Published:Updated:

ஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வுகள்!

ஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வுகள்!

ஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வுகள்!

தாங்கவே முடியாதது எனச் சில வலிகள் உண்டு. அந்தப் பட்டியலில் முதல் வலி... தலைவலி. அதிலும், ஒற்றைத்தலைவலி வந்துவிட்டால்... அதோ கதி. தலையில் ஒரு பக்கமாகத் தொடர்ந்து வலித்துக்கொண்டே இருக்கும்; ஒரு வேலையும் செய்ய முடியாது. கையும் ஓடாது, காலும் ஓடாது. சிலருக்கு மாலை வேளையானால் தலைவலி தொடங்கிவிடும். அதிகச் சத்தம் கேட்டால், மனதுக்குப் பிடிக்காத சம்பவங்கள் நடந்தால்... என தலைவலிக்கான காரணப் பட்டியலின் நீளம் அதிகம். தலைவலிக்கும் நேரத்தில் யாராவது அன்பாகப் பேசினால்கூட எரிச்சலாக வரும்; கோபம் தலைக்கு ஏறும். `இதற்குத் தீர்வே இல்லையா?’ எனப் புலம்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காலையில் எழுந்து பல் துலக்கியதுகூட, ஒற்றைத் தலைவலிக்குக் காரணமாக இருக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?

ஏன் வருகிறது ஒற்றைத்தலைவலி?
 

அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவையே, ஒற்றைத்தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள். உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணம். உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, தலைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்களில் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால், அதன் இயக்கத்தில் மாறுபாடு உண்டாகி, தலைவலி வரும். உடல் வெப்பத்தைச் சமநிலையில்வைக்க, வாரம் ஒரு முறையாவது எண்ணெய்க் குளியல் எடுத்தால் போதும்.

சிலருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும், உடலில் வெப்பம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கும். உணவில் உப்பு, காரம், புளிப்பு சம அளவில் இருக்க வேண்டும். இதில், ஏதேனும் ஒன்றை மட்டும், தொடர்ந்து அதிகமாக எடுத்துக்கொள்வோருக்கும் இந்தப் பிரச்னை உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ரத்தக் குழாய்கள் விரிவடைதல் மற்றும் வீங்குதலாலும் வலி உண்டாகும். அந்த நேரத்தில், நைட்ரிக் ஆக்ஸ்சைடு அமிலம் அதிகமாகச் சுரக்கும். அது, ரத்தக் குழாய்களைத் தூண்டும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

5-ஹைட்ராக்சிரிப்டமின் (5-Hydroxytryptamine) எனும் அமிலத்தின் அளவும் ரத்தத்தில் அதிகரிக்கும். அப்போது ஏற்படும் சீரற்ற ரத்த ஓட்டத்தினால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, வலி உணரப்படும். வலி உணர்ச்சியைத் தரக்கூடிய ட்ரைஜெமினல் (Trigeminal) என்னும் அமிலமும் அதிகம் சுரந்து, வலி உணர்வை அதிகரிக்கும். இவ்வாறு உண்டாகும் வலி, அதிகபட்சம் நான்கு மணி நேரம் வரையிலும் நீடிக்கலாம். சிலருக்கு இரண்டு பக்கங்களிலும் வலி வரலாம்.

 பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஒற்றைத்தலைவலி வரும். இரவில் அதிக நேரம் கண் விழித்திருத்தல், காலையில் அதிக நேரம் உறங்குதல், வெயிலில் அதிக நேரம் இருப்பதும்கூட தலைவலிக்குக் காரணமாகிவிடும். உடலின் வேறு பிரச்னைகளுக்காக அடிக்கடி மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கும், ஒற்றைத்தலைவலி ஏற்படும் வாய்புகள் அதிகம்.

ஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வுகள்!

அறிகுறிகள் என்னென்ன?

வலி வருவதை சில அறிகுறிகளை வைத்து முன்னரே கண்டுகொள்ளலாம். திடீரென சில பகுதிகள் வட்டமாகப் பார்வைக்குத் தெரியாமல் போவது (Scotoma), ஒரு பக்கம் மட்டும் தெரியாமல் போவது (Hemianopsia). கண்ணில் ‘பளிச்பளிச்’ என மின்னுவது (Teichopsia), சமதளமான இடத்திலும் வரிவரியாகக் கோடுகள் தெரிவது (Fortification Spectra), கண்ணுக்குள் பூச்சி பறப்பது, எதிரில் உள்ள உருவம் கறுப்பாகத் தெரிவது எனச் சில அறிகுறிகள் தென்படும்.

சிலருக்கு, தற்காலிகமாகப் பேச்சு வராது. ஒரு பக்கமாக கை, கால்களில் துடிப்பு, மதமதப்பு உண்டாகி சரியாகும். வாந்தி அல்லது  குமட்டல் உணர்வு இருக்கும். இந்த நேரத்தில், அமைதியாக அறைக்குள், அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, இருளை ஏற்படுத்திக்கொண்டு உறங்குவது சற்று ஆறுதல் தரும்.

உங்க டூத் பேஸ்ட்ல இருக்கு சிக்கல்சமீப காலங்களில் பல் துலக்கும் டூத் பேஸ்ட்களாலும், ஒற்றைத்தலைவலி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல் துலக்கியதும், கடமைக்கு என வாய் கொப்பளிப்போருக்குத்தான் இந்த வாய்ப்பு இன்னும் அதிகம். நாக்கிலேயே ஒட்டியிருக்கும் டூத் பேஸ்ட்டின் வேதிக்கலவை, சாப்பிடும்போது அப்படியே உடலுக்குள் சென்றுவிடும். நேரடியாக நுரையீரலைப் பாதிக்கும். பல நாட்களுக்குத் தொடர்ந்து இவ்வாறு நடக்கும்போது, தலைவலியை உண்டாக்கிவிடும். தவிர, உடுத்தும் உடைகளில் ஒட்டியிருக்கும் டிடர்ஜென்ட் பௌடர், வாசனைத் திரவியங்கள் வியர்வை வழியாக உடலில் கலந்தாலும் இப்படியான சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு சாக்லேட், சீஸ், எண்ணெய் உணவு, வெண்ணெய், புளிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதாலும் வலி வரும்.

பாதிப்பது அதிகம் பெண்களே!

ஆண்களைக்காட்டிலும், பெண்களே ஒற்றைத்தலைவலியால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, கர்ப்பப்பை பிரச்னை, நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை காரணமாக இருக்கின்றன. தவிர, பூப்பெய்தும் காலம்,  மாதவிலக்கு வரும் காலக்கட்டம், மெனோபாஸ் நிலையை அடையும்போது, கருத்தடைக்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடும் நேரங்களிலும் ஒற்றைத்தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பீடி, சிகரெட், புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் உடலில் உண்டாகும் பித்தத்தால், உடலின் ஆற்றல் குறையும். இதனால், வயிற்றுப்புண் உண்டாகி, வெப்பம் அதிகரிக்கும்.  இதுவும் ஒற்றைத்தலைவலியில் முடியும்.

எப்படிக் குணப்படுத்துவது?

பக்கவாத ஒற்றைத் தலைவலி (Hemiplegic Migraine ), கண் நரம்பு ஒற்றைத்தலைவலி (Ophthalmoplegic Migraine) முக நரம்பு ஒற்றைத்தலைவலி (Facioplegic Migraine) என வலிகளில் பலவகை உள்ளன. மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுதல், தேவையற்ற சிந்தனையைத் தவிர்த்தல், நல்ல தூக்கம் என வாழ்க்கைமுறைகளை மாற்றிக்கொண்டாலே வலி வராமல் தடுத்துக்கொள்ள முடியும். அலுப்பு தரக்கூடிய ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் இருத்தல், மனதுக்குப் பிடித்த வேலைகளைச் செய்தல், வயல்வெளி, பூங்கா, இயற்கைக் காட்சிகளை ரசித்தல் எனப் பசுமையான இடங்களுக்குச் செல்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்தி, வலி உண்டாகாமல் தவிர்க்கலாம். தவிர, உடலில் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தலையில் நீர்கோத்தல், மூளையில் கட்டி என ஒற்றைத்தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. எனவே, சாதாரணத் தலைவலி என்று புறக்கணிக்காமல், ஏன் ஏற்படுகிறது எனக் காரணத்தை ஆராய்ந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். வலி, தாங்கவே முடியாதபட்சத்தில் மட்டும் மருத்துவரின் பரிந்துரைப்படி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒற்றைத் தலைவலி தீர்க்கவே முடியாத நோய் என்றுதான் பலரும் பயப்படுகின்றனர். அது, ஓர் அறிகுறி மட்டுமே. நோய்க்கான அறிகுறியை அறிந்து வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டால், ஒற்றைத்தலைவலியில் இருந்து விடுபடுவது நிச்சயம்.

- ப்ரீத்தி,

படம்: சி.தினேஷ் குமார், மாடல்: பிரியங்கா

தலைவலி நீங்க!

இரவு நேரங்களில் அசைவ உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகமாகச் சாப்பிடுவதும் கூடாது.

வாரம் ஒரு முறையாவது உணவு உண்ணாமல் நோன்பு இருக்க வேண்டும். மாதம் ஒரு முறையாவது, வயிற்றைச் சுத்தம்செய்ய வேண்டும்.

குளிர் மற்றும் பனிக் காலங்களில் செரிமானம் குறைவாக இருக்கும். வெந்நீர் அல்லது வெந்நீரில் சீரகம் சேர்த்துப் பருகுவதால், செரிமானம் எளிதாகும். கோடை காலத்தில் சாதாரண நீரைப் பருகலாம்.

காலை உணவை எந்தக் காரணத்துக்காகவும் தவிர்க்கக் கூடாது. டீ, காபியை முடிந்த அளவுக்குத் தவிர்க்கலாம்.

ஒற்றைத்தலைவலி வராமல் தடுக்க...


சுக்கு, மிளகு, திப்பிலிப் பொடியை மூன்று விரல்களால் எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். அதன் பின், மல்லிப்பொடி ஒரு தேக்கரண்டி, பனை வெல்லம், சுக்குப்பொடியை நீர்விட்டு காய்ச்சிக் குடித்துவரலாம். இது, பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை கோளாறுகளையும் சரிப்படுத்தும்.

இரவு படுக்கச் செல்லும் முன், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா சூரணம்) பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இதனால், ரத்தம் சுத்தமாகி, ரத்தஓட்டம் சீராகும். இதனால், ஒற்றைத்தலைவலி மட்டும் அல்ல, வேறு எந்த நோயும் நெருங்காது.

20 மி.லி., தயிரில், அரை லிட்டர் நீர் சேர்த்து, அதில் சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், முடிந்தால் சிறிதளவு நெல்லிக்காய் சேர்த்துக் கரைத்து, மோராகப் பருகலாம். இதனால், செரிமானம் சீராகும்; பித்தம் குறையும்; கோடை காலத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

சி.கே.பழனிவேல், வந்தவாசி.

“எனது பெண் குழந்தைக்கு இரண்டு வயது. அவளுக்கு விளையாட்டு அம்மை வந்துள்ளது. முகம் முதல் பாதம் வரை உள்ளது. விளையாட்டம்மை எதனால் வருகிறது. இதற்கு என்ன மாதிரியான வைத்தியம் உகந்தது? தீர்வு கூறுங்கள்.”

டாக்டர் எல்.பாலகிருஷ்ணன்

ஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வுகள்!குழந்தைகள் நல மருத்துவர், பவானி

“அம்மை நோய் என்பது வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடியது. இந்த வகையான வைரஸ் கறுப்பு, சிவப்பு நிறப் புள்ளிகளை உடலில் தோற்றுவிக்கக்கூடியது. பொதுவாக, குழந்தைகளுக்கு வரும் இதுபோன்ற விளையாட்டு அம்மையால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தட்டம்மையைத்தான் விளையாட்டு அம்மை என்பார்கள். இது மீசல்ஸ் எனும் வைரஸால்  வருவது. குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் தட்டமைக்கான தடுப்பூசி போட வேண்டும். இதை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போட்டுக்கொள்ளலாம். குழந்தைகளுக்குத் தேவையான, சத்தான உணவினை சரியான அளவில் கொடுத்துவந்தாலே, இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு அந்தந்த வயதுக்கு ஏற்ற தேவையான உணவுகளைத் தருவதும் அவசியமான ஒன்று. இது, குழந்தைகளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.

விளையாட்டு அம்மை தானாகவே சரியாகிவிடும். ஆனாலும், மருத்துவரிடம் ஆலோசித்து மருந்து அவசியாமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் சுயமாகவே குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பது தவறு. தட்டம்மை வந்த சமயத்தில் குழந்தைகளுக்குப் பத்திய உணவு தேவை இல்லை. அதே சமயம் இளநீர், வாழைப்பழம், அரிசி கஞ்சி, போன்ற குளிர்ச்சியான உணவுகளையும், வைட்டமின் ஏ அடங்கி உள்ள சத்தான திட ஆகாரங்களையும் கொடுப்பது நல்லது.

இந்த அம்மையால் வயிற்றுப்போக்கு, நிமோனியா காய்ச்சல், காதில் சீழ் வருதல், சோர்வாக இருத்தல் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஆனால், பயப்படத் தேவை இல்லை. ஏழு நாட்கள் வரை நீடிக்கும் இந்த அம்மை, எளிதில் குணப்படுத்தக்கூடியதுதான். அம்மை என்று தெரிந்ததும் மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இதைத் தவிர, உடலில் சூடுவைப்பது போன்ற  முரட்டுத்தனமான, தவறான வழக்கங்களைப் பின்பற்றக் கூடாது.”