Published:Updated:

``டென்ஷனை ஹேண்டில் பண்றதுலதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம் இருக்கு!’’ - லியோனி #LetsRelieveStress

``டென்ஷனை ஹேண்டில் பண்றதுலதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம் இருக்கு!’’ - லியோனி #LetsRelieveStress
``டென்ஷனை ஹேண்டில் பண்றதுலதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம் இருக்கு!’’ - லியோனி #LetsRelieveStress

``டென்ஷனை ஹேண்டில் பண்றதுலதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம் இருக்கு!’’ - லியோனி #LetsRelieveStress

லியோனி... இந்தப் பெயர் இன்றைக்கு உலகம் முழுக்கப் பிரபலம். தமிழ்ப் பட்டிமன்ற மேடைகளில் தனித்துவமான ஆளுமை. பாட்டும் நகைச்சுவையும் இவருடைய பட்டிமன்றத்தின் பக்காவான பக்கபலம். அவருடைய ஸ்ட்ரெஸ் அனுபவங்களைக் குறித்து இங்கே பகிர்ந்துகொள்கிறார். 

`` 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவோம்'னு சொல்லிக்கிட்டிருந்த நேரம் அது. திருப்பூர்ல ஒரு கூட்டம். மேடைக்கு வலது பக்கம், இடது பக்கம் ரெண்டு பக்கமும் ரெண்டு டாஸ்மாக் கடைங்க. அன்னிக்கு சனிக்கிழமை வேற... திருப்பூர்ல சம்பள நாள். முன்னாடியே வந்து உட்கார்ந்து,  குடிமகன்கள் எல்லாரும் சேரை ஆக்கிரமிச்சிட்டாங்க. ரசிகர்கள் எல்லாம் பின்னாடி மாட்டிக்கிட்டாங்க. மீட்டிங்கில நான் பேச ஆரம்பிச்சதுல இருந்து கூடக்கூடப் பேச... பாட்டு பாடினா கூடக் கூட பாடுறதுனு ஒரே ஆர்ப்பாட்டம். 

அவங்கள்ல ஒருத்தர் ரொம்ப ரகளை பண்ணினார். 'அன்பார்ந்த...'னு சொன்னோம்னா, 'ஏன் நாங்கல்லாம் அன்பானவங்க இல்லியா?'ம்பார். 'பெரியோர்களே...'னு சொன்னா, 'நாங்கல்லாம் என்ன சின்னவைங்களா... இவனுங்கதான் பெரியோர்களா?’ங்கிறது. `திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டத்துக்கு’ன்னா, `ஏன் எங்களுக்குத் தெரியாதா... அதான் கொடியெல்லாம் கட்டி இருக்குல்ல... இதுல நீ வேற மொழிபெயர்க்கிறியா?’னு ஒரேடியா வில்லுப்பாடு மாதிரி லந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டார். 

எனக்குனா டென்ஷனான டென்ஷன். அவ்வளவு நேரமா கரைச்சல் பண்ணிக்கிட்டு இருந்தவர், ஒருவழியா எழுந்து போக ஆரம்பிச்சார். 'மணி ஒன்பதரை... கடை பூட்டிடுவாங்க. ஒரு கட்டிங் போடலாம்டா'னு சொல்லிக்கிட்டே கிளம்பிப்போனார். 
'அப்பாடா...'னு ஒருவழியா என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு பேச ஆரம்பிச்சேன். பாரதிதாசன் பாட்டுலருந்து தொடங்குவோம்னு அவர் பாட்டைப் பாட ஆரம்பிச்சிட்டேன். போனவர் தட்டுத் தடுமாறி பழையபடி வந்துட்டார். 

இப்போ அவருக்கு இன்னொரு பிரச்னை. அவரோட சேர்ல வேற ஒரு ஆள் வந்து உட்கார்ந்துட்டான். அவனைச் சத்தம் போட்டுக்கிட்டே, அடுத்த சேர்ல போய் உட்கார்ந்துட்டார். அதாவது, சேர்னு நினைச்சுக்கிட்டு அவர் தரையில உட்கார்ந்திருந்தார். தரையில உட்கார்ந்துக்கிட்டே கைப்பிடியைத் தேட ஆரம்பிச்சிட்டார். கைப்பிடினு நெனைச்சுக்கிட்டு மண்ணைப் பறிக்க ஆரம்பிச்சிட்டார். 

அப்புறம் என்ன பண்ணினார்னா சட்டைப்பையிலேர்ந்து ஊறுகாய் மட்டையை எடுத்துப் பிரிச்சு, அதைத் தன் ஆள்காட்டிவிரலால் எடுத்து எனக்குக் காண்பிச்சுட்டு நாக்கில் தடவி சாப்பிட்டு, சப்புக்கொட்டினார். எனக்கு `என்ன பேச வந்தோம்'ங்கிறதே மறந்து போச்சு. 'சரி, இவய்ங்களோட முகங்களைப் பளிச்சுனு இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்’னு அவங்க பாணியிலேயே பேசுவோம்னு முடிவு பண்ணிட்டேன்.

ஒரு கோயில் திருவிழாவுக்குப் போயிருந்தேன். அப்போ ஒருத்தர் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையோட சரியான போதையில மேடையில ஏறினார். மைக்கைப் பிடிச்சுட்டார். மைக்குல அவர் பாட்டுக்கு, 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்...'னு பாட ஆரம்பிச்சிட்டார். உடனே நான், `யாருய்யா ஊர்த்தலைவர்... இவரோட சலம்பல் தாங்க முடியலை. அவரை வரச் சொல்லுங்கய்யா’ன்னேன். 

'அவருதாங்க 22 வருஷமா இந்த ஊர்த்தலைவர்.  இந்த ஒரு பாட்டைப் பாடுவார். அப்புறம் இறங்கி அவராவே சத்தமில்லாமப் போய்ப் படுத்துக்குவார்'னு சொன்னாங்க. அதே மாதிரி அவரும் போய் படுத்துக்கிட்டார்னு சொன்னேன். அதே மாதிரி ஐயப்பன் கோயிலுக்குப் போய்ட்டு வந்து விரதம் முடிச்சதும் நம்ம ஆளு போய் எவ்வளவு வேகமா தண்ணியப் போடுவான்... ஜனவரி ஒண்ணாந் தேதி எடுக்கிற சபதம்... இதைப் பத்தியெல்லாம் பேசினேன். அவ்வளவுதான்... முன்னாடி சேர்ல உட்கார்ந்திருந்தவய்ங்க, 'பரவாயில்ல, நம்ம சப்ஜெக்ட்டை பேசுறார்’னு கேட்டுக்கிட்டு இருந்தவய்ங்க, என்ன நினைச்சாங்களோ தெரியலை. அவய்ங்களா கிளம்பிப் போயிட்டானுங்க. 

அதுக்கப்புறம்தான் நான் பேச ஆரம்பிச்சேன். இப்படிப் பல முறை ஆர்வக்கோளாறுல நம்ம ஆளுங்க டென்ஷன் ஆக்கிடுவாய்ங்க. நாம அந்த மாதிரி நேரத்துல ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டைப் பாடிக்கறக்கணும்ங்கிற பாலிஸியை ஃபாலோ பண்ணினோம்னா சக்ஸஸ்தான்'' என்றவரிடம், ``பள்ளிக்கூட ஆசிரியர், தி.மு.க கட்சிப் பணிகள், பட்டிமன்றப் பேச்சாளர்,  குடும்பத்தலைவர்னு பல பணிகளைச் செய்றீங்க. இதையெல்லாம் எப்படி ஸ்ட்ரெஸ் இல்லாம, சமாளிக்கிறீங்க?’’ என்று கேட்டோம்.

 ``அய்யய்யோ, அதை ஏன் கேட்கிறீங்க? ஒருமுறை பாண்டிச்சேரிக்குக் குடும்பத்தோட போயிருந்தேன். `சாயங்காலம் சினிமாவுக்குப் போலாம்’னு காலையிலேயே சொல்லிட்டேன். அங்கே ஒரு விழா நிகழ்ச்சி. மதியம் ரெண்டு மணியிலிருந்து நாலு மணி வரைக்கும் நடக்க ஏற்பாடாகி இருந்துச்சு. அவய்ங்க அழைப்பிதழே ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.

`பிற்பகல் 2:01 மணிக்கு கடவுள் வாழ்த்து. 2:04 மணிக்கு தலைமையுரை. 2:21-க்கு வரவேற்புரை. 2:46-க்கு லியோனி அறிமுகவுரை. 3:01 மணிக்கு சிறப்புரை’னு போட்டுட்டிருந்தாங்க. 'ஆஹா, இன்விட்டேஷனே ரொம்ப வெஸ்டர்ன் டைப்புல இருக்கே'னு நினைச்சேன். 'சரி, 4 மணிக்கு ஃபங்ஷன் முடிஞ்சாக்கூட 4:30 மணிக்கு ஹோட்டல் ரூமுக்குப் போயிடலாம்'னு நினைச்சேன். ஆனா, என்னை அறிமுகப்படுதுறேன்னு பேச ஆரம்பிச்சவர் பேசுறார்... பேசுறார்... பேசிக்கிட்டே இருக்கிறார். 

விழாத் தலைவர் பேச்சை சீக்கிரமா முடிக்கச் சொல்லி, ஒரு துண்டுச்சீட்டைக் கொடுத்துவிட்டார். அதை வாங்கிப் பார்த்துட்டு அவர், `மேடையில் துண்டுச் சீட்டு கொடுக்கிறது’ பத்திப் பேச ஆரம்பிச்சிட்டார். 
நேரம் ஆகிக்கிட்டே போகுதேனு மைக்கை ஆஃப் பண்ணிட்டாங்க. ஆனா அவர் விடலை... `இப்படிப்பட்ட விழாவுல திடுதிப்புனு இப்படி ஆகுறது சகஜம்தான். இளையராஜா அவர்களுக்குக்கூட 'அன்னக்கிளி' பாடல் ரிக்கார்டிங்கின்போது இப்படி நடந்தது. அதன் பிறகுதான் அவர் அகிலம் புகழும் இசையமைப்பாளர் ஆனார். அந்தவிதத்துல சென்டிமென்ட்டா இது நல்லதுதான்’னு பேச ஆரம்பிச்சிட்டார். அதன் பிறகு

தலைவரே எழுந்துபோய் பேச்சை முடிக்கும்படி சொன்னார். அப்பவும் அவர் விடுறதா இல்ல... 'லியோனி எவ்வளவு பெரிய ஆள்... அவருக்கான அறிமுக உரையை அவ்வளவு சீக்கிரம் முடிச்சிட முடியுமா?'னு கேட்க ஆரம்பிச்சிட்டார். அப்புறம் ஒருவழியா அவர் என்கிட்ட மைக்கைக் கொடுக்கும்போது மணி நாலரை.

நான் என்னென்ன பேசணும்னு நினைச்சுக்கிட்டுப் போனேனோ அது எல்லாமே மறந்துபோச்சு. அதுக்கப்புறம் அவர் படுத்தினபாட்டைவெச்சே  மேடையில எப்படி பேச வேண்டும்ங்கிறதைப் பத்திப் பேச ஆரம்பிச்சு, அப்புறம் பரிசு வழங்குதல், நன்றியுரைனு எல்லாம் சொல்லி முடிச்சு,  அதுக்குப் பிறகு நான் ஹோட்டல் ரூமுக்கு வர்றப்போ  ராத்திரி 7 மணி. 

வீட்டம்மா நல்லா டோஸ் விட்டாங்க. அப்புறம் அங்கே நடந்ததை நான் விலாவரியா சொல்ல ஆரம்பிச்சதும், அவங்களே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. `சினிமாவைவிட உங்க நிகழ்ச்சி ரொம்ப சுவாரஸ்யமா இருக்குங்க’ன்னாங்க.


 

சில சமயம் காரணமே இல்லாம ரொம்ப வெறுமையா இருக்கும். சில சமயம் தொடர்ந்து அங்கே இங்கேனு அலைஞ்சுக்கிட்டே இருப்போம். சரி, ஒரு ரிலாக்ஸா இருக்குமே, நம்ம ஸ்ட்ரெஸ்ஸுக்கு ரிலீஃப்பா இருக்குமேனு குற்றாலத்துக்குக் குளிக்கலாம்னு போனேன். அங்கே அருவியில குளிக்கலாம்னு துண்டைக் கட்டிக்கிட்டு கிளம்புனா, அந்த இடத்துல வந்து, 'அண்ணே ஒரு செல்ஃபிண்ணே'ன்னாங்க. சரினு கிளம்பிப் போனா, குளிச்சிட்டு வந்த இன்னொரு குரூப் பொம்பளைங்க செல்ஃபி எடுக்கணும்னாங்க. `ஃபேஸ்புக்ல ஏதும் போட்டுடாதீங்கம்மா’னு சொல்லிட்டுதான் நின்னேன். `ச்சே... நாங்கல்லாம் அப்படி செய்வோமோ சார்’னு சொன்னாங்க. குளிச்சிட்டு காருக்குப் போனா, ஃப்ரெண்ட்ஸுங்க போன் மேல போன் பண்றாங்க. 'யோவ்... குடும்பத்தோட குற்றாலம் போறேன்னு சொன்னது இதுதானாய்யா'னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.

இப்போல்லாம் பொது இடங்களுக்குச் சுற்றுலாவுக்குப் போனா, பசங்களை மட்டும் போகச் சொல்லிட்டு கார்லேயே இருந்துடுவேன். நமக்கு டென்ஷனைத் தரக்கூடிய விஷயங்கள் ஒவ்வொரு நாளும் நடக்கத்தான் செய்யும். அதை நாம எப்படி ஹேண்டில் பண்றோம்கிறதுலதான் வாழ்க்கையோட சுவாரஸ்யமே அடங்கியிருக்கு. எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் தரக்கூடிய நிகழ்ச்சி நடந்துச்சுனா முதல்ல அந்த இடத்தைவிட்டு கிளம்பிப்போயிடுவேன்.

தனிமையில பழைய சினிமாப் பாடல்களை மனசுக்குள்ளேயே பாடுவேன். அப்படி இல்லைனா என்னுடைய கலெக்‌ஷன்ல இருக்கிற பழைய பாடல்களைக் கேட்பேன். அப்புறம் உளவியல் சார்ந்த புத்தகங்கள், பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை மணிக்கணக்கா உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சிடுவேன். புத்தகங்களைவிட மனக்காயங்களுக்கு மருந்துபோடக்கூடியது வேற என்ன சார் இருக்கப்போகுது'' எனக்கூறி விடை கொடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு