Published:Updated:

உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 பொழுதுபோக்குகள்! #HobbyTherapy

உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 பொழுதுபோக்குகள்! #HobbyTherapy
உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 பொழுதுபோக்குகள்! #HobbyTherapy

பொழுதுபோக்கு.. நாமெல்லாம் இஷ்டப்பட்டு செய்கிற ஒரு செயல்... ஆர்வம் என்றும் சொல்லலாம். பலருக்கு சினிமா பார்ப்பதுகூட பொழுதுபோக்குதான்.  நம்மில் பெரும்பாலானவர்கள் ஓய்வு நேரத்தில் நம்  இன்பத்துக்காக அல்லது ஓய்வுக்காக பொழுதுபோக்குகளில் ஈடுபடுவோம். இப்போதைய கம்ப்யூட்டர் உலகில் இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களிலேயே நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது வேதனையான செய்தி. வேலை, குடும்பம், குழந்தைகளை கவனித்துக்கொள்வது என்று நகரும் பரபரப்பான சூழலில், நமது ஆரோக்கியத்தை கவனிக்கத் தவறிவிடுகிறோம். மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மருத்துவமனைகளை அணுகுகிறோம், மாத்திரைகளை விழுங்குகிறோம். ஆனால், பொழுதுபோக்குகள் மூலமே உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்! நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.

வேலை, உறக்கம், நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிடுவது தவிர, பிடித்தமான பொழுதுபோக்குகளைச் செய்வதன் மூலம் நாம் ஆரோக்கியமாக வாழலாம். இங்கே நாம் பார்க்கப்போகும் ஐந்து பொழுதுபோக்குகள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக பேணிக்காக்க உதவுபவை. அவை...

கேளிக்கை + உடற்பயிற்சி = நடனம்

எந்த உபகரணமும் இல்லாமல், உடலைப் பயன்படுத்தி மிக எளிதாக அனைவராலும் செய்யக்கூடிய நடனம் ஒரு சிறந்த உடற்பயிற்சி. நடனமாடுவதால் உடல் ஆரோக்கியம் கூடும். பிடித்தமான இசையும் உடலும் மட்டுமே நடனமாடப் போதுமானவை. நடனம் என்பது ஒரு சமூக நடவடிக்கை. நடனமாடுவது இதயத்துக்குச் சிறந்த உடற்பயிற்சி. மேலும், இதயத்தை வலுப்பெறச் செய்யும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; எலும்புகளையும் தசைகளையும் வலுவடையச் செய்யும்.

2011-ம் ஆண்டில் 9,917 பேரை ஈடுபடுத்திச் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், அவர்களில் சிலரை வாரத்துக்கு மூன்று நாள்கள் நடனமாடச் செய்ததில், மற்றவர்களைவிட நடனமாடியவர்களின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்டர் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் அண்டு பிரிவென்ஷன் (Centers for disease contrtol and prevention) அறிக்கையின்படி, ஆண்டுக்கு 28 லட்சம் முதியவர்கள் மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு மன இறுக்கமே காரணம் என்று கூறுகிறார்கள். `சிடிசி’ ஆய்வின்படி, 2005-ம் ஆண்டு முதல் 2014 ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தவறி விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கையில், ஒரு லட்சம் பேரில் 43,000 முதல் 58,000 பேர் என்று கூறுகிறது. மன இறுக்கத்தால் ஏற்படும் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க பொழுதுபோக்கே சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நியூசிலாந்தைச் சேர்ந்த மருத்துவ இதழான `ஜர்னல் ஆஃப் மெடிசின்’ (journal of medicine) வெளியிட்ட ஆய்வறிக்கையில், மன இறுக்கம் காரணமாக முதுமையில் ஏற்படும் மறதி நோய் (Dementia), நடனமாடுவதால் 76 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறுகிறது.

மூளைக்கு நல்லது தோட்டம்!

தோட்டம்வைத்துப் பராமரிப்பது ஆரம்பத்தில் உடலுக்குப் பயிற்சிபோலத் தோன்றினாலும், மூளைக்கு ஆரோக்கியம் கொடுக்கும் செயல் என்று ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கட்டடங்களுக்குள் அடைந்துகிடப்பதைவிட, பொதுவாக சூரிய ஒளி மற்றும் இயற்கையான சூழலில் நேரத்தைச் செலவிடுவதால் உடல் ஆரோக்கியம் பெறும்; வைட்டமின் டி அளவு அதிகரிக்கும்.

2014-ம் ஆண்டில் `பிஎல்ஓஎஸ்’ (PLOS) இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், தினந்தோறும் தோட்டத்தைப் பராமரித்தல் மற்றும் சைக்கிளிங் செய்யும் முதியவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு மற்றும் வயதான காலத்தில் ஏற்படும் மறதிநோய் (Dementia) பாதிப்புகள் 36 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறுகிறது. மேலும், ஸ்வீடனைச் சேர்ந்த கரோலின்ஸ்கா நிறுவனத்தின் (Karolinska Institute) 2013-ம் ஆண்டின் ஆய்வின்படி, தோட்டம்வைத்துப் பராமரிப்பதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் 30 சதவிகிதம் குறைவதாகக் கூறுகிறது.

காயத்துக்கு நல்ல மருந்து... எழுதுதல்!

எழுதும் பழக்கம் உடல் மற்றும் மனம் சார்ந்த ஏராளமான பிரச்னைகளுக்கு மருந்தாகும்..மேலும், நினைவாற்றலை அதிகரிக்கும், மன இறுக்கத்தைப் போக்கும், நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எழுதும் பழக்கத்தால் மனஉறுதி அதிகரிப்பதாகவும், உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் கூறுகின்றன.

நியூசிலாந்தின் ஆக்லேண்ட் பல்கலைக்கழகம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைவைத்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. நோயாளிகளை இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவினரிடம் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து எழுதும்படியும், இரண்டாவது குழுவினரிடம் அடுத்த நாளுக்கான திட்டங்கள் குறித்து எழுதும்படியும் கூறினார்கள். 11 நாடள்கள் நடந்த ஆய்வின் பின்னர், இரு குழுவினரின் திசுக்களை எடுத்து ஆய்வு (Biopsy) செய்தனர். அதில், வாழ்க்கை அனுபவங்கள் குறித்து எழுதிய குழு உறுப்பினர்களின் 76 சதவிகிதக் காயங்கள் குணமடைந்திருந்தன. மற்றொரு குழு உறுப்பினர்களின் காயங்கள் 42 சதவிகிதமே குணமடைந்திருந்தன. இதிலிருந்து, தனக்குப் பிடித்தமானவற்றை எழுதுபவர்களுக்கு காயங்கள் விரைவில் குணமடையும் என்பதைக் கண்டறிந்தனர்.

முன்பெல்லாம், எழுதுவதற்கு பேர்ப்பரரையும் பேனாவையும் தேடவேண்டி இருக்கும். இப்போது, ஃபேஸ்புக், ட்வீட்டர், பிளாக் மற்றும் பல வகையான சமூக ஊடகங்களில் எழுத வாய்ப்புகள் கிடைத்துள்ளன. எழுதுவோம், காயங்களை குணமாக்குவோம். இது மன இறுக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

இசை மருந்து!

நம் பூமியில் இசை இல்லாத இடமே இல்லை. இசையை ரசிக்காதவர்களே இல்லை என்றே கூற வேண்டும். அப்படிப்பட்ட இசை நம் உடலுக்கும் மனதுக்கும் ஆற்றும் பங்கு குறித்து பார்ப்போம். இசையைக் கேட்பது, வாசிப்பது இரண்டுமே மனதுக்கும் உடலுக்கும் நல்லது. 2013-ம் ஆண்டில் மெடிக்கல் நியூஸ் டுடே (Medical News Today) செய்த ஆய்வில், இசை உடலின் நரம்பியல் வேதியல் (Neurochemistry) செயல்படுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரியவந்தது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மன இறுக்கம், பதற்றம், மனச்சோர்வைப் போக்கும் என்றும் கண்டறியப்பட்டது. இசை மன இறுக்கத்தை ஏற்படுத்தும், கார்டிசோல் (Cortisol) ஹார்மோன் அளவைக் குறைக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

அறுவைசிகிச்சை செய்துகொள்ளப் போகும் நோயாளிகளுக்கு மயக்க மருந்துகளைவிட, இசையால் மனச்சோர்வு குறைவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. இசை நம் வாழ்வின் அங்கம். காதல், காமம், உணவு, உணர்வு, மகிழ்ச்சி, சோகம் என அனைத்திலும் இசை இரண்டறக் கலந்திருக்கிறது. குழந்தைகள் தாலாட்டு முதல் மரண ஒப்பாரி வரை நம்முடன் பயணிக்கும் இசை ஒரு வரமே.

செல்லப்பிராணிகள்

செல்லப்பிராணிகள் நமக்கு நல்ல நண்பர்கள். மேலும், நாம் ஆரோக்கியமாக வாழவும் செல்லப்பிராணிகள் உதவுகின்றன. சிடிசி (CDC) ஆய்வின்படி செல்லப்பிராணிகள் உடற்பயிற்சி, வெளியில் சுற்றுவது மற்றும் சமூகமயமாதல் உள்ளிட்டவற்றில் நமக்கு வாய்ப்புகளை அளிப்பதோடல்லாமல், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், கொழுப்பைக் குறைக்க உதவும், இதய நோய்க்கு காரணமாக இருக்கும் ரத்தத்தில் உள்ள டிரைக்ளிசரைடு (Triglyceride) அளவைக் குறைக்கும். மேலும், தனிமையாக உணர்வதைக் குறைக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவது குறைவாக உள்ளது என்று 2013-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக செல்லப்பிராணியாக நாயை வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவாக இருக்கிறதாம். ஏதாவது ஒரு செல்லப்பிராணியை வளர்ப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்.

பொழுதுபோக்குகளில் நமது நேரத்தை மட்டும் செலவு செய்யாமல், உடல் ஆரோக்கியம் பெரறும் வகையில் பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்து நிம்மதியாக வாழ்வோம். வருமுன் காப்பதே நன்று... இன்றே!