Published:Updated:

கோழிக்கறி முதல் ஜீன்ஸ் பேன்ட் வரை... குழந்தையின்மை அதிகரிக்கச் செய்யும் காரணங்கள்! #Infertility

கோழிக்கறி முதல் ஜீன்ஸ் பேன்ட் வரை... குழந்தையின்மை அதிகரிக்கச் செய்யும் காரணங்கள்! #Infertility
கோழிக்கறி முதல் ஜீன்ஸ் பேன்ட் வரை... குழந்தையின்மை அதிகரிக்கச் செய்யும் காரணங்கள்! #Infertility

“இறுக்கும் ஜீன்ஸ் பேன்ட், ஹார்மோன் ஊசி போட்ட கறிக்கோழி, கொலஸ்ட்ரால் நிறைந்த ரீஃபைண்டு ஆயில்... இவையெல்லாம் குழந்தையின்மைக் குறைபாட்டுக்கு மிக முக்கியக் காரணங்கள்’’ என்று எச்சரிக்கை மணியடிக்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம். இது குறித்துக் கொஞ்சம் விரிவாகவே விளக்குகிறார்...

``இன்றைக்குக் குழந்தையின்மைப் பிரச்னை அதிகரித்திருக்கிறது. ஒருகாலத்தில். குழந்தையின்மைக்குப் பெண்களே காரணம் என்று

அவர்கள்மீது பழிபோட்டார்கள். உண்மையில் இந்தக் குறைபாட்டுக்கு ஆண், பெண் இருபாலருமே காரணமாக இருக்கிறார்கள். முதலில்  ஆண்களுக்கு இந்தக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

இன்றையச்சூழலில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மனிதன் உறங்கும் நேரத்தையே மாற்றிவிட்டன. ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு செயல்திறன் உண்டு. ஆணைப் பொறுத்தவரை இரவு, நள்ளிரவு, விடியற்காலை நேரங்களில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில்தான் ஆணின் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படும். ஆனால், இன்றைக்கோ இரவு, நள்ளிரவு வேளைகளில்கூட கம்ப்யூட்டர் பணியில் ஈடுபடுகிறார்கள் ஆண்கள். இன்னும் பலர் டி.வி பார்ப்பது, செல்போனில் பொழுதுபோக்குவது என அந்தப் பொழுதை வேறு வழியில் செலவழிக்கிறார்கள். இதனால் ஓர் ஆண் உணவு உண்ணும் நேரம், உறங்கும் நேரம் எல்லாமே மாறிவிடுகிறது. இதனால் உடல் இயக்கமும் மாறுகிறது.

உணவைப் பொறுத்தவரை அசைவ உணவு ஆண்மைக்கு வலு சேர்க்கக்கூடியது. இன்றைக்கோ, கோழிக்கறி சாப்பிடும் ஆண்களுக்கு ஆண் தன்மையே பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கறிக்கோழிகளின் செல்களை வேகமாக வளர வைக்க, அதன் எடையை அதிகரிக்க ஈஸ்ட்ரோஜென் ஊசி போடுகிறார்கள். ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன்; அந்த ஹார்மோனை ஊசி மூலம் செலுத்தி வளர்ந்த கோழியைச் சாப்பிட்டால் என்னவாகும். மேலும், அந்தக் கோழிக்கு முழுமையான பெண்மைத் தன்மையும் கிடையாது. அந்தக் கோழியால் முட்டை போட முடியாது. கறிக்காக மட்டுமே வளர்க்கப்படும் அந்தக் கோழியைச் சாப்பிடும் ஆண், பெண் இருவருக்கும் இதனால் பிரச்னையே ஏற்படும்.

பொதுவாக, எந்த உணவு ஊட்டம் அளிக்கும் என்ற புரிதல் இல்லாமலேயே நாம் கண்டதையும் சாப்பிடுகிறோம். காய்கறிகளில் விதையுள்ள வெண்டை, முருங்கை போன்றவற்றைச் சாப்பிட்டால் வீரியம் கூடும். நாமோ பெரும்பாலும் விதையில்லாத உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றையே அதிகமாகச் சாப்பிடுகிறோம். இதனால் விந்தணு உற்பத்தியாவதில் சிக்கல் ஏற்படுகிறது. 


‘எண்ணெய் கொலஸ்ட்ரால் நிறைந்தது, அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டாம்’ என்று சொல்கிறார்கள். இன்றைக்கு வந்திருக்கும் ரீபைண்டு ஆயில், பாமாயில் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் மட்டுமல்ல.. நம் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய், தேங்காயில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய், கடலையில் இருந்து எடுக்கப்படும் கடலை எண்ணெய் போன்றவை நம் உடல்நலனுக்கு நல்லவை. இந்த எண்ணெய்கள் விந்து உற்பத்திக்கும் உதவக்கூடியவை.

இன்றைக்கு நெய் ஆகாத பொருளாகிவிட்டது. உண்மையில் நெய் பிறப்பு உறுப்பிலுள்ள ரத்தக்குழாய்களில் உள்ள வலிமையைக் கூட்டக்கூடியது. குழந்தைப் பருவத்தில் நிலாவைக்காட்டி பருப்புடன் நெய் சேர்த்து ஊட்டுவார்கள். அந்த அம்மாக்களையெல்லாம் பால் பவுடர்களை ஊட்டவைத்துவிட்டன பன்னாட்டு நிறுவனங்கள். 

நமது தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உடை வேட்டி. அதை அணிந்தால் காற்றோட்டமான சூழலில் இருக்கலாம். விதைப்பை தளர்ச்சியாக இருக்கும்படியான உள்ளாடைகளை அணிவதே நம் தமிழர் மரபு. ஆனால் இன்றைக்கு, பேன்ட் அணிகிறோம். காட்டன் பேன்ட் போட்டால்கூட பரவாயில்லை. இடுப்பை இறுக்கும் ஜீன்ஸ் பேன்ட்டுகளையே அதிகம் பயன்படுத்துகிறோம். வேலைச்சூழல் காரணமாக நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பது, ஏ.சி-யில் அமர்வதால் உள் உறுப்புகள் சூடாகிவிடும். இதையெல்லாம் பல மருத்துவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் `டெஸ்டோஸ்டீரான் (Testosterone) குறைந்துவிட்டது’ என்று மிக எளிதாகச் சொல்லிவிட்டு சிகிச்சை எடுக்கச் சொல்லிவிடுவார்கள்.

சூரிய ஒளி உடம்பில்பட்டாலே டெஸ்டோஸ்டீரான் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், முழுக்கை சட்டை அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செல்வது, சூரியஒளி புகாத இருட்டறையில் நாள் முழுக்க இருப்பதே பெரும்பாலான ஆண்களின் பழக்கமாகிவிட்டது. எண்ணெய்க் குளியல் எடுக்காததும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம்தான். அதிகச் சூடுள்ள உடலில் உயிரணுக்கள் நிலைத்து நிற்காது. எண்ணெய்க் குளியல் உடல் சூட்டை சமநிலைப்படுத்தி உயிரணுக்கள் வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஆண்மைக் கோளாறுகளைச் சரிசெய்ய ஜாதிக்காய், அமுக்கரா சூரணம் போன்ற ஏராளமான மருந்துகள் உள்ளன. ஆனால், சமூக மாற்றம் வராமல் மருந்துகளை மட்டும் சாப்பிட்டுப் பயனில்லை. ஒட்டுமொத்தமாக நம் பாரம்பர்யத்தை மீட்டெடுத்தால்தான் எல்லோரும் நலமாக வாழ முடியும்.

பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் வளர்ப்பு முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். பருவமடைந்த பெண்களுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்துவதை ஒரு கலாசார விழாவாகவே கொண்டாடினார்கள். அதில் ஆழமான அறிவியல் உண்டு. மஞ்சள் கிழங்கை அரைத்து தலையில் ஊற்றும்போது அது அவர்களுக்கு ஓர் கவசமாக இருக்கும். அதனாலேயே தெய்வங்களுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்வது இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது. ஆனால், இன்றைக்கு மஞ்சளை சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்.
சமையலுக்குப் பயன்படுத்துவதுபோல குளியலுக்கென உள்ள மஞ்சளைப் பயன்படுத்தினால் தோலில் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்யலாம். தோல், மஞ்சளில் உள்ள மருத்துவத் தன்மையை உள்வாங்கிக்கொண்டு பெண்மை தன்மையை மேம்படுத்தும்.

பருவமடைந்த பெண்களுக்கு உளுந்தங்களி, நல்லெண்ணெய் சேர்த்துக் கொடுப்பார்கள். கார் அரிசிப் புட்டும், நல்லெண்ணெயில் உளுந்தவடை செய்து கொடுப்பதும் வழக்கமாக இருந்திருக்கிறது. நலுங்கு வைப்பதும் அந்தக் காலத்தில் வழக்கில் இருந்தது. வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு போன்றவை சேர்ந்த நலுங்கு மாவைப் பூசி மேலே சொன்ன உணவுகளை உண்ணக் கொடுப்பதன் மூலம் பெண்கள் நல்ல உடல் வளம் பெறுவார்கள். இது தமிழர் கலாசாரத்தில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. 

சிறப்பு உணவுகளாக கற்றாழை லேகியம் கொடுப்பார்கள். கற்றாழைக்கு `குமரி’ என்ற பெயரும் உண்டு. அந்த அளவுக்குப் பெயரிலேயே குமரியைக் கொண்ட கற்றாழையைப் பூப்பெய்திய பெண்களுக்குக் கொடுப்பதால் அது மாதவிடாய் பூப்பு அழற்சியை ஒழுங்குபடுத்தும். இது மெட்டபாலிசத்தைச் சரிசெய்யும். சர்க்கரைநோய், மூலம், கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.

இன்றைக்கு வளரிளம் பெண்களுக்கு சிவப்பணுக்கள் குறைவாக உள்ளன. மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, 15 நாள்கள் இடைவெளியில் மாதவிடாய் ஆவது, நீண்டநாள் மாதவிடாய் வராமல் இருப்பது போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன. இதுபோன்ற குறைபாடுகள் வராமலிருக்க எள், உளுந்து போன்றவற்றில் சாதம் செய்து சாப்பிடுவது, கீரைகளை அதிகம் சாப்பிடுவது, மாதுளம்பழத்தை சாப்பிடவேண்டியது அவசியம். இவை மாதவிடாய் சுழற்சி உண்டாக பெரிதும் உதவும்.

பெண்களுக்கு ஏற்படும் உடல்சூட்டால் வெள்ளைப்படுதல் ஏற்படும். இந்த வெள்ளைப்படுதலாலும் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம். பெண்களின் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று காரணமாக விந்தணுக்கள் உயிரிழக்க வாய்ப்பு உண்டு. இதுபோன்ற சூழலில் சாதாரண படிகாரத்தைப் பொடியாக்கி, தண்ணீரில் கரைத்துக் கழுவினால், கிருமிகள் அழிக்கப்பட்டுவிடும். இப்போதெல்லாம் தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு பிறப்புறுப்பில் நோய்க்கிருமிகள் உண்டாகி பாதிப்பு ஏற்படுகிறது.

நமது தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உடைகளைப் பெண்கள் அணிய வேண்டும் என்று நம் பாரம்பர்ய தமிழர் கலாசாரத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்டது. தாவணி, புடவை உடுத்துவது இடுப்புப் பகுதியில் உள்ள வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கர்ப்பப்பையின் தசைகள் லகுவாக சம்மணம் போட்டு தரையில் அமர்வது, பாண்டி ஆட்டம் ஆடுவது போன்ற விளையாட்டுகள் உதவும். எண்ணெய்க் குளியல், காய்கறிகள், பழங்கள், மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களை அதிகம் அருந்த வேண்டும். சிலர் `சீஸ்' சாப்பிடுகிறார்கள். அது நம் பெண்களுக்கு ஆகாது. அதற்குப் பதில் நெய் சாப்பிடலாம்.

குழந்தைப்பேறு என்பது இயற்கையான நல்ல உடல்நலம், மனநலத்துடன் நடக்கவேண்டிய ஒன்று. ஆனால், இன்றைக்கு அது வியாபாரமாகிவிட்டது. கர்ப்பப்பையில் வளரவேண்டிய குழந்தையை குடுவையில் வளர்க்கிறார்கள். டெஸ்ட் டியூப் பேபி முறையில் குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள். எது எதற்கெல்லாமோ வங்கி தொடங்கியவர்கள் இன்றைக்கு விந்தணுவுக்கு வங்கி தொடங்கும் அவலம் நேர்ந்திருக்கிறது. இயற்கை முறைப்படி வாழ்ந்தால், இயற்கையாக, எந்தச் சிரமமும் இல்லாமல் குழந்தை பெறலாம்'' என்கிறார் மருத்துவர் வேலாயுதம்.