Published:Updated:

இள வயதில் உண்டாகும் சர்க்கரை நோய்... பாதிப்புகள், தீர்வுகள்! #DiabetesAlert

இள வயதில் உண்டாகும் சர்க்கரை நோய்... பாதிப்புகள், தீர்வுகள்! #DiabetesAlert
News
இள வயதில் உண்டாகும் சர்க்கரை நோய்... பாதிப்புகள், தீர்வுகள்! #DiabetesAlert

இள வயதில் உண்டாகும் சர்க்கரை நோய்... பாதிப்புகள், தீர்வுகள்! #DiabetesAlert

தமிழர்கள், `தலைவாழை இலைபோட்டு விருந்து பரிமாறியவர்கள்’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்கள். இனிப்பில் தொடங்கி இனிப்பில் நிறைவடைவது நம் பண்டிகை விருந்து. கடந்த ஐந்து ஆண்டுகளாக தெருவுக்குத் தெரு இனிப்பில்லாத (Sugar free) ரொட்டிகள், குக்கீஸ்கள் மற்றும் சாக்லேட்டுகளை விற்பனை செய்யும் ஸ்வீட் ஸ்டால்கள் பெருகிவிட்டன. `சில்லு’, `நொண்டி’, `பச்சைக்குதிரை’... என ஓடி, ஆடி விளையாடவேண்டிய குழந்தைகள் தொடங்கி, வயது வித்தியாசமில்லாமல் ஏதேனும் ஒரு மைதானத்தில் எல்லோரும் மூச்சிரைக்க நடந்துகொண்டிருக்கிறார்கள். போகிறபோக்கில் வேப்பங்கொழுந்தையும் ஆவாரம்பூவையும் கிள்ளி வாயில் போடுகிறார்கள். மைதானத்தின் முகப்பு வாயிலில் கேழ்வரகுக் கஞ்சியும் ஆவாரம்பூ தேநீரும் விற்கப்படுகின்றன. ஒட்டுமொத்த மனிதர்களும் ஏதேனும் ஒரு நோய்க்கு மிரண்டு, அச்சத்தோடும் பதற்றத்தோடும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்குப் பள்ளிக் குழந்தைகளின் உணவுப் பைகளுக்கு மாற்றாக, இன்சுலின் மருந்துகள் இடம்பெற்ற துயரத்தை யோசிக்க வேண்டும். `டயாபடீஸ்’ (Diabetes) எனப்படும் சர்க்கரைநோய் என்பது நோய் அல்ல. இன்சுலின் எனப்படும் ஹார்மோன் குறைபாடு (Hormonal dysfunction) என்கிறார்கள் மருத்துவர்கள். உடலளவிலும் மனதளவிலும் மனித உயிர்களை வதைத்துக்கொண்டிருக்கும் இந்தக் குறைபாடு குறித்த பல்வேறு மருத்துவ ஆய்வுகள் உலக அளவில் நடைபெற்று வருகின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் 2017-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, 8.8 சதவிகிதம் இளம் வயதினருக்கு இன்சுலின் குறைபாடு இருக்கிறது. அமெரிக்கன் டயாபடிக் அமைப்பு (ADA), குளோபல் பிரிவெலன்ஸ் ஆஃப் டயாபடீஸ் (Global Prevalence of Diabetes - GPD), உலகச் சுகாதார நிறுவனத்தின் (WHO) 191 மாநில உறுப்பினர்கள் கூட்டம் இணைந்து (Nation's Population estimates for 2000 and 2030) வயது மற்றும் பாலினங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்ட தரவின் அடிப்படையில், சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 2000-ம் ஆண்டில் 17 கோடியே 10 லட்சம் பேர் (171 மில்லியன்). இதுவே 2030-ம் ஆண்டில் 36 கோடியே 60 லட்சம் பேராக (366 மில்லியனாகும்) இருக்கும் (Ref - Diabetes Care - ADA) என்கின்றனர்.

சர்க்கரைநோய் குறைபாட்டால் பெண்களைவிட ஆண்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், பெண்களில் அதிகமானவர்களுக்கு இன்சுலின் குறைபாடு இருக்கிறது. வளரும் நாடுகளிலும் நகரங்களிலும் சர்க்கரைநோய் அதிகம் பரவிவருகிறது. இந்தியாவில் ஹைதராபாத், கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் சென்னை மற்றும் மும்பையில் 11 சதவிகித மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இதன் தாக்கத்துக்கு ஆளானவர்கள் குழந்தைகள் (1 - 2 வயது), 25 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் குறிப்பாக 10 முதல் 18 வயதுடைய வளர் இளம் பருவத்தினர். இளம் தலைமுறையினரைக் குறிவைக்கும் சர்க்கரை நோயைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டியது அவசியம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இயல்பாகவே வியத்தகு ஆற்றல் உடையது மனித உடல். உயிர்ச் செல்கள் அவ்வளவு எளிதாகத் தங்களை மாய்த்துக்கொள்வதில்லை. நோய்க்கிருமிகளுடன் சண்டைபோட்டு தற்காத்துக்கொள்கின்றன. ஹார்மோன்களும் நீர்ச்சத்துகளும் வேதியியல் கூறுகளும் தன்னியல்பாக தங்களைத் தாங்களே சமன் செய்துகொள்வது (Milieu interieur) ஆச்சர்யமான செய்தி. அடிப்படையான அதன் இயக்கநிலையைப் புரிந்துகொண்டால்தான் மனித உடலின் போராட்டம் புரியும். கணையத்தில் ஆல்பா (Alpha) மற்றும் பீட்டா (Beta) செல்கள் இருக்கின்றன. ஆல்பா செல்கள் குளூகோகான் (Glucagon), பீட்டா செல்கள் இன்சுலின் (Insulin) ஹார்மோனைச் சுரக்கின்றன. சாப்பிடும் உணவிலுள்ள குளுக்கோஸ் சத்துகள், திசுக்களால் உட்கிரகிக்கப்பட்டு உடலுக்குத் தேவையான அளவு ரத்தத்தில் கலக்கின்றன. இதற்கு மூல காரணமாக இருப்பது இன்சுலின்.

மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ணும்போது ரத்தத்தில் குளூக்கோஸின் அளவு அதிகரிக்கும். அந்த நிலையில் இன்சுலின் தேவையான அளவு உற்பத்தியாகி, அதைச் சரிசெய்யும். இதேபோல் சரியான நேரத்தில் சாப்பிடாமலிருப்பது, விரதம் மற்றும் உணவுக்கட்டுப்பாடு நேரங்களில் ஆல்பா செல்கள் குளுகோகானை உற்பத்தி செய்து குளுக்கோஸ் அளவைச் சமன்செய்யும். இவை கைமீறிப்போன தருணங்களில்தான் நோய் தன் வீரியத்தைக் காட்டத் தொடங்கும்.

சர்க்கரைநோயில் பல வகைகள் இருக்கின்றன. டைப் - 1 (TYPE - 1), டைப் -2 (TYPE - 2), கர்ப்பகால சர்க்கரைநோய் (GDM - Gestational Diabetes Mellitus). இன்சுலின் சுரக்காமல் இருப்பதை `டைப்-1 சர்க்கரைநோய்’, இன்சுலின் சுரந்தும் பயனற்ற நிலையில் இருப்பதை `டைப்-2 சர்க்கரைநோய்’ எனவும் சொல்கிறார்கள். இதில் இரண்டாம் வகை 35 வயதுள்ளவர்களுக்கு ஆரம்பிக்கலாம். `இதற்கான காரணங்கள் என்னென்ன... குழந்தைகளின் நிம்மதியை, கனவுகளைச் சீர்குலைக்கும் இந்தக் குறைபாட்டை முற்றிலும் சரிசெய்ய இயலுமா?’ என்று பொது மருத்துவர் த.அறம் அவர்களிடம் கேட்டோம்.

“சர்க்கரைநோய் வந்ததை உறுதி செய்த பிறகு, முற்றிலுமாக இல்லாமல் செய்ய முடியாது. இன்சுலின் ஊசி மற்றும் அதற்கான மாத்திரைகளால் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். பீட்டா செல்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு இன்சுலின் முற்றிலும் சுரக்காத நிலையில், திசுக்களுக்குச் செல்ல முடியாமல் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் `டைப்-1 டயாபடீஸ்’ அல்லது `ஜுவனைல் டயாபடீஸ்’ (Juvenile Diabetes) என்கிறோம். செயற்கையாக இன்சுலின் செலுத்தப்படுவதால் இன்சுலின் மருந்தைச் சார்ந்து வாழும் (Insulin dependent Diabetes Mellitus) நிலையில் இவர்கள் இருப்பார்கள்.

பூப்பெய்தும் வயதுடைய பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்... குறிப்பாக சினைப்பை கட்டிகளில் (PCOS). அந்த நிலையில் சர்க்கரைநோயின் வெளிப்பாடு அதிகமிருக்கும். வளரும் பருவத்தில் (Growing child) பெரும்பாலும் அதிகமாகச் சாப்பிடுவதும், தாகமெடுத்து தண்ணீர் அதிகம் அருந்துவதையும் பார்க்க முடியும். இது இயல்புதானே எனப் பெற்றோர் குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள்.

இதய பாதிப்பு, மூச்சுத்திணறல், கால் நரம்பு பாதிப்பு, மயக்கம், கண் பார்வை மங்குதல் போன்றவற்றுடன் இறுதியாக `கீட்டோஅசிடோசிஸ்’ (Ketoacidosis) என்று சொல்லப்படும் உயிரைப் பாதிக்கும் கோமா ( Diabetic coma) நிலையில் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 400 எம்.ஜி / டெ.லி என மருத்துவமனையில் சேர்க்கும்போதுதான் சர்க்கரைநோய் இருப்பதைக் கண்டறிய முடிகிறது. இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் 80 சதவிகிதம் அழிந்த பிறகே நோய் இருப்பதை அறிவதால், பாதிக்கப்பட்ட குழந்தையின் உயிரை முதலில் காப்பாற்றவேண்டியிருக்கிறது. அதற்குப் பின்னர் தொடர்ச்சியான கண்காணிப்பிலும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கொண்டும் இன்சுலின் ஊசி போடப்படுவதுடன் அதற்கான முறைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இன்சுலின் மாத்திரைகள் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கின்றன. இன்சுலின் பம்ப் மற்றும் மருந்தை உறிஞ்சிக்கொள்ளும் இன்ஹேலர்கள் வந்துவிட்டன. டைப்-1 டயாபட்டிக் நோய்க்கான முதன்மையான காரணமாகச் சொல்லக்கூடியது ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் (Auto immune disorder). அதாவது வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்படும்போது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி (Antibodies) கிருமிகளோடு போராடி, நம்மைக் காப்பாற்றிவிடும். அப்படியான சூழலில் கணையத்தில் இருக்கும் பீட்டா செல்களையும் நோய் எதிர்ப்பு சக்திகள் அழித்துவிடுகின்றன. இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

பரம்பரையாக சர்க்கரைநோய் இருப்பதும், சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான வைரஸ் காய்ச்சல் (Viral fever) தட்டம்மை (Measles), தாளம்மை (Mumps), ரூபெல்லா (Rubella) போன்றவையும் இந்தக் குறைபாட்டுக்குக் காரணங்கள். ஆரோக்கியமான உணவு முறைகள், உடற்பயிற்சி, முறையான மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் சர்க்கரைநோயை நிச்சயம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் ரத்த குளுக்கோஸ் அளவைச் சரிபார்க்க வேண்டும்.

உணவில் மாற்று முறையைக் கடைப்பிடிப்பது நல்லது. அதாவது, சாதம் சாப்பிடும் அளவுக்குக் காய்கறிகளைத் தட்டில் நிரப்பி, காய்கள் தொட்டுக்கொள்ளும் இடத்தில் சாதத்தின் அளவைக் குறைவாக வைக்க வேண்டும். பழங்கள், பருப்பு வகைகளை உட்கொள்ளலாம். நாட்டுக் காய்களான பீர்க்கங்காய், பூசணிக்காய், சீனி அவரைக்காய் (கொத்தவரங்காய்), முருங்கைக்காய், சுரைக்காய் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

இன்சுலின் போட்டுக்கொள்ளும் பள்ளிக் குழந்தைகளைப் பற்றிய மருத்துவ விவரங்களைப் பள்ளி ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் பெற்றோர் தெரிவிக்க வேண்டும். இன்சுலின் விலை அதிகம் என்பதால், ஏழை எளிய மக்களால் வாங்க முடிவதில்லை. குழந்தை பிறந்தவுடன் மாட்டுப்பாலைத் தவிர்த்துவிட்டு, தாய்ப்பால் கொடுப்பது, அட்டவணைப்படி தவறாமல் தடுப்பூசிகள் போடுவது, பீட்சா பர்கர் போன்ற துரித உணவுகளை விலக்குவது, உடல் எடையைக் குறைப்பது போன்றவற்றால் சர்க்கரைநோயைத் தவிர்க்கலாம். தோல்களில் பாதிப்பு, வெட்டுக் காயங்கள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். எப்போதும் காலணிகள் அணிந்திருப்பது பாதுகாப்பானது. உடலுழைப்பு இல்லாமல் நொறுக்குத்தீனிகளைச் சாப்பிட்டு, மணிக்கணக்காக தொலைக்காட்சி முன்னர் அமர்ந்திருப்பது மிகவும் ஆபத்தானது.

குடும்பத்தில் ஒருவருக்கு டைப்- 1 டயாபடீஸ் இருந்தால் அந்தக் குழந்தையின் சகோதர சகோதரிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்துவிடுவது நல்லது. சிறு வயதிலேயே சர்க்கரைநோய் வந்துவிட்டதே என்று அச்சம் கொள்ள தேவையில்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருந்தால் போதும்; எப்போதும்போல் எல்லோரையும்போல் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இதுபோன்ற தன்னம்பிக்கை வார்த்தைகள்தாம் இன்றைய தலைமுறைக்குத் தேவைப்படுகிறது. எதிர்பாராதவிதமாக குழந்தைக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்பட்டால் அந்தக் குடும்பமே நிலைகுலைந்துவிடுகிறது. பிள்ளைக்கு நம்பிக்கை ஊட்டவேண்டிய பெற்றோர் தடுமாறுகிறார்கள். முதலில் சர்க்கரைநோயின் தன்மையைப் பெற்றோர்கள் உணர்வதோடு, குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். எல்லாவற்றையும் இயலாமையாகப் பார்த்துப் பழகிய இந்தச் சமூகம், இது போன்ற குழந்தைகளையும் நோயாளிகளாகச் சித்திரித்துவிடுகிறது. இனி படித்து என்னாகப் போகிறது, அழகுபடுத்தி என்னாகப் போகிறது, பாட்டுப்பாடி என்னாகப் போகிறது, படம் வரைந்து என்னாகப் போகிறது என அலட்சியபடுத்தி, வாழ்க்கையே முடிந்துவிட்டதாக விரக்தி மனநிலையை உருவாக்கி சுற்றத்தார்களே நிராகரிப்பது தவறான அணுகுமுறை. பள்ளிச் சூழல் மிக முக்கியமானது. காலை 7 மணிக்கெல்லாம் பள்ளிக்குக் கிளம்பவேண்டிய நிலை இருக்கிறது. மூன்று வேளை ரத்தப் பரிசோதனை, மூன்று வேளை இன்சுலின் ஊசி கட்டாயம். அதிகம் சாப்பிடவும் முடியாது. சாப்பிடாமலும் இருக்க முடியாது. நினைத்ததையெல்லாம் மனதார அனுபவித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த அந்தக் குழந்தையின் மனவலியை ஆசிரியர்களும் மற்றவர்களும் உணர வேண்டும்.

பெற்றோர்களின் பங்கு, வார்த்தைகளால் நிர்ணயிக்க முடியாதது. அவர்களும் ஒரு மருத்துவரைப்போல் இருந்தாக வேண்டும். அவர்களுக்கான சுகாதாரக் கல்வியை, விழிப்புஉணர்வை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். குழந்தைக்குச் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருந்தால் எவ்வளவு யூனிட் இன்சுலின் ஊசி போட வேண்டும் என்பதையும், குறையும்போது குளுக்கோஸ் மாத்திரைகள் கொடுப்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும். உணவு முறை, ஊசி மருந்துகளை நினைவூட்டுவது, மருத்துவ விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மரபணுக் குறைபாடு (Genetic defects), கணையத் தொற்று (Pancreatitis), கணையத்தில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகள், தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் ஹார்மோன்கள் (Endocrinopathies) - உதாரணமாக, வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), கார்ட்டிசால் (Cortisol), குளுகோகான் (glucagon), எபினெப்ரின் (Epinephrine), வேறு சில நோய்களுக்காகக் கொடுக்கப்படும் மாத்திரைகளாலும் சர்க்கரைநோய் வரக்கூடும் என அமெரிக்க மருத்துவக் கழகம் குறிப்பிடுகிறது. (Ref.ADA- Diabetic care Magazine). குடும்பம், பணி, சமூகம் சார்ந்த மன உளைச்சல்கள் (Stress induced diabetes), தூக்கமின்மை (Insomnia) போன்றவை சர்க்கரைநோய்க்கு முக்கியமான காரணம் என்கிறார்கள். மனித மூளையில் உற்பத்தியாகும் மெலடோனின் (Melatonin) ஆழ்ந்த உறக்கத்தை தூண்டக்கூடியது. இரவில் நீண்ட நேரம் அலைபேசி, கம்ப்யூட்டர், ஃபேஸ்புக், வீடியோ விளையாட்டுகள் பார்ப்பதால் மெலட்டோனின் சுரப்பு இல்லாமல் தூக்கம் தடைபடுகிறது. அமைதியின்மையால் உடலின் சீரான இயக்கம் மாறுபட்டு, ஹார்மோன் குறைபாட்டுடன் மனச்சிதைவுக்குக் குழந்தைகள் ஆளாகிறார்கள்.

சித்திரை மாத வருடப் பிறப்பில் வேப்பம்பூ ரசம், வெந்தயக் கஞ்சி, ஆடி மாதத்தில் கரை புரண்டு ஓடும் ஆற்றோரக் கரைகளில் ஊதித் தின்ற நரி நாவல் பழம்... உணவோடு மருந்தாக நம் முன்னோர்கள் எழுதாமல் சொல்லிச் சென்றது எவ்வளவோ! இன்றைக்கு, பட்டை தீட்டியும் பல வண்ணங்கள் கூட்டியும், ரசாயனத்தைக் கொட்டியும் எல்.இ.டி விளக்குகளில் ஜொலிக்கும் துரித உணவுகளுக்கு மக்களைத் தூண்டுவது உச்சபட்ச வியாபாரத் தந்திரம். நோய்க்கு மாத்திரையா... மாத்திரைக்காக நோயா? என்பது நமக்குள் கேட்கப்படவேண்டிய கேள்வி. எல்லாவற்றுக்கும் அடிமையாகிப் போகிறோம். சகிப்புத்தன்மை எனச் சமாளித்துக்கொள்கிறோம். ஆனால், நோய்க்கும் அடிமையாகிப் போனது மிகப் பெரிய அவலம். இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு உங்கள் குழந்தைகளை உடல் மற்றும் உள்ளக் குறைபாடுகளிலிருந்து மீட்டெடுங்கள். சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையைப் பார்த்துக் கண் கலங்காதீர்கள். ஆரோக்கியமான எதிர்காலத்தை அவர்கள் கைகளில் கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை. அதிகம் கவனிக்கப்படாமல் தங்களை மெள்ளக் கரைத்துக்கொண்டிருக்கும் சர்க்கரைக் குழந்தைகள் இனித் தேனீக்களைப்போல் சுறுசுறுப்பாகட்டும். அவர்களை அன்பால் மொய்த்துக்கொள்வோம்.