Published:Updated:

உணவுக்கு முன்னர் சூப் அருந்துவது ஆரோக்கியமானதா? - மருத்துவர்கள் கருத்து!

உணவுக்கு முன்னர் சூப் அருந்துவது ஆரோக்கியமானதா? - மருத்துவர்கள் கருத்து!
உணவுக்கு முன்னர் சூப் அருந்துவது ஆரோக்கியமானதா? - மருத்துவர்கள் கருத்து!

ம் ­ஹோட்டல் மெனுகார்டுகளின் ஸ்டார்ட்டர்களில் முதலிடம் சூப் வகைகளுக்குத்தான். உணவுக்கு முன்னர் சூப் குடித்தால், பசி தூண்டப்படும் என்று சொல்லப்படுவதும் ஒரு காரணம். மேற்கத்திய நாடுகளில் இதை 'க்ளியர் சூப்', 'திக் சூப்' என இருவகையாகப் பிரித்துவைத்திருக்கிறார்கள். சைவம், அசைவம் இருவகைகளிலும் சூப் கிடைக்கிறது. வெதுவெதுப்பாக, இளஞ்சூட்டில் பரிமாறப்படும் சூப்பின் சுவைக்கு ஈடில்லை. நட்சத்திர ஹோட்டல்கள் முதல் தெருவோரக் கடைகள் வரை அனைத்து இடங்களிலும் கிடைக்கும் சூப் வகைகளை உண்மையிலேயே சாப்பாட்டுக்கு முன்னர் சாப்பிடுவது ஆரோக்கியமானதுதானா... நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்... ஒரு நல்ல சூப் எப்படி இருக்க வேண்டும்... இந்தக் கேள்விகளை ஊட்டச்சத்து நிபுணர் ஜெயந்தியிடம் முன் வைத்தோம். அவர் கூறிய விளக்கங்கள் இங்கே...


நன்மைகள்...
* இதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஏராளம். காய்கறிகள் மட்டும் சேர்த்து சமைக்கப்படுவதில் ஒரு கப்பில், 50 முதல் 100 கலோரி கிடைக்கும். நன்கு காய்ச்சப்பட்ட காய்கறி சூப்பில், கார்போஹைட்ரேட் 15 கிராம்; நார்ச்சத்து 5 கிராம்; சர்க்கரை 3 கிராம் இருக்கும். சேர்த்துக்கொள்ளும் காய்கறியைப் பொறுத்து, வைட்டமின் சத்துகள் அமையும். 

* இது, `லோ கிளைசெமிக்' (Low Glycemic Foods) உணவு. எனவே, பசியின்மைக்குச் சிறந்த தீர்வாக இது இருக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதனால், இதயம் பாதுகாக்கப்படும். செரிமானத்தைச் சீராக்குவதால், மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.

* இதை ஓரிரு கப் குடித்தால், பசி தூண்டப்படும். அதற்கும் அதிகமாகக் குடித்தால், வயிறு நிறைந்துவிடும். ஹோட்டல்களில் சாப்பாட்டுக்கு முன்னர் கப்களில் 'ஸ்டார்ட்டர்' கொடுப்பதற்கான காரணம் நம் பசியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உணவுக்குப் பதில் கொஞ்சம் அதிகமான அளவில் குடித்தால், வயிறு நிறைந்துவிடும். உடலுக்குத் தேவையான சத்து சூப்பில் இருப்பதால், சத்துக் குறைவுகள் எதுவும் ஏற்படாது. 

* காய்ச்சல் இருப்பவர்கள், தொண்டைப் பிரச்னை இருப்பவர்கள் சூடாக இதைக் குடித்தால் அதன் தீவிரம் குறையும்.


சூப் கலாசாரம் நமக்கானதுதானா... எப்படி?
இது, இளஞ்சூட்டில் பரிமாறப்பட்டும் ஓர் திரவ வகை உணவு. குளிர்ப்பிரதேசத்தில் இருப்பவர்களுக்குத்தான் இது என்பதைப்போல சிலர் நினைப்பதுண்டு. சூப் அனைவருக்கும், அனைத்துச் சூழலுக்கும் ஏற்ற ஒன்று. அதில் சேர்க்கப்படும் பொருள்களைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடும். ஒரு நல்ல சூப்பில் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், காய்கறிகள் போன்றவை கண்டிப்பாக இருக்க வேண்டும். குளிர் காலங்களில் செய்தால், மசாலாப் பொருள்களைச் சற்று அதிகமாகவும், வெயில் காலம் என்றால் குறைவான மசாலாப் பொருள்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை மேலை நாட்டு உணவு, குளிர்கால உணவு என்றெல்லாம் கூறிவிட முடியாது. நம் ஊரில் களிமண் பாத்திரங்கள் இருந்த காலக்கட்டத்திலிருந்து இது இருக்கிறது. தானியங்களுடன் சில பொருள்களைச் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, காய்கறிகளைப் போட்டு வேகவைத்து செய்யப்படும் ரசம்தான் சூப்புக்கு அடிப்படை.


ரெடிமேட் பவுடர் பயன்படுத்துறீங்களா... கவனம்!

ஒரு காலத்தில் நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பாட்டுக்கு முன்னர் பரிமாறப்படும் ஒன்றாக இது இருந்தது. இப்போது அப்படி இல்லை. தெருவுக்குத் தெரு கிடைக்கிறது. வெஜிடபுள் சூப் முதல் சிக்கன், மட்டன் வரை அனைத்து வகைகளும் அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றன. இதற்கு, முக்கியக் காரணம், சைலன்ட்டாகப் பெருகிவரும் 'ரெடிமேட் சூப் மிக்ஸ் சந்தை. 

* சந்தைகளில் ரெடிமேட் மிக்ஸ் பல வடிவங்களில் கிடைக்கின்றன. இயற்கையாக காய்கறிகளைப் போட்டு செய்யப்படும் சூப்பில் கிடைக்கும் நன்மைகளைவிட மிகவும் குறைந்த அளவுதான் ரெடிமேட் வகைகளில் கிடைக்கும். குறிப்பிட்ட சில மாதங்களுக்குக் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, பதப்படுத்தும் பல பொருள்கள் சேர்க்கப்பட்டு அந்த ரெடிமேட் மிக்ஸ் தயாரிக்கப்படுகிறது. அவை புற்றுநோய் போன்றவற்றைக்கூட ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

* ரெடிமேட் சூப்பில், கார்ன் ஃப்ளார் (Corn flour) அதிகமாக இருக்கும் என்பதால், மேலும் மேலும் கொழுப்புகள் உடலில் சேர்ந்துகொண்டே இருக்கும். வழக்கத்துக்கு மாறாக பசி அதிகரித்து, அளவுக்கு மீறி உணவை உட்கொள்ள நேரிடும். இந்த கார்ன் ஃப்ளாரின் அளவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் அதிகரிக்கும்.

* ரெடிமேட்டாக கிடைக்கும் அந்த பௌடரில், உப்பின் அளவு அதிகமாக இருக்கும். தொடர்ச்சியாக அவ்வகை பவுடர்களை உபயோகித்தால் ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்துமா, நுரையீரல் கோளாறுகள்கூட ஏற்படலாம்.

* சிக்கன், ஆட்டுக்கால் சூப்களை, வாரம் ஒருமுறை சாப்பிடுவது நல்லது. பொதுவாகக் கடைகளில் வாங்கும் இறைச்சி தரமின்றிப் போகும் வாய்ப்பு உண்டு. எனவே, அசைவ சூப்களை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு அருந்தினால், சூப் போன்ற ஆரோக்கியமான பானம் வேறு எதுவும்  இல்லை!