரணமாக அதிகம் உயிரிழப்பு ஏற்படும் நாடுகளில், இந்தியாவும் சீனாவும் கைக்கோர்க்கின்றன. காற்று மாசுபாட்டைத் தடுக்க, போர்க்கால நடவடிக்கையாக சீன அரசு பல வகைகளில் முயற்சி செய்துவருகிறது. ‘காற்று மாசுபாட்டுக்கு எதிராகப் போர்த்தொடுக்க வேண்டும்’ என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார் சீனப் பிரதமர். இந்தியாவுக்கு எதிராகப் போர்த்தொடுக்க எண்ணுவது மறுபக்கம்! `நிலக்கரி பயன்பாட்டை வரும் ஆண்டுகளில் குறைக்க வேண்டும்’ என்பது அவர்களின் முக்கியமான இலக்கு. அதிகப் புகை வெளியிடும் வாகனங்களுக்கு அபராதம் முறையாக விதிக்கப்படுகின்றன. நமது நாட்டிலும், அதிகப் புகை வெளியிடும் வாகனங்களுக்கு அபராதம் உண்டு. ஆனால், கொஞ்சம் வெளியே சாலையில் வாக்கிங் போய்விட்டு வாருங்கள்… கரும்புகை கக்கும் பல வாகனங்கள் சிரித்துக்கொண்டே செல்வதைப் பார்க்க முடியும். சீனாவின் முயற்சிக்குப் பலனாக கடந்த சில ஆண்டுகளில் காற்று மாசுக் குறியீடு சற்று குறைந்துள்ளதாகவும் தகவல். ஆனால், நம் நாட்டில் திட்டங்கள் பெயரளவில் இருக்கின்றவேயொழிய, முழுவதுமாக நடைமுறையில் இல்லை. இப்போது பாரதப் பிரதமரே எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாட்டுமக்களை அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. `அதிகரித்திருக்கும் மாசைக் குறைக்க, சீனாவைப் பார்த்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்கின்றனர் அறிஞர்கள். எப்போது கற்றுக்கொண்டு எப்போது தடுப்பது?

மூளைக்குள் மாசு

இவ்வளவு நாள்களாக நுரையீரல் சார்ந்த நோய்கள் மட்டுமே வரும் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், இப்போது காற்று மாசு கைவைத்திருப்பது மனித மூளையில்! அதிகரித்துவரும் காற்று மாசு, பச்சிளம் குழந்தைகளின் மூளையை வெகுவாக பாதிப்பதாக யூனிசெஃப் (UNICEF) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்டதைவிட பல மடங்கு காற்று மாசு அதிகமுள்ள நாடுகளில் பல மில்லியன் குழந்தைகள் ஜீவிக்கின்றனர். அதிலும் தெற்காசிய நாடுகளில்தான் அவர்கள் அதிகம். மூளைக்குள் நச்சுப்பொருள்கள் நுழைவதைத் தடுக்க உதவும் தடுப்பு (Barrier), காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டு, பிற்காலத்தில் மறதி, நரம்பு சார்ந்த நோய்கள் வருவதற்கு பாதை அமைத்துக்கொடுப்பதாகக் கூறப்படுகிறது. கனரக வாகனங்களிலிருந்து வெளியாகும் Polycyclic aromatic hydrocarbons, மூளையைப் பாதித்து, குழந்தைகளின் அறிவாற்றல், ஞாபக சக்தி, மொழித்திறன் போன்றவற்றைக் குறைக்கிறதாம். குழந்தைப்பருவத்தில் அதிகக் காற்று மாசினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களது வாலிபப் பருவத்தில் மனம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்பது வெகு சமீபத்திய செய்தி.

நுரையீரல் சுருங்குகிறது!

