Published:Updated:

ஆரோக்கியம் காக்க ஆயில் புல்லிங்

ஆரோக்கியம் காக்க ஆயில் புல்லிங்

ஆரோக்கியம் காக்க ஆயில் புல்லிங்

ஆரோக்கியம் காக்க ஆயில் புல்லிங்

Published:Updated:
ஆரோக்கியம் காக்க ஆயில் புல்லிங்

ற்கள் நமக்கு முக்கியமா? நிச்சயமாக!  உயிரையும் உடலையும் வளர்க்கும் உணவு செரிமானம் ஆகிற காரியம் பற்கள் இல்லாமல் நடைபெறாது. செரிமானம் எனும் செயல்பாட்டின் முதல் படிநிலை பல்தான். பல் போனால் சொல் மட்டும் போகாது. உடலும் உயிருமே ஆட்டம் கண்டுவிடும். காலையில் எழுந்ததும் பல் துலக்குவது மட்டுமே பற்களின் பராமரிப்புக்காக நாம் செய்யும் ஒரே மெனக்கெடல். ஆனால், அது மட்டுமே போதாது. பற்களைக் காக்க ‘ஆயில் புல்லிங்’ எனும் எண்ணெய் கொப்பளிப்பு செய்வது மிக நல்லது. ஆயில் புல்லிங் பற்களின் பராமரிப்புக்கு மட்டும் பயன்படுவது அல்ல; முழு உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதிலும் இதன் பங்களிப்பு அதிகம்.

ஆயில் புல்லிங் எப்படி வேலை செய்யும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உணவை நன்கு மென்று உண்ணும்போது, பற்களின் மேலேயும் ஈறு மற்றும் பல் சேரும் இடத்திலும் துணுக்குகள் படியும். இந்த இடத்தில் கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். பற்களை சரியான முறையில் தூய்மை செய்யவில்லை என்றால், வாய் துர்நாற்றம், பல் வலி, பல் அரிப்பு, பற்குழி, சொத்தை, ஈறு வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதால், வாயில் உள்ள பெரும்பாலான கிருமிகள் வெளியேற்றப்பட்டு, இந்தப் பிரச்னைகள் வராமல் தவிர்க்கப்படுகின்றன. உணவு உண்டவுடன் பற்களில், மெலிதான காரை படரும். அதனை அப்படியே விடும்போது, மேலும் மேலும் அந்தப் படிவம் சேர்ந்து, கடினத்தன்மையை அடையும். இதுவே பின்னாளில் பற்காரையாக மாறிவிடும். காலப்போக்கில் பல்லை வலுவிழக்கவும் செய்துவிடும். எண்ணெய் கொப்பளிப்பு செய்வதன் மூலம், காரை உண்டாகாமல் தவிர்க்கலாம். தவிர, அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதையும் உணரலாம்.

ஆரோக்கியம் காக்க ஆயில் புல்லிங்

எப்படிச் செய்வது?

வாயில் கொப்பளிக்கும் அளவுக்கு அதாவது 5 முதல் 10 மி.லி எண்ணெயை வாயில் ஊற்றி, 5 முதல் 10 நிமிடங்கள் வரையில் நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். வலப்பக்கம், இடப்பக்கம், முன் பற்கள் என எல்லாத் திசைகளிலும் எண்ணெய் ஊடுருவிச் செல்லும்படி கொப்பளிக்க வேண்டும். அப்போது,  பற்களின்  இடைவெளிகளில் எண்ணெய் செல்வது உணரப்பட வேண்டும். நன்றாகக் கொப்பளிக்கும்போது, எண்ணெய் அதன் பிசுபிசுப்புத்தன்மையை இழந்து, நீர்போல மாறிவிடும். பிறகுதான், துப்ப வேண்டும். அதன் பிறகு, பிரஷ் செய்ய வேண்டும்.

எப்போது செய்யலாம்?

இரவு உணவுக்குப் பின்னர், பற்கள் சில மணி நேரங்களுக்கு ஓய்வாக இருக்கும். வாயில் ஊறும் எச்சில், பற்களில் உள்ள அழுக்குகளின் மீது வினைபுரிந்து சுத்தமாகத் தயாராக இருக்கும். எனவே, காலையில் எழுந்தவுடன், எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் எண்ணெய் கொப்பளிப்பு செய்வது நல்லது. அவ்வாறு செய்யும்போது, பலன்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிலருக்கு எழுந்தவுடன் நீரில் வாய் கொப்பளிக்கும் பழக்கம் இருக்கும். சிலர் எழுந்ததும் பல் துலக்கிவிடுவர். இந்த இரண்டையும் செய்யும் முன்னரே, எண்ணெய் கொப்பளிப்பு செய்வது நல்லது.

எந்த எண்ணெய் நல்லது?

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையுமே பயன்படுத்தலாம். ஆனால், ரீஃபைண்டு எண்ணெயாக இல்லாமல், சுத்தமானதாக இருக்க வேண்டும்.

நல்லெண்ணெயாக இருந்தாலும், கடையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிலவற்றில் வேதிப்பொருட்கள் கலந்திருக்கும். எனவே, பார்த்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

அதேபோல், கடையில் தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் விற்கப்படுபவற்றில், தேங்காய் எண்ணெய் வாசனை உள்ள வேதிப்பொருட்கள்தான் அநேகம். இவற்றைப் பயன்படுத்துவதால், பற்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். முடிந்த அளவு, செக்கில் ஆட்டிய எண்ணெய் அல்லது நம்பகத்தன்மை உள்ள எண்ணெயை வாங்கிப் பயன்படுத்துவதுதான் நல்லது.

குழந்தைகள் எண்ணெய் கொப்பளிக்கலாமா?

எண்ணெய் கொப்பளிப்பு செய்ய வயது வித்தியாசம் கிடையாது. பற்கள் முளைத்த குழந்தைகள்கூடச் செய்யலாம். எண்ணெயை வாயில் வைத்து கொப்பளிக்கத் தெரிந்திருந்தால் போதும். குழந்தைகளுக்கு இதனைச் சொல்லிக்கொடுத்து, வழக்கப்படுத்துவதால், அவர்களின் பற்கள் பலமாகவும், நோய்த்தொற்று ஏற்படாமலும் இருக்கும். குறிப்பாக, பற்சொத்தை வராமல் தவிர்க்கப்படும்.

 - ப்ரீத்தி

என்னென்ன பலன்கள்?

எண்ணெய் கொப்பளிப்பு செய்வதால், வாய்ப்புண் சீக்கிரம் ஆறும். வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்து.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாடு, சரியான தூக்கமின்மை, மனஅழுத்தம் ஆகியவை வாய்ப்புண் ஏற்பட முக்கியக் காரணங்கள். குறிப்பாக, தேர்வுக் காலங்களில், மாணவர்களுக்கு வாய்ப்புண் அதிகமாக ஏற்படும். அந்தச் சமயங்களில், எண்ணெய் கொப்பளிப்பு செய்வது, புண் உண்டாகாமல் காக்கும்.

நீண்ட நாட்களாக ஆறாத புண், வலி இல்லாத புண்ணாக இருந்தால், வாய் புற்றுநோய் வரை கொண்டுசெல்லும். அத்தகைய அபாயங்கள் ஏற்படாமல் தவிர்க்க, எண்ணெய்  கொப்பளிப்பு அருமருந்தாகச் செயலாற்றும்.

வாயை நன்றாகக் கொப்பளிப்பதால், முகத்தில் உள்ள அனைத்துத் தசைகளும் இயங்கும். இதனால், முகச்சுருக்கம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

பற்கள் மட்டும் இன்றி, உடல் நலத்திலும் அக்கறைகொண்டோர் எண்ணெய் கொப்பளிப்பு செய்வதைத் தவறவிடக் கூடாது.