Published:Updated:

அந்தப்புரம் - 26

ஓவியம்: ஸ்யாம்குடும்பம்

அந்தப்புரம் - 26

மாலினி, மகேந்திரனின் காதல்... அதைத் தொடர்ந்து திருமண வாழ்க்கை என எல்லாமே நல்லபடியாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால், குழந்தை பிறப்பது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. நாட்கள் ஆகஆக இருவருக்கும் வாழ்க்கையில் ஒருவித வெறுமை வளர்ந்தது. குழந்தை இல்லை என்கிற வெறுமை, காலப்போக்கில் வெறுப்பாக மாறியது. வெறுமை... வெறுப்பு.

வாழ்க்கை தொந்தரவு நிறைந்ததாக மாறியது. என்னதான் வெளியில் சந்தோஷமாகப் பேசிச் சிரித்தாலும் மனதுக்குள் சோகம் நிறைய இருந்தது. ஒருகட்டத்தில், குழந்தை இல்லை என்ற கவலையே இவர்களது வாழ்வின் மையப்புள்ளியாக மாறியது. மாலினிக்கும் மகேந்திரனுக்கும் மட்டும் அல்ல... இருவரது பெற்றோர்களின் வீட்டிலும் கவலையை ஏற்படுத்தியது. மாலினியின் அம்மா கோயில் கோயிலாகச் சென்று பூஜைசெய்தார். மகேந்திரனின் பெற்றோரோ, பிரபல ஜோதிடர்களை எல்லாம் சந்தித்து ஆலோசனை செய்தனர். அவர்கள் சொல்லும் பரிகாரப் பூஜைகளைத் தவறாமல் செய்துவந்தனர். ஆனால், மாலினி கருத்தரிக்கவே இல்லை.

ஊரின் பிரபல குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவமனையை அணுகிப் பரிசோதனைகள் செய்துகொண்டனர். மகேந்திரனுக்கு செமன் பரிசோதனையும் சில ஹார்மோன் பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்பட்டன. மாலினிக்கு, சில ஹார்மோன் பரிசோதனைகளும், கர்ப்பப்பை ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டன. மேலும், முட்டை வளர்ச்சி மற்றும் முட்டை வெளிப்படும் தினத்தை அறிய ஃபாலிக்கிள் ஸ்டடி செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் சாதகமாகவே இருந்தன. இருவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிந்தது. இதைத் தொடர்ந்து, இருவரிடமும் பேசினார் டாக்டர். ஃபாலிக்கிள் ஸ்டடி அடிப்படையில், கருத்தரிக்க ஏதுவான நாள் எது என்று டாக்டர் குறித்தார். மாதவிலக்கு வந்ததில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளப் பரிந்துரைத்தார்.

புதிய பிரச்னை இவர்கள் வாழ்வில் முளைக்க ஆரம்பித்தது. இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப தன்னால் செயல்பட முடியாத நிலை இருப்பதை மகேந்திரன் உணர்ந்தான். அவனது இந்த இயலாமை, அவனுக்கு மிகப் பெரிய மனக் குழப்பத்தை ஏற்படுத்தியது. மாலினியின் எதிர்பார்ப்பை அவனால் பூர்த்திசெய்ய முடியவில்லை. இது அவர்கள் வாழ்வில் மேலும் பிரச்னையை அதிகரித்தது.

அந்தப்புரம் - 26

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏன்... எதற்கு... எப்படி?

கருத்தரிப்பதற்கு ஏராளமான காரணிகள் ஒன்றிணைய வேண்டும். இந்தக் காரணிகளில் ஏதேனும் ஒன்றில் குறை ஏற்பட்டாலும் குழந்தையின்மைக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. குழந்தையின்மைக்கு பெண்ணிடம் (30-35 சதவிகிதம்), ஆணிடம் (30-35 சதவிகிதம்), இருதரப்பிலும் (15 சதவிகிதம்) பிரச்னை இருக்கலாம். காரணமே தெரியாத பிரச்னையும்கூட (15 சதவிகிதம்) இருக்கலாம். பெரும்பாலானோருக்கு இந்தப் பிரச்னை தற்காலிகமானதாகவே இருக்கிறது. உரிய சிகிச்சை, கவுன்சலிங், மாத்திரை மருந்து எடுத்துக்கொள்வதன் மூலம் பிரச்னை சரிசெய்யப்படுகிறது.

குழந்தையின்மைக்கு ஆணிடம் காணப்படும் பிரச்னைகள்

பாலியல் உறவு மேற்கொள்வதில் பிரச்னை.

தரமான, கருத்தரிக்கவைக்கக்கூடிய விந்தணுவை உற்பத்தி செய்ய இயலாமை.

செக்ஸ் டெக்னிக்கில் தவறுகள் செய்வது.

அடிக்கடி உடலுறவுகொள்ளாமை.

பிறவிக்குறைபாடு காரணமாக, விந்தணுவை பெண்ணின் வெஜினாவில் சேர்க்க முடியாதத்தன்மை.

ஓர் ஆண், குழந்தைக்குத் தந்தையாக வேண்டும் என்றால், அவனது செமனில் ஒரு மி.லி-க்கு 20 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும். அடுத்தது அதன் அமைப்பு (மார்ப்பாலஜி) மற்றும் இடப்பெயர்வு (மொபிலிட்டி) நல்லபடியாக இருக்க வேண்டும். சிலருக்கு, மிக சீக்கிரத்தில் விந்து வெளிப்படுவது, பெண்ணின் வெஜைனாவுக்கு வெளியில் விந்தணுக்களை விடுவது, விரைப்புத்தன்மையில் குறைபாடு போன்ற அவர்களுக்கே தெரியக்கூடிய காரணங்களால் கருத்தரிப்பு நிகழாமல் இருக்கலாம். சிலருக்கு பிறவிக்குறைபாடு, விபத்து அல்லது நோய்த்தொற்று காரணமாக விதைப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அமைப்பில் குறைபாடு இருக்கலாம். இதன் காரணமாகவும் குழந்தையின்மை ஏற்படலாம்.

தொடர்ச்சியாக உடலுறவு வைத்துக்கொள்ளாததும் குழந்தையின்மைக்கான வாய்ப்பைக் குறைத்துவிடுகிறது. முட்டை வெளிப்பட்ட நாளில் விந்தணு சேர்ந்தால்தான் கருத்தரிக்க முடியும். அதுவே, மிகக் குறைவான விந்தணு கொண்டிருப்பவர் கருத்தரிக்க வாய்ப்புள்ள நாளில் அதிக அளவில் அதாவது ஒரு நாளைக்கு பல முறை உடலுறவு கொள்வதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இயல்புநிலை விந்தணுக்கள் எண்ணிக்கை கொண்டிருப்பவர்கள் தினசரி ஒருமுறை உடலுறவு வைத்துக்கொண்டாலே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. செக்ஸ் வைத்துக்கொள்ளும் டெக்னிக்கில் தவறு செய்பவர்களுக்கும்கூட குழந்தையின்மைக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

- ரகசியம் பகிர்வோம்

டவுட் கார்னர்

“எங்களுக்குத் திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. குழந்தையின்மை பிரச்னையைப் போக்க எது சரியான சிகிச்சை என்று சொல்ல முடியுமா?”

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், சென்னை.

“ஒரே தீர்வு என்று இதில் ஏதும் இல்லை. இதன் பொருள் சிகிச்சையே இல்லை என்பது இல்லை. குழந்தையின்மைக்கான காரணங்களாகப் பல்வேறு காரணிகளைக் குறிப்பிடுகிறோம். இந்த அத்தனை காரணிகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க முடியாது. பிரச்னைக்கு ஏற்பத்தான் சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். இதற்கு முதலில் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அவர் சில உடல்ரீதியான பரிசோதனைகள் செய்துவிட்டு, தேவை எனில், ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் சிலவற்றைப் பரிந்துரைப்பார். அந்த முடிவுகள் அடிப்படையில்தான் என்ன மாதிரியான சிகிச்சை தேவைப்படும் என்பது முடிவாகும். பலருக்கும் இந்த விஷயத்தில் பதற்றம் இருக்கும். அமைதி காத்தால் வெற்றி பெறலாம்.”

“குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் பற்றி சொல்ல முடியாமா? எப்படி சிகிச்சை அளிக்கப்படும்?”

சிவராமன், மதுரை.

“முந்தைய கேள்விக்கு சொன்னதுபோலதான். சிகிச்சை என்பது தம்பதியினர் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆண், பெண்ணின் உடல்நிலையைப் பொருத்து சிகிச்சை மாறுபடும். அவர்களுக்கு எதனால் குழந்தையின்மைப் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்த பின்னர், அதைப் போக்க சிகிச்சை அளிக்கப்படும். உதாரணத்துக்கு, நோய்த்தொற்று காரணம் என்றால், அதைச் சரிசெய்ய சிகிச்சை அளிக்கப்படும். விந்தணுக்கள் ஆற்றல் பெருக, சரியான நேரத்தில் வெளிப்பட, முட்டையை அடைந்து கருத்தரிக்க என்று சிகிச்சை பல வகைகள் உள்ளன. சிலருக்கு மனரீதியான பிரச்னையைப் போக்க கவுன்சலிங் அளிக்கப்படும். சிலருக்கு செயற்கை முறையில் கருத்தரிக்கும் சிகிச்சை அளிக்கப்படும். எனவே, யாருக்கு எந்த சிகிச்சை என்று பொதுவாக சொல்லிவிட முடியாது.”

“எனக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிறது. குழந்தை வேண்டாம் என்று இந்த வருடம் திட்டமிட்டிருந்தோம். நான் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறேன். இதனால், அடிக்கடி வெளியூர் பயணம் சென்றுவிடுவேன். இன்னும் ஆறு மாதங்கள் கழித்து கருத்தரிக்கலாம் என்று இருக்கிறோம். என் மனைவி கருத்தரிக்க, ஒரு வாரத்துக்கு எத்தனை நாட்கள் நாங்கள் உடலுறவுகொள்ள வேண்டும்?”

ஃபெலிக்ஸ், கோவை.

“கருத்தரிக்க இத்தனை முறை உடலுறவு கொண்டால் போதும் என்று எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லை. குறிப்பிட்ட இடைவெளியில் உடலுறவுகொள்ள வேண்டும். மனம் அமைதியான சூழலில், சரியான நேரத்தில் உடலுறவுகொண்டால் போதுமானது. உங்கள் மனைவிக்கு சரியாக 28 நாட்களில் மாதவிலக்கு சுழற்சி ஏற்படுகிறது எனில், மாதவிலக்கு வந்த நாளை முதலாவது நாளாகக் குறித்துக்கொள்ள வேண்டும். அன்றில் இருந்து, ஒன்பதாவது நாள் முதல் 18வது நாள் வரை கருத்தரிக்க ஏற்ற காலம். அந்த நாட்களில் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலம் உங்கள் மனைவி கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.”