மாசு குறைவாக உள்ள நாடுகளைச் சார்ந்த குழந்தைகளின் நுரையீரலைவிட, காற்று மாசு அதிகமாக உள்ள பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் நுரையீரல் சிறியதாக இருப்பதாக `Journal of Indian Pediatrics’-ல் வெளியான ஆய்வுக் கட்டுரை அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் கொலைகார ஆயுதமாக காற்று மாசு வளர்ந்திருக்கிறது என்பதை உணரவேண்டிய தருணம் இது. அதிகக் காற்று மாசு சுவாச உறுப்புகளின் செல்களைப் பாதிக்கும், சுவாசப்பாதையை சுருக்கி, மூச்சுவிடுவதில் சிரமத்தை உண்டாக்கும். நுரையீரல் மற்றும் இதயச் செயல்பாட்டைக் குறைத்து, வாழ்நாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். நுரையீரல் ஆற்றல் குறைவதால், பிராண வாயு செறிவு உடல் முழுவதும் குறைந்து பாதிப்புகளை உண்டாக்கும். நைட்ரேட்கள், சல்பேட்கள், உலோகங்கள் கலந்த புகையில் உள்ள நுண் துகள்கள், உடலின் இயற்கை எதிர்ப்பையும் மீறி (இருமலுக்கும் தும்மலுக்கும் கல்தா கொடுத்துவிட்டு), நுரையீரலின் நுண்ணிய காற்றுப்பைகளையும் தாண்டி ரத்தத்தில் கலந்து விபரீதங்களை ஏற்படுத்தும். சுவாச உறுப்புகளில் உண்டாகும் எரிச்சல் தொடங்கி, புற்றுநோய் வரை கொண்டுசெல்லும். மிகச்சிறிய மண்துகள்கள் மற்றும் வாகன டயர்களிலிருந்து சிதறும் நுண்ணிய ரப்பர் துகள்களை அதிகம் சுவாசிப்பதால், பத்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், ஆஸ்துமா (இரைப்பு நோய்) நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது நாட்டின் சூழலை யோசித்துப் பாருங்கள்! எவ்வளவு புழுதி! எத்தனை வாகனங்கள்! அடுத்த தலைமுறைக்கு நோய்களைக் கொடுக்கும் நோய் உற்பத்தி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

Air Quality Index (AQI):

‘Air Quality Index’ (காற்று மாசுக்கான அளவீடு)… ஒவ்வொரு பகுதியிலும் தினமும் எவ்வளவு இருக்கிறது என்று வலைதளங்களில் தெரிந்துகொள்ளலாம். உங்கள் பகுதியின் Air Quality Index (AQI) தேடிப்பாருங்கள். அதிர்ச்சிகளும் அதிசயங்களும் காத்திருக்கின்றன. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது, சென்னையின் AQI 104 - நோயாளிகளுக்கு ஆபத்தான அளவு! டெல்லியின் AQI 275 - அனைவருக்குமே ஆபத்து! மும்பையில் AQI 344 - கதவுகளைச் சாத்திக்கொண்டு, வீட்டோடு இருக்கவேண்டியதுதான்!

`கொட்டாவி- தும்மல்’ எனும் அதிசயம்

மாசு நிறைந்த சாலையில் செல்லும்போது, கொட்டாவி வந்துவிட்டால் அவ்வளவுதான். சுற்றியிருக்கும் அனைத்து மண் துகள்களும் நமது வாய் மற்றும் நாசிகளுக்குள் புகுந்துவிடும். கொட்டாவி முழுமை பெறுவதற்கு முன்பாகவே, நாசிக்குள் சென்ற புழுதித் துகள்கள் தும்மலை வரவழைக்கலாம். கொட்டாவியோடு தும்மலும் சேர்ந்து உண்டாகும் மிகப்பெரிய அதிசயமும் நமது உடலில் ஏற்படலாம். கொட்டாவியா, தும்மலா… எதைச் செயல்படுத்துவது என்று குழம்பும் மூளையின் நிலையோ பரிதாபத்துக்குரியது.

எதிர்காலத்தில்… 24 மணிநேரமும் முகமூடி அணிந்து நடமாடவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். புகைப்பழக்கம் இல்லாமலேயே புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல்போல அனைவரது நுரையீரலும் மாறலாம்! காற்று மாசுபடுவதால் மனிதர்கள் மட்டுமன்றி தாவர, விலங்கினங்களும் பாதிக்கப்பட்டு உணவுச் சங்கிலியும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அல்லது பாதிப்புகளை உண்டாக்கும் உணவுச் சங்கிலியாக மாறக்கூடும்!