Published:Updated:

இனி எல்லாம் சுகமே - 1

செரிமான மண்டலம்! ஆச்சர்யங்கள் அறிவோம்!புதிய பகுதி

இனி எல்லாம் சுகமே - 1

செரிமான மண்டலம்! ஆச்சர்யங்கள் அறிவோம்!புதிய பகுதி

Published:Updated:
இனி எல்லாம் சுகமே - 1

று இட்லி சாப்பிட்டதும் `போதும், சாப்பிடுவதை நிறுத்திக்கொள்வோம்’ என மூளை எப்படி உணர்கிறது? அம்மா முகம் கோணக் கூடாது என அடுத்து ஓர் அதிரசத்தையும் உள்ளே தள்ளிக்கொள்ளும் அதிசயத்தை வயிறு எப்படி நிகழ்த்துகிறது?

உணவின்றி நிலைக்காது உயிர். அது தரும் உரமின்றி வளராது நம் உடல்.இயற்கையின் கட்டளைப்படி, நாம் பிறந்ததிலிருந்து தொடர்ந்து எதையாவது சாப்பிட்டபடி இருக்க வேண்டும். நாம் உயிர்வாழ இன்றியமையாதது, நாம் சாப்பிடும் பொருளை உடலுக்கு ஏற்றபடி மாற்றி, சக்கையை வெளியேற்றும் பணி. இதை, சாத்தியமாக்குவது நம்  உடலில் இருக்கும் செரிமானப் பாதை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாயில் உள்ள பற்களைத் தாண்டிய பிறகு, தசைகளால் மட்டுமே நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ள, மென்மையான நீள்குழல் நம் செரிமானப் பாதை. ஆறடி மனிதருக்குள் சுருண்டு படுத்திருக்கும் இதன் மொத்த நீளம் எவ்வளவு தெரியுமா? 30 அடி!

இந்த 30 அடி ஜீரண மண்டலத்தை,  வாய், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், பித்தப்பை, கணையம், பெருங்குடல் என எட்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். இந்த எட்டு பகுதிகளும் கூட்டணி போட்டுத்தான் செரிமானத்தைச் சாத்தியமாக்குகின்றன.

இனி எல்லாம் சுகமே - 1

ஒரு சராசரி மனிதனின் வாழ்நாளில், இந்த எட்டு பகுதிகள் கூட்டு சேர்ந்து கையாளும் மொத்த உணவின் அளவு எவ்வளவு தெரியுமா?   ஒரு லட்சம் முதல் ஏழு லட்சம் கிலோ உணவு! இந்த உணவை அநாயசமாக அரைத்து, சத்தைக் கிரகித்து, சக்கையை வெளியே தள்ளி நமக்காக ஓயாமல் பணியாற்றுகிறது  தசைக்குழாய்.

30 அடி நீளம்கொண்ட இந்த பாதையின் உள் மடிப்புகள், உறிஞ்சிகள்  எல்லாவற்றையும் விரித்துப் பார்த்தால், அகலத்தில் 100 சதுர மீட்டருக்கும் மேலே இருக்கும். ஏறக்குறைய ஒரு ரக்பி விளையாட்டு மைதானம் அளவு!

பரப்பளவில் நம் தோலைவிட பன்மடங்கு பெரிதாக இருப்பது நம் செரிமானப் பாதைதான். வாயில் தொடங்கி மலத்துவாரம் வரை நம்முள் இருப்பது நம் பிரபஞ்சத்தின் ஒரு விள்ளல். நம் உடலுக்கு உள்ளே இருக்கும் பெரிய உலகம் நம் ஜீரண மண்டலம். இதற்குள் பல்லாயிரம் கோடி பாக்டீரியா நம்முடன் ஒன்றிணைந்து குடித்தனம் நடத்துகின்றன. கோடிக்கணக்கான நரம்பு செல்கள், அதன் இழைகள் பிணைந்து குடலுக்கும் மூளைக்கும் பாலமாக செயலாற்றுகின்றன.

செரிமானப் பாதையில் நம் உணவு போகும் பயணத்தை, ஒரு பொழுதுபோக்குப் பூங்காவின் ரோலர்கோஸ்டர் சவாரிக்கு ஒப்பாகச் சொல்லலாம். ஒரு நாளில் சுமார் எட்டு லிட்டர் ஜீரணத் திரவங்களை நம் ஜீரணப்பாதை சுரந்து சாப்பிடும் உணவோடு கலக்கிறது. முதலில் வரும் உமிழ்நீர்  உணவை வழுவழுப்பாக்குகிறது. அதில் இளகிய உணவு,  வாயில் அரைபட்டு, நாக்கு மற்றும் தொண்டை வழியாக  விழுங்கப்பட்டு  உணவுப்பாதையின் உந்து அசைவால் வயிற்றுக்குள் செல்கிறது.

வயிற்றில் அமிலம் சுரந்து, சிறுகுடல், பெருங்குடல் வழியாக உணவில் இருக்கும் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, செரிமானம் ஆகி, சக்கைகள் மலக்குடல் வழியாக வெளியே தள்ளப்படுகின்றன.

வாய் முதல் பெருங்குடல் வரை உள்ள எட்டு பகுதிகளும் எப்படி செயல்படுகின்றன... எப்படி உணவு செரிக்கப்படுகிறது... எந்தப் பிரச்னை வந்தால், இந்த  திட்டமிட்ட சுகப் பயணம் அல்லோலப்படுகிறது...  செரிமானத்தில் ஒரு சின்ன பிரச்னை வந்தாலும், நாம் சுணங்கிவிடுவது ஏன்... வயிற்றின் அமிலம் ஏன் நெஞ்சாங்கூட்டில் ஏறுகிறது என உணவு செரிமானம் தொடர்பாக நமக்குள் எத்தனை எத்தனை கேள்விகள். அத்தனைக்கும் பதில்களை அடுத்தடுத்த இதழ்களில் பார்க்கலாம்.

- ஆச்சர்யம் விரியும்

மேற்கத்திய நாடுகளில், ஒரு மனிதன் வாழ்நாளில் ‘லபக்’குவது சுமார் 500 கோழி, 70 ஆடு, 8 மாடு, 10,000 முட்டை, 18,000 லிட்டர் பால் வகையறா எனக் கணக்கிடுகிறார்கள். காய்கறிகள், அரிசிச் சோறு சாப்பிடும் நம்மவர்கள்,  எவ்வளவு சாப்பிடுவார்கள் என நீங்களே உங்கள் ‘வயிற்றுக்கணக்கை’ போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

மருத்துவர் பாசுமணி: சென்னை ஸ்டான்லி கல்லூரியில் இளநிலை படிப்பையும், புதுச்சேரி ஜிப்மரில் முதுநிலை மருத்துவமும் படித்தவர். அதன் பின்னர் செரிமான மண்டலம் குறித்து  மீண்டும்  மேல் படிப்பையும், பயிற்சியையும் லண்டனில் முடித்து அங்கே மருத்துவ பேராசிரியராகவும், மருத்துவராகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னை, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் வயிறு மற்றும் இரைப்பை மண்டலத்துறை தலைவராகப் பணியாற்றிவருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism