ஸ்வீட் எஸ்கேப் - 2

த்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்கிறோம். நாம் உட்கொள்ளும் உணவு குளுக்கோஸாக (சர்க்கரை) மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. இதுதான் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. இந்த குளுக்கோஸை உடல் பயன்படுத்த இன்சுலின் என்ற ஹார்மோனை இரைப்பைக்கு அருகில் உள்ள கணையம் சுரக்கிறது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு, வாழ்க்கைமுறை மாற்றங்கள், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம், டாக்டரின் பரிந்துரை அடிப்படையில் மருந்துகள் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். சர்க்கரையைக் கட்டுக்குள்வைக்கவில்லை எனில், அது ரத்தக் குழாய் மற்றும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதய நோய், மாரடைப்பு, பார்வை இழப்பு, சிறுநீரகச் செயல் இழப்பு, காலில் புண் ஆறாமல் இருப்பது எனப் பல்வேறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

ப்ரீ டயாபடீஸ்

மதில் மேல் பூனை என்று சொல்வார்கள். பூனை இந்தப் பக்கமும் செல்லலாம், அந்தப் பக்கமும் செல்லலாம். அதுபோலதான் ப்ரீ டயாபடீஸ் நிலை. அதாவது, சர்க்கரை நோய் வருவதற்கு முந்தைய நிலை. இவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு, இயல்புநிலையைவிட மிக அதிகமாக இருக்கும். ஆனால், சர்க்கரை நோய் என்ற நிலையில் உள்ள அளவுக்கு இருக்காது. இதைக் கவனிக்காமல், கட்டுப்படுத்தாமல் விட்டால், சர்க்கரை நோய் விரைவில் வரும். பின்னர், அதைக் குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இதில் வருத்தமான செய்தி என்ன தெரியுமா? இந்தியாவில் பெரும்பாலானவர்கள், தங்களுக்கு ப்ரீ டயாபடீஸ் உள்ளது என்பதைத் தெரியாமலேயே இருந்துவிடுகின்றனர்.

ஸ்வீட் எஸ்கேப் - 2

டைப் 1 சர்க்கரை நோய்

டைப் 1 சர்க்கரை நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியது. இவர்களுக்கு இன்சுலின் சுரப்பே இருக்காது. இதனால், ஆயுள் முழுக்க இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளில் 10-15 சதவிகிதம் பேர் இந்த வகையைச் சேர்ந்தவர் கள்தான். இந்தப் பிரச்னை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும், குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கே அதிக அளவில் ஏற்படுகிறது. நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே, இன்சுலினை சுரக்கும் செல்களை அழிப்பதால், இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு முற்றிலுமாக நின்றுவிடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. டைப் 1 சர்க்கரை நோய் ஒருவருக்கு வரும் என்று கணிக்க முடியாது. அதேபோல, இது வருவதைத் தவிர்க்கவும் முடியாது.

ஒருவருக்கு டைப் 1 சர்க்கரை நோய் இருப்பது உறுதியானால், அவருக்கு வாழ்நாள் முழுக்க சிகிச்சை தேவை. இவர்கள் வாழ்நாள் முழுக்க இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணித்தல், உடல் எடையைப் பராமரித்தல் போன்றவற்றைப் பின்பற்றினால் எந்த பிரச்னையும் இன்றி நலமுடன் வாழலாம்.

டைப் 2 சர்க்கரை நோய்

பெரும்பாலான மக்கள் அவதியுறுவது இந்த வகை சர்க்கரை நோயால்தான். இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும். உடலின் தேவைக்கு ஏற்ற அளவுக்கு இன் சுலின் சுரக்காது அல்லது, இன்சுலினைப் பயன்படுத்த முடியாத நிலையில் (இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்) உடல் இருக்கும். 85-90 சதவிகிதம் பேர் இந்த வகையால் பாதிக்கப்பட்டவர்கள். இதுவும் எந்த வயதிலும் வரலாம். இருப்பினும், பெரியவர்கள், 40 வயதைக் கடந்தவர்கள் மத்தியில் அதிகம் ஏற்படுகிறது. அதிக உடல் எடை, உடல் உழைப்பு குறைவு, உடற்பயிற்சியின்மை, தவறான உணவுப் பழக்கம், மரபியல்ரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருப்பது போன்ற காரணிகள் ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இதற்கும், வாழ்நாள் முழுக்க மருத்துவக் கண்காணிப்பு தேவை. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, சர்க்கரை அளவைக் கண்காணித்தல் போன்றவற்றைச் செய்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

கர்ப்பகால சர்க்கரை நோய்

கர்ப்ப காலத்தில் உடலில் ஏராளமான ஹார்மோன்மாற்றங்கள் நடக்கின்றன. இதற்கு ஏற்றவாறு, கர்ப்பிணியின் கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரப்பதில் பிரச்னை ஏற்படலாம். இதனால், அவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. பொதுவாக, பிரசவத்துக்குப் பிறகு இந்த சர்க்கரை நோய் மறைந்துவிடும். இருப்பினும், தொடர் பரிசோதனை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

25 வயதைக் கடந்த பெண்களுக்கு கர்ப்பகால சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். தவிர, உடல் பருமன், சர்க்கரைக்கு முந்தைய நிலையில் இருப்பது, குடும்பத்தில் சர்க்கரை நோய் இருப்பது, முந்தைய குழந்தை 4 கிலோ அல்லது அதற்கு மேல் எடையுடன் பிரசவித்தது, முந்தைய கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் இருந்தது போன்ற காரணங்களால் கர்ப்பகால சர்க்கரை நோய் ஏற்படுகிறது. உடல் எடையைப் பராமரித்து, சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருந்தால் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.

இந்த மூன்று தவிர, ‘இதர குறிப்பிட்ட வகை சர்க்கரை நோய்’ என நான்காவது வகை உள்ளது. இதில், 56க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவை மிக அரிதாக ஏற்படக்கூடியவை. கணையத்தில் காயம், பாதிப்பு காரணமாக ஏற்படலாம். எந்த பாதிப்பு என்பதைப் பொறுத்து ஒவ்வொன்றுக்கும் சிகிச்சை மாறுபடும்.

- தொடரும்

டயாபடீஸ் டவுட்

சர்க்கரை சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோய் வருகிறதா?

சர்க்கரையைச் சாப்பிடுவது நேரடி யாக சர்க்கரை நோயை ஏற்படுத்துவது இல்லை. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்புக் குறைவு, உடல் எடை அதிகரிப்பு போன்றவையே சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. காலையில் ஆரோக்கியமான பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுவந்தாலே, சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.