வைட்டமின் சீக்ரெட்ஸ் - 8

பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின்களில் முக்கியமானது நியாசின். இது நீரில் கரையக்கூடிய வைட்டமின். இந்த வைட்டமின் உடலில் நடக்கும் வளர்சிதைமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நியாசினை `வைட்டமின் பி3’, `நிகோடினிக் அமிலம்’ என்றும் சொல்வார்கள். மனிதர்களின் தோல் ஆரோக்கியம், மூளைச் செயல்பாடு போன்றவற்றுக்கு நியாசின் தேவை. உடலில் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் அழற்சி, எரிச்சல், வீக்கம் (Inflammation) போன்றவற்றை நியாசின் தடுக்கிறது. உணவுச் செரிமானத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. வறுமையான சூழலில் வாழ்கிற, ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கு நியாசின் குறைபாடு காணப்படுகிறது.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் வைட்டமின்

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தாலே, பல உடல்நலக் குறைபாடுகள் வரத் தொடங்கிவிடும். உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய் எனப் பல நோய்கள் வரிசைகட்டும். கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்குப் பயன்படுத்தும் மருந்துகளில், நிகோடினிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையாகவே நிகோடினிக் அமிலம் உள்ள உணவுகளைச் சிறிதளவு உணவில் சேர்த்துவந்தால், உடலில் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பது தடுக்கப்படும். நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால், இதயம் பலப்படும்.  கொலஸ்ட்ரால் குறையும் என்பதற்காக, நியாசினை மருத்துவர் பரிந்துரை இன்றி மாத்திரைவடிவத்தில் வாங்கிச் சாப்பிடக் கூடாது. இது அளவுக்கு அதிகமானால், கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஆல்கஹால் வேண்டாம்!

ஆல்கஹால் நிறைந்த பானங்கள் அருந்துவது, டீ, காபி போன்றவற்றை அதிகமாகக் குடிப்பது, உடலுறவுக்குப் பின்னர் கரு உருவாவதைத் தடுக்கும் மாத்திரைகளைப் பயன்படுத்துவது, அதிக அளவு ஆன்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடுவது போன்றவற்றால், நியாசின் வைட்டமினின் செயல்பாடுகள் பாதிக்கும். எனவே, இத்தகைய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 8

நியாசின் குறைபாடு

உடலில் சக்தி குறைதல், வயிற்றுப்போக்கு, இன்சோம்னியா எனும் தூக்கமின்மை நோய், ஒற்றைத் தலைவலி, நினைவுத்திறன் குறைவது, பயம், பதற்றம், மன அழுத்தம், எரிச்சல் உணர்வு, முகப்பரு, சொறி, சிரங்கு, ரத்தக்கசிவு போன்றவற்றுக்கு நியாசின் குறைபாடு முக்கியக் காரணமாக இருக்கிறது.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 8

- பு.விவேக் ஆனந்த்

நியாசினை எப்படிப் பெறுவது?

நியாசின், அசைவ உணவுகளில்தான் அதிக அளவு நிறைந்திருக்கிறது. பொதுவாக, சமைக்கும்போது பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களில் பெரும்பாலானவை நீங்கிவிடும்; நியாசின் மட்டும் விதிவிலக்கு. ஆனால்,  இந்தியமுறையில் சமைக்கும்போது, 25 சதவிகிதம் நியாசின் நீங்கிவிடுகிறது. எனவே, நியாசின் நிறைந்த உணவுகளை நீராவியில் வேகவைத்து உட்கொள்வது நல்லது. மீனில் அதிக அளவு நியாசின் இருக்கிறது. எனவே, மீனை நன்றாகச் சுத்தப்படுத்தி, நீராவியில் வேகவைத்து அளவாகச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மீன்களைச் சாப்பிடக் கொடுக்கலாம்.

பெல்லாக்ரா பயங்கரம்

1906-ம் ஆண்டு முதல் 1940 வரை அமெரிக்கா முழுவதுமே பெல்லாக்ரா நோயால் கடுமையாகப் பாதிப்படைந்தது. சுமார் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சம் நோயாளிகள் இறந்தனர். நியாசின் சத்துக் குறைபாடு காரணமாக, ஊட்டச்சத்துக்களைக் கிரகிக்கும்தன்மை குறைந்ததால், இந்த நோய் வந்தது. பெல்லாக்ரா நோய் ஏற்பட்டால், தோல் செதில் செதிலாகப் புண் ஆகும். தோல் சிவந்து காணப்படும். உடல் முழுவதும் இந்தப் புண் ஏற்படும். தவிர, முடி உதிர்தல், வயிற்றுப்போக்கு, ஞாபகமறதி, இதயம் பலவீனமடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மக்காச்சோளத்தை பிரதான உணவாக உட்கொள்ளும் நாடுகளில், நியாசின் குறைபாடு அதிக அளவில் உள்ளது. நமது ஊரைப் பொறுத்தவரையில், பெல்லாக்ரா பிரச்னை பெரிய அளவில் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism