Published:Updated:

நாட்டு மருந்துக்கடை - 23

பூவரசுஹெல்த்

நாட்டு மருந்துக்கடை - 23

பூவரசுஹெல்த்

Published:Updated:
நாட்டு மருந்துக்கடை - 23

20 வருடங்களுக்கு முன்பு வரை மார்கழி மாதக் காலைகளில் தினமும் பார்த்த காட்சி நம் நினைவில் இப்போதும் அழியாமல் இருக்கிறதுதானே! நம் பெண்கள் அதிகாலையில், எழுந்து முற்றத்தைப் பெருக்கி, குப்பையை அகற்றி, விழுந்திருக்கும் இலைதழைகளைப் பொறுக்கி, மாட்டுத்தொழுவத்துக்குப் பின் இருக்கும் உரக்குழியில் போட்டுவிட்டு, தொழுவத்தில் இருந்து சாணம் எடுத்துவந்து நீர் விட்டுக் கரைத்து, அதை முற்றம் முழுதும் தெளித்து, வாசல் படிக்கட்டுக்கு நேரே அரிசி மாக்கோலமிட்டு கோலத்தின் மையத்தில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் பூவரசம் பூ செருகிவைப்பார்கள். அது, ஒரு கலாசாரக் கவிதை; பண்பாட்டுப் பரிமாறல். அதைத் தாண்டி உற்றுப்பார்த்தால், அத்தனையும் மரபின் மருத்துவம். புறவாசல் என்ற ஒன்று இப்போது நகரத்து அடுக்குமாடி வீடுகளில் இல்லை. முன்வாசல் முற்றம் என்பது இன்று ‘காமன்’ ஏரியா. அதிகபட்சம் பிளாஸ்டிக் பூ ஒட்டலாம். அங்கே கோலத்தில் அரிசி இல்லாததால், பசியில் எறும்புகள் வேறுபக்கம் இடம்பெயர்ந்துவிட்டன.

ஐரோப்பிய அழகு மலர் ‘துலிப்’ ஐ சிலாகிக்கும் பல இளசுகளுக்கு வருடம் முழுக்க மரத்தில் பூக்கும் நம் ஊர் துலிப் பற்றி தெரியாது. இந்திய துலிப் மலர்தான் அன்று பாட்டி வாசலில், சாணத்தில் செருகிய பூவரசு. ‘பூக்களின் அரசன் அதனால்தான் `பூவரசு’ எனும் காரணப் பெயர்’  என்றும் `இல்லை இல்லை பூமிக்கு அரசன் அதனால்தான் அந்தப் பெயர்’ என்றும் இந்த மலரைக் கொண்டாடியது பண்டைத் தமிழகமும் சித்த மருத்துவமும்.

நாட்டு மருந்துக்கடை - 23

மருத்துவ உலகுக்கு இந்த மரத்தின் இலை, பூ, பட்டை என அத்தனையும் தெரியும். வணிக உலகுக்கு அதன் மரக்கட்டை, அதன் வீட்டுப்பொருளாக்கப் பயன் தெரியும். இசை உலகுக்கு, தவில், தம்புரா செய்யும் பயன் தெரியும். இப்படி நம் வாழ்வின் அத்தனை அங்கங்களிலும் பரிச்சயமான நாட்டு மருந்து பூவரசு. தன்னுடைய துவர்ப்பும் கசப்புமான சுவைகளில் ஆல்கலாய்டுகளையும் ஃபிளேவனாய்டுகளையும் ஒளித்துவைத்துள்ளது பூவரசு. `குறிப்பாக ‘தெப்சின்’ எனும் அதன் மஞ்சள் நிறமிச் சத்து ஒரு மாமருந்து’ என்கிறது அதை ஆய்ந்தறியும் நவீன மருந்தறிவியல்.

புண்களை ஆற்றும் தன்மை இந்த பூவரசின் மிக முக்கிய மருத்துவக் குணம். புண்களைக் கழுவ இதன் பட்டையைக் கஷாயமாக்கிப் பயன்படுத்துகிறது சித்த மருத்துவம். இந்தக் கஷாயத்தைப் பயன்படுத்துகையில், பட்டையின் எதிர் நுண்ணுயிரி ஆற்றல், புண்களில் கிருமி வளராமல் இருக்க ஒரு பக்கம் காக்கிறது. பட்டையில் உள்ள துவர்ப்புச் சத்து (Tannins) புண்களை ஆற்றிக் குணமாக்கும் புதுத் திசுக்களை (Granulation tissue) வளர்க்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்ல... இரண்டு மருத்துவம்! லேசில் ஆறாத புண்களான, ரத்த நாள தாபிதப் புண்கள் (Venous ulcers), சர்க்கரை நோயில் வரும் புண்கள் முதலான அத்தனை ஆறாத புண்களுக்கும் பூவரசம் பட்டையின் கஷாயக் கழுவல் பயனாகும். இதன் பட்டையை நுண்ணிய துகளாக்கி, இலைத்தூளை சம அளவு கலந்து பயன்படுத்தும் வழக்கமும் சித்த மருத்துவத்தில் உண்டு. இது முதலிலேயே நம் கவிஞர்களுக்குத் தெரிந்திருந்தால், ‘பூவரசம்பூ பூத்தாச்சு... பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு’ என்பதற்குப் பதிலாக, ‘புண்ணுக்கு சேதியும் வந்தாச்சு’ என எழுதியிருப்பார்கள்.

நாட்டு மருந்துக்கடை - 23

கழுத்தில் அணியும் செயின், கைக்கடிகாரம் இவை அழுத்தி ஏற்படும் கரும்படலத் தோல் நோய் மறைய ‘பூவரசம் பூத்தைலம்’ பயனாகிறது. இதை வீட்டிலேயே செய்துகொள்ளலாம். பூவின் இதழ்களைச் சேகரித்து, அதை நல்லெண்ணெயில் காய்ச்சி, கருத்த தேமலில் தடவிவர, கரும்படலம் மெள்ள மெள்ள மறையும். `வெண்திட்டு (Vitiligo/Leucoderma) ஒரு கவலை கொள்ளும் நோய் அல்ல. தோலின் நிறமிச்சத்து இன்மை மட்டுமே’ எனப் பலமுறை சொன்னாலும், அது இன்றும் பாதிப்புற்றோருக்குத் தரும் மனஅழுத்தமும், சமூக அழுத்தமும் சொல்லி மாளாதது. `அந்த வெண்படைக்கு எளிய தீர்வைத் தருவது இந்த பூவரசம்பட்டை’ என்கின்றன சித்த மருத்துவ ஆய்வுகள். பூவரசம் பட்டையைச் சேகரித்து, அதனைப் பொதித்துவைத்துக் கொண்டு, 20 கிராம் எடுத்து 240 மில்லி நீர்விட்டு அந்தத் தண்ணீர் 60 மில்லியாக வரும் வரை கொதிக்கவைத்து கஷாயமாக்கி, அதைக் காலை உணவுக்கு முன் குடிப்பதும், உதட்டில் வரும் வெண்புள்ளி நனையும்படி கொப்பளிப்பதும் இந்த வெண்திட்டுக்களை மறையவைக்கிறது.

`காஸிபோல் (Gossypol) எனும் முக்கிய சத்துதான் இந்த மரப்பட்டையிலும் பூவிலும் பொதிந்திருந்து பல மருத்துவக்குணங்களைத் தருகிறது’ என்கிறது நவீன அறிவியல். மேலும், கருத்தரிப்பு தாமதமாவதைத் தடுக்கவும், அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய்க்கும் இந்த மரத்தின் சத்துக்கள் பயனாவதை உறுதி செய்துள்ளன.

நினைவிருக்கிறதா நாம் சிறு வயதில் கொண்டாடி மகிழ்ந்தது. பூவரசம் இலையில் பீப்பி செய்து ஊதி மகிழ்ந்தோம். சீக்கிரமே இந்த மரத்தின் மருத்துவப் பயனை உலகமே ட்ரம்பெட் (Trumphet) எடுத்து ஊதிக் குதூகலித்தாலும் ஆச்சர்யம் இல்லை!

- தொடரும்