அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நோய் நாடி!

நோய் நாடி!
News
நோய் நாடி!

மார்பகப் புற்றும்... சிகிச்சை முறைகளும்!கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!

மார்பகப் புற்றுநோய் பற்றிய பல மருத்துவத் தகவல்களை கடந்த இரண்டு இதழ்களாகப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்த இதழில் அந்நோய்க்கான சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோய் சிறப்பு நிபுணர் செல்வி ராதா கிருஷ்ணா.

நோய் நாடி!

‘‘மார்பகப் புற்றுநோயை எதிர்க்க, அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி, ஹார் மோன் தெரபி மற்றும் டார்கெட்டட் (targetted) தெரபி என பல மருத்துவ

சிகிச்சைகள் உள்ளன. நோயின் நிலை, தன்மையைப் பொறுத்து அது முடிவுசெய்யப்படும். சிலருக்கு அறுவை சிகிச்சையே முதல்கட்ட சிகிச்சையாக மேற்கொள்ளப்படும். அந்த சிகிச்சையின் பலன்களைப் பார்த்த பிறகே, பிற சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.

கீமோ தெரபி: செல்லின் மாறுபாட்டினை கேன்சர் என்கிறோம். அந்த மாறுபட்ட ஆகாத செல்லினை அழிக்க ட்ரிப்ஸ் வழியாக மருந்து செலுத்தப்படும். அப்படி செலுத்தப்படும்போது மற்ற நல்ல செல்களும் பாதிக்கப்படக்கூடும். அதனால் முடி உதிர்வு, வாந்தி, பேதி, சோர்வு, எதிர்ப்புச் சக்தி குறைவு போன்ற வெளிப்பாடுகள் தென்படும். ஆனாலும், அவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இந்த சிகிச்சையானது 21 நாளுக்கு ஒருமுறை என... 4, 6, 8 முறை என வியாதியைப் பொறுத்து வழங்கப்படும்.

ரேடியோ தெரபி: கதிர்வீச்சு வழியாக காமா, போட்டான் (மார்பகப் புற்றுநோயில் அதிகம் இதைத்தான் பயன்படுத்துவார்கள்) மற்றும் எலெக்ட்ரான் போன்ற கதிர்களை (தேவைக்கு ஏற்ப) செலுத்தி அதன் மூலமாக புற்று செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் முறையே ரேடியோ தெரபி சிகிச்சை முறையாகும்.  இந்த சிகிச்சையானது  5 வாரங்களுக்கு 25 முறை செய்யப்படும்.

ஹார்மோன் தெரபி: மாத்திரை மூலமாக ஹார்மோன் தூண்டுதலால் ஏற்படக்கூடிய புற்று செல்களைத்

நோய் நாடி!

திரும்ப வராமல் தடுக்கும் முறையே ஹார்மோன் சிகிச்சை முறையாகும். 5 வருடங்களுக்கு தினமும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.  கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்றவற்றை ஒப்பிடும்போது இதனால் வரக்கூடிய பக்கவிளைவுகள் மிக மிகக் குறைவே.

டார்கெட்டட் தெரபி: ஊசி மூலமாக (சில நேரங்களில் மாத்திரை மூலமாக) குறிப்பிட்ட பாதிப்பு விளைவிக் கக்கூடிய செல்களை மட்டும் டார்கெட் வைத்து அழிக்கும் முறை டார்கெட்டட் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் ஒரு வருட காலத்துக்கு... 21 நாட்களுக்கு ஒருமுறை என 9 முதல் 17 ஊசிகள் வரை போடப்படும்.

மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சை... சாத்தியமா?

மார்பகப்புற்றால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணுக்கு, அதை அகற்றாமல் சிகிச்சை செய்வது சாத்தியமா? சாத்தியம்தான். ஒரு பெண்ணின் மார்பக அளவின் விகிதத்தைவிட கட்டி பெரியதாக இருந்தால், அங்கு விட்டுவைக்க மார்பகப் பகுதி எதுவும் மிஞ்சி இருக்காது. அதுபோன்ற சூழ்நிலையில், நோயாளியின் மார்பகத்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று விருப்பப்பட்டால் சில வழிமுறைகள் உள்ளன. கீமோதெரபி கொடுத்து கட்டியின் அளவைக் குறைத்து பின்னர் அறுவை சிகிச்சை செய்யலாம். சில சமயம் கட்டியின் அளவைக் குறைப்பதற்குக் கொடுக்கும் வைத்தியத்தால் கட்டி கரைந்தேபோகக்கூடும். அந்தச் சமயத்தில் கட்டிதான் கரைந்துவிட்டதே என்று விட்டுவிடக்கூடாது. அது போன வேகத்தில் மீண்டும் வந்துவிடக்கூடும். எனவே, மருத்துவரின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுவது அவசியம். இதைத் தாண்டி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட இன்னும் பல சிகிச்சை முறைகள் உள்ளன.

மார்பக மறு உருவாக