இனி எல்லாம் சுகமே - 2

“நாம் ஏன் சாப்பிட வேண்டும்? நம்மால் ஏன் குறிப்பிட்ட சில உணவுகளை மட்டுமே சாப்பிட முடிகிறது? சாப்பிடாமல் உயிர்வாழவே முடியாதா?” இப்படி, ‘டாக்டர் விகடன்’ ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டுள்ளார் வாசகி ராதா. 

மனிதன் உயிர் வாழ சக்தி தேவை. அந்த சக்தியைப் பெற, சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். உணவில் இருந்து நாம் பெறும் சக்தி மூன்று வகைகளில் செலவாகும். நாம் வெறுமனே ஓர் இடத்தில் உட்கார்ந்து இருந்தாலும், சுவாசிக்க, இதயம் துடிக்க என்று உடலின் உள் உறுப்புக்கள் இயங்க மற்றும் தூங்குவது உள்ளிட்ட வழக்கமான செயல்பாடுகளுக்கு (Resting conditions) நாம் உட்கொண்ட உணவில் இருந்து 70 சதவிகித சக்தி செலவாகிவிடும்.

செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளுக்கு 10 சதவிகித சக்தி செலவாகிவிடும். மீதம் உள்ள 20 சதவிகித சக்தியைத்தான் நாம் கூடுதல் உடல் உழைப்போ, உடற்பயிற்சியோ செய்து எரிக்க வேண்டும். மனிதனுக்கு உள்ளே 24 மணி நேரமும் இயங்கும்  மிகப்பெரிய தொழிற்சாலைதான் செரிமான மண்டலம்.

உணவுப் பொருள், சமைக்கும்போதே செரிமானத்துக்கு ஏற்றவகையில் பக்குவப்படுத்தப்படுகிறது. வாயில் சிறிது அரைக்கப்பட்டு உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. இரைப்பையில் நன்றாக உடைக்கப்பட்டு, சிறுகுடலுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு, உணவுப் பொருட்கள் சுத்திகரிக்கப்பட்டு, சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கை மட்டும்தான் மலமாக வெளியே வருகிறது. உணவைப் பொறுத்தவரை மேக்ரோ, மைக்ரோ என இரண்டு வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு ஆகியவை மேக்ரோ ஊட்டச்சத்துக்கள்.  வைட்டமின்கள், தாதுஉப்புகள் போன்றவை மைக்ரோ ஊட்டச்சத்துக்கள். இவை, அளவில் குறைவாகத் தேவைப்பட்டாலும், இவை இல்லை எனில் நம்மால் இயங்கவே முடியாது. நமது பாரம்பர்ய உணவு அற்புதமானது. மற்ற நாடுகளில் ஒவ்வொரு சத்துக்கும் வெவ்வேறு வகையான உணவைத் தேடிச் சாப்பிடுவார்கள். நமக்கு அந்தப் பிரச்னையே கிடையாது. நம்முடைய உணவுமுறையில் எல்லாவகையான சத்துக்களும் சரிவிகிதத்தில் கிடைத்துவிடுகின்றன. ஆனால், நாம் தற்போது மேற்கத்திய உணவுக் கலாசாரத்துக்கு அடிமையாகி வருகிறோம். இது நம்முடைய ஆரோக்கியத்துக்கு ஏற்றது அல்ல. 

இனி எல்லாம் சுகமே - 2

தலைவாழை இலையில், சாதம், காய்கறிகள், பருப்பு நிறைந்த சாம்பார், காய்கறிக் கூட்டு, பொரியல், கீரை, முளைகட்டிய பயறு, மிளகு - சீரகம் கொண்டு தயாரிக்கப்படும் ரசம், மோர் எனச் சாப்பிடும், நம் உணவுதான் சரிவிகித உணவு. இப்படி சாப்பிட்டாலே, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்கள், நட்ஸ் ஆகியவற்றை அன்றாடம் ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்துவந்தாலே போதுமானது.

நாம் ஏன் இத்தனைவிதமான சத்துக்களைச் சாப்பிட வேண்டும் எனத் தோன்றலாம். நமது உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் இருக்கின்றன. எலும்பு மஜ்ஜையில் இருந்து தினமும் பல கோடி செல்கள் உருவாகும். அதுபோல, பில்லியன் கணக்கில் செல்கள் அழியும். இவற்றை நாம் பார்க்கவும் முடியாது, உணரவும் முடியாது. செல்களால் ஆன நமது உடலுக்கு சக்தி தேவை. செல்களுக்கு எளிதில் சக்தி கிடைப்பது, நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்தில் இருந்துதான். செல்களின் கட்டுமானத்துக்கு உதவுவது புரதச்சத்து, செல்களைப் பாதுக்காக்கும் உறைதான் கொழுப்புச்சத்து.

தற்போது, லோ கார்போ டயட், அதிகக் கொழுப்புச்சத்து நிறைந்த டயட் என பலவிதமான டயட் முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள், இவை எல்லாமே இயற்கைக்கு எதிரானவை. உடல்பருமன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், உணவில் மாவுச்சத்தை 40 சதவிகிதத்துக்கும் கீழே குறைப்பது ஆரோக்கியமற்றது. அளவான சரிவிகித உணவும், உடல் உழைப்பும்தான் எடையைக் குறைக்க ஏற்றது.

- தொடரும்

படம்: தே.தீட்ஷித்

குடல் தோட்டம்

செரிமான மண்டலத்தில் இருக்கும் மிக முக்கியமான பகுதி சிறுகுடல். சிறுகுடலை ஒரு தோட்டம் எனச் சொல்லாம். இதில், எண்ணற்ற நல்ல பாக்டீரியா உயிர் வாழ்கின்றன. இவைதான் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கடினமான பிணைப்பை உடைத்து, சக்கைகள் வெளியேறத் துணைபுரிகின்றன. இந்த பாக்டீரியாவின் மிக முக்கிய உணவு நார்ச்சத்து. எனவே, செரிமான மண்டலத்தின் பாதுகாவலனே நார்ச்சத்து நிறைந்த உணவுகள்தான்.

எதற்காகச் சாப்பிடுகிறோம்?

1. உடல் ஓய்வுநிலையில் இருக்க

2.செயல்படுவதற்கான சக்திபெற

3.உடல் வளர்ச்சி அடைய

4.உடலில் சிதைந்த செல்கள் புதுப்பிக்கப்பட, இறந்த செல்கள் நீங்க