Published:Updated:

இருபது வருடங்களாக ஹெச்.ஐ.வி... பம்பரமாக சுழலும் சேவகி!

விழிப்பு உணர்வு

இருபது வருடங்களாக ஹெச்.ஐ.வி... பம்பரமாக சுழலும் சேவகி!

விழிப்பு உணர்வு

Published:Updated:

னதில் நம்பிக்கை இருந்தால் மரணத் தைக்கூட முத்தமிட்டவாறே வாழலாம் என்று நிரூபித்துவருகிறார், சென்னை, புழலைச் சேர்ந்த பாக்யலட்சுமி. இவர் உயிர்க்கொல்லி நோயான ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டு 20 ஆண்டுகளாகின்றன. 52 வயதாகும் இவர், இப்போதும் பம்பரமாக சுழல்கிறார், ஹெச்.ஐ.வி குறித்த விழிப்பு உணர்வுப் பணிகளில்! ‘உயிர்மூச்சு இருக்கும்வரை சமுதாயத்தில் இருந்து இந்நோயைக் கொல்ல உழைப்பேன்’ என்ற உத்வேகத்துடன் வாழும் பாக்ய லட்சுமியைச் சந்தித்தோம். பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீடியாக்கள் முன்பும், சமூகத்திலும் தங்கள் முகத்தைக்காட்ட விரும்புவதில்லை. ஆனால், அதையும் உடைத்தெறிகிறார் பாக்யலட்சுமி.  

இருபது வருடங்களாக ஹெச்.ஐ.வி... பம்பரமாக சுழலும் சேவகி!

“சென்னை, மின்ட்தான் நான் பிறந்து, வளர்ந்த இடம். ஒன்பதாம் வகுப்புவரை படிச்சேன். அப்புறம் புத்தகம் வாங்கக் காசில்லாததால என் படிப்பு பாதியில நின்னு போக, அச்சகத்துல வேலைக்குச் சேர்ந்தேன். எங்க அண்ணனோட ஃப்ரெண்டு சீனிவாசன், புழல் ஏரியாவுல சவுண்ட் சர்வீஸ் வெச்சிருந்தார். ரெண்டு பேரும் காதலிச்சோம். பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அந்த வருஷமே அழகான பெண் குழந்தை பிறந்தது. சந்தோஷமா வாழ்ந்தோம். ஆறு ஆண்டுகள் கழிச்சு, என் வாழ்க்கையில சூறாவளி வீசியது.

ஒரு கட்சியில் சேர்ந்து கவுன்சிலரான என் கணவர், குடிப்பழக்கத்துக்கும் அடிமையானார். இதனால வீட்டில் சண்டை சச்சரவுகள் ஆரம்பிச்சது. திடீர்னு ஒருநாள் ஜுரத்தில் படுத்தார். ஆஸ்பத்திரியில சேர்த்தப்போதான் அவருக்கு ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ்னு தெரிஞ்சது. உடனடியா எனக்கும் என் குழந்தைக்கும் டெஸ்ட் எடுத்தாங்க. அதில் எனக்கும் ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. யாருகிட்டயும் சொல்லி அழக்கூட முடியாம, மனசுக்குள்ளயே குமுறினேன். நல்லவேளையா, என் குழந்தைக்கு அந்த பாதிப்பு இல்லை. கொஞ்சநாள்ல அவர் இறந்துட்டார். உறவினர்கள், அக்கம்பக்கத்துக்குத் தகவல் கசிஞ்சதும் எங்களை ஒதுக்கி வெச்சாங்க...’'

- இந்தச் சூழலில்தான் புதுமனுஷியாக மீண்டும் பிறந்திருக்கிறார் பாக்யலட்சுமி...

‘‘அப்போ என் மகளுக்கு அஞ்சு வயசு. வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாததால அவளைத் தூக்கிட்டு அநாதையா நடுத்தெருவில் நின்னேன். உடம்புல உயிர்க்கொல்லி நோய், கையில பைசா இல்லை. இருந்தாலும், வாழணும், என் புள்ளைய வளர்த்து ஆளாக்கணும்னு மனசுக்குள்ள வைராக்கியம். அப்போதான் மேற்கு மாம்பலத்துல, ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவங்களுக்காகச் செயல்படும் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் பற்றிக் கேள்விப்பட்டு வேலை கேட்டுப் போனேன். 2,500 ரூபாய் சம்பளத்துல, ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவங்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் களப்பணியைக் கொடுத்தாங்க.

என் மகளுக்கு எட்டு வயசானப்போ, அவகிட்ட எனக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதைச் சொன்னேன். குறைந்த வருமானத்துல அவளைக் கஷ்டப்பட்டு படிக்கவெச்சேன். இப்போ அவ எம்.ஏ படிக்கிறா. ஹெச்.ஐ.வி நோயால பாதிக்கப்பட்டவங்க நல்வாழ்வுக்காக இந்த 20 வருஷமா உழைக்கிறேன். 72 வயசாகும் எங்கம்மாவையும், என் மகளையும் நான்தான் சம்பாதிச்சு காப்பாத்திட்டு வர்றேன். ‘இப்படி ஊரெல்லாம் போய் உனக்கு ஹெச்.ஐ.வி இருக்குனு சொல்லி வேலைபார்த்தா, உன் மகளோட எதிர்காலம் என்னவாகும்?’னு சிலர் சொல்வாங்க. இந்தக் கேள்வியை நான் என் மககிட்டயே கேட்டேன். ‘விழிப்பு உணர்வு ஏற்படுத்துற இந்த வேலையால, ஒரே ஒருத்தருக்கு நல்லது நடந்தாலும், அதை தைரியமா செய்யுங்க. அதனால என் எதிர்காலம் பாதிச்சாலும் பரவாயில்ல. அஞ்சு வயசுக் கொழந்தையா என்னைத் தூக்கிட்டு நீங்க அநாதரவா நின்னப்போ, நமக்கு வழிகாட்டி கரைசேர்த்தது இந்த வேலைதான்னு, உங்ககிட்ட சொல்றவங்களுக்கு நீங்க பதிலா சொல்லுங்க!’னு என் பொண்ணு சொன்னா. அவளோட அன்பு, ஆதரவு, என்னோட மனதைரியத்தோடதான் ஹெச்.ஐ.வி. நோய்க்குரிய மருந்தை சாப்பிட்டு என் மரணத்தை 20 வருஷம் தள்ளிப்போட்டுட்டேன். என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையுறதையும் நிச்சயம் பார்ப்பேன்!’’ என்ற இந்த போராட்ட அம்மா,

‘‘மத்த நோய்களைப்போல, இதுவும் ஒரு நோய். அதுக்கும் சிகிச்சை இருக்கு. அதனால பாதிக்கப்பட்டவங்க இந்த சமூகத்துல மரியாதையான வாழ்க்கை வாழ வழிகள் பல இருக்கு. அதுக்கு முன்னுதாரணமா நானே கைநீட்டி அழைக்கிறேன்... வாங்க சகோதர, சகோதரிகளே!’’

- 20 வருடங்களாக தான் செய்துவரும் விஷயத்தையே இங்கேயும் வலியுறுத்தி கைகூப்புகிறார், பாக்யலட்சுமி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஸ்.மகேஷ் படங்கள்: பா.காளிமுத்து

ஹெச்.ஐ.வி-யை வெல்லலாம்!

சென்னை, பெரம்பூரில் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்காக செயல்படும் ‘ஏஆர்எம்’ தனியார் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பக்தவத்சலம், “கடந்த 2013-ம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருந்தது. 2014-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையில் 10 ஆயிரம் அதிகரித்துள்ளது. நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடம் மாறும் தொழிலாளர்கள் அதிகம்

இருபது வருடங்களாக ஹெச்.ஐ.வி... பம்பரமாக சுழலும் சேவகி!

இருப்பதால், இந்த நோய் பாதிப்பு அங்கு அதிகம். நகரங்களைவிட கிராமங்களில்தான் இன்று அதிகளவில் இந்த நோய் வேகமாகப் பரவிவருகிறது. 

பொதுவாக ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 350 சிடி 4 (வெள்ளை அணுக்களின் கவுன்ட்டிங்) குறைவாக இருப்பவர்கள், `ஏஆர்டி’ மருந்து உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு இந்த மருந்தை இலவசமாகக் கொடுப்பதால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது” என்றார்.

சென்னையில் உள்ள `செஸ்’ (கம்யூனிட்டி ஹெல்த் எஜுகேஷன் சொசைட்டி) என்ற, ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்களின் நலனுக்காகச் செயலாற்றும் தொண்டு நிறுவனத்தின் தலைவர், மருத்துவர் மனோரமா, “நோயாளிகள் அதற்குரிய மருந்து, மாத்திரைகளை சரிவரச் சாப்பிட்டால் வாழ்நாளை அதிகரிக்கலாம். குறிப்பாக, ஆபத்தான உடல்நிலையில் இருக்கும்போது `ஏஆர்டி’ என்ற மாத்திரையை 12 மணிநேரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாது. சிகிச்சையை முறையாகப் பின்பற்றுபவர்கள் மனதைரியத்தோடு இருந்தால் 20 ஆண்டுகள் கடந்தும் வாழலாம்!’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism