Published:Updated:

அந்தப்புரம் - 25

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 25

ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
அந்தப்புரம் - 25

ழை பெய்து ஓய்ந்திருந்தது. ஆனாலும், வானம் சற்று இருட்டாக இருந்தது. ‘இன்றாவது நின்றுவிடும் என்று பார்த்தால், இப்படி அடித்து ஊற்றுகிறதே?’ கால் வலியுடன் கவலையும் சேர்ந்துகொண்டது. வெளுக்குமா வானம் என நினைத்தபடி காத்திருந்தாள் மாலினி.

காதல்... திருமணம் எல்லாம் அவள் நினைவில் ஓடின. பி.இ படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் மாலினிக்கு வேலை கிடைத்தது. படித்து முடித்ததும் பெங்களுரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். சில மாதங்கள் சென்ற நிலையில், அவளுடைய டீமில் புதிதாக வேலையில் சேர்ந்தான் மகேந்திரன். நட்பில் தொடங்கி, காதலில் வந்து நின்றது. மாலினி சென்னைக்கு மாற்றல் வாங்கி வரவே, மகேந்திரனும் சென்னைக்கு மாற்றலாகி வந்தான். இவர்கள் காதலுக்கு, மகேந்திரனின் பெற்றோர் பச்சைக்கொடி காட்டினர். ஆனால், மாலினியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், ஒருவழியாக சமாதானம் ஏற்பட்டது; ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணமும் நடந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருவரும், பல வண்ண வண்ணக் கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்தனர். திருமணம் முடிவானதுமே, அலுவலகத்துக்குச் செல்ல வசதியாக புறநகர் பகுதியில், ஒரு தனி வீட்டை வாங்கினர். திருமணம் ஆனதும், அங்கே இருவரும் குடியேறினர். இருவருக்கும் நல்ல சம்பளம் என்பதால், வீட்டை அழகான கலைப்பொருட்களைக்கொண்டு அலங்கரித்தனர். வீடு, கார், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்திலும் நிறைவாக இருந்தது வீடு. `விரைவில் நமக்குக் குழந்தை பிறக்க வேண்டும்’ என்ற ஆசையில், குழந்தைகள் படங்களாக வீட்டில் வாங்கி மாட்டினர். குழந்தை விஷயத்தில் அவர்களின் ஆசை தாமதமாகிக்கொண்டிருந்தது. `இந்த மாதம் எப்படியும் குழந்தை தங்கிவிடும்’ என ஒவ்வொரு மாதமும் ஆவலுடன் காத்திருப்பார்கள். ஆனால், ஏமாற்றமே மிஞ்சும். மாலினிக்கு மிகச் சரியான முறையில் மாத சுழற்சி வந்துவிடும். `குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படுவது ஏன்?’ எனக் குழம்பினாள் மாலினி.

அந்தப்புரம் - 25

ஏன்... எதற்கு... எப்படி?

மாலினி கருத்தரிக்காமல் இருக்க என்ன காரணம்... குறை மாலினியிடமா, மகேந்திரனிடமா?

மேலே கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் தெரிய வேண்டும் என்றால், குழந்தைப்பேறு பற்றிய உண்மைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். திருமணம் ஆனதும் பெரும்பாலான தம்பதிகளால் உடனடியாகக் கருத்தரிக்க முடிகிறது. இருப்பினும், 100-க்கு 15 தம்பதிகளால் குழந்தைப்பேற்றை அடைய முடிவது இல்லை. அந்த, 15 தம்பதிகளுக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அது சற்று தாமதம் ஆகிறது. தற்காலிகமாகக் குழந்தைப்பேறு அடைய முடியாத நிலையில் இருந்தால், அதை `இன்ஃபெர்ட்டிலிட்டி’ என்று அழைக்கிறோம். அதுவே, அவர்களால் குழந்தையைப் பெறவே முடியாது என்ற நிலையில் இருந்தால், `ஸ்டெர்லிட்டி’ என்கிறோம்.

கருத்தரிக்க முதலில் செய்ய வேண்டியது, ஒவ்வொரு மாதமும் கருமுட்டை வெளிப்படும் காலத்தில் உடலுறவுவைத்துக்கொள்வதுதான். அப்போதுதான், விந்தணு கருமுட்டையைச் சென்றடையும். அப்படி, விந்தணு கருமுட்டையை அடையும்போதுதான் கருத்தரிப்பு நடக்கும். இரண்டாவதாக, பெண்ணின் இனப்பெருக்க உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆணிடமிருந்து வரும் விந்தணுவைத் தன்னகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, விந்தணு, கருமுட்டையை அடைந்து, கருஉருவாக்கும் திறனுடன் இருக்க வேண்டும். இந்தச் செயல்பாடுகள் எல்லாம் நல்லபடியாக நடந்த பிறகு, கருவானது கர்ப்பப்பையை அடைய வேண்டும். அங்கு, அது பதிந்து வளர்வதற்கான சூழல் இருக்க வேண்டும்.

- ரகசியம் பகிர்வோம்

டவுட் கார்னர்

“எங்களுக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. என்னுடைய மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறுகிறார். டாக்டரிடம் சென்றால், முதலில் யாருக்குப் பரிசோதனை செய்வார்கள்... எனக்கு என்ன மாதிரியான பரிசோதனை செய்யப்படும்?”

கே.துரைராஜ், மதுரை.

“இருவருக்குமே பரிசோதனை செய்வார்கள். கணவன், மனைவி இருவருக்கும் ஒரே நேரத்தில் பரிசோதனை செய்வதன் மூலம், நேரம் வீணாவது தடுக்கப்படும். உங்களுக்கு ‘செமன் அனாலிசிஸ் (Semen Analysis) பரிசோதனை’ செய்யப்படும். இது மிகவும் எளிய மற்றும் வழக்கமான பரிசோதனைதான். பரிசோதனை முடிவைப் பொறுத்து, மேலும் பரிசோதனைகள் தேவைப்படுமா, இல்லையா என்பதை டாக்டர் முடிவுசெய்வார். அதாவது, உங்களுக்கு விந்தணு போதுமான அளவில், ஆரோக்கியமாக இருக்கிறது, வேகமாக நகர்கிறது என்றால், உங்களுக்கு வேறு பரிசோதனை பரிந்துரைக்கப்பட மாட்டாது. ஆனால், போதுமான அளவு இல்லை, ஆரோக்கியமாக இல்லை எனில், ஹார்மோன் சுரப்புக்கள் எப்படி உள்ளன எனக் கண்டறிய, ரத்தப் பரிசோதனை செய்யப்படும். இதில், டெஸ்டோஸ்டிரான், எஃப்.எஸ்.ஹெச், எல்.ஹெச், புரோலாக்டின் போன்ற ஹார்மோன் அளவு பரிசோதிக்கப்படும். மேலும், டெஸ்டிக்குலர் பயாப்சி, வாசோகிராபி, ஆன்டிஸ்பெர்ம் ஆன்டிபாடி பரிசோதனை, டாப்ளர் மற்றும் செமன் கல்ச்சர் உள்ளிட்ட பரிசோதனைகளுக்குப் பரிந்துரைக்கப்படலாம்.

பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரான், எஃப்.எஸ்.ஹெச், எல்.ஹெச் மற்றும் புரோலாக்டின் ஹார்மோன் பரிசோதனைகள், போஸ்ட் காய்ட்டல் டெஸ்ட் (Post coital test - Sims Huhner), பாஸல் பாடி டெம்ப்ரேச்சர், எண்டோமெட்டீரியல் பயாப்சி, ஃபெலோபியன் குழாய் சரியாக உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனை, இனப்பெருக்க மண்டலத்தை ஆய்வுசெய்ய அல்ட்ரா சவுண்ட், மாதச் சுழற்சி எப்படி உள்ளது எனக் கண்டறிய ஃபாலிக்குலர் ஸ்டடி போன்ற பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.”

“ `திருமணமான மூன்று மாதங்களுக்குள் கருத்தரிப்பு நடந்துவிடும்’ என்கிறார்களே... இது உண்மையா?”

எம்.பழனிச்சாமி, சேலம்.

“இதில் உண்மை இல்லை. தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்துதான் கருத்தரித்தல் நடக்கும். எனவே, இதை யாராலும் கணிக்க முடியாது. திருமணமான ஓராண்டில் தம்பதியர் குழந்தைப்பேறு அடைய 70 முதல் 80 சதவிகித வாய்ப்பு உள்ளது.”

“எனக்குத் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகின்றன. இதுவரை குழந்தை இல்லை. எவ்வளவு நாள் வரை காத்திருக்கலாம்... எப்போது டாக்டரை அணுகி ஆலோசனை பெறலாம்?”

ஆர்.கல்யாணி, சென்னை.

“திருமணம் ஆகி, ஓர் ஆண்டு காலம் வரை காத்திருக்க வேண்டும். இந்தக் காலத்தில் எந்தக் கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தவில்லை; ஆனாலும் கருத்தரிக்கவில்லை எனில்,  டாக்டரை அணுகி ஆலோசனை பெறலாம். 35 வயதைக் கடந்த தம்பதி என்றால், ஆறு மாதங்களுக்குப் பிறகு டாக்டரை அணுகி ஆலோசனை பெறலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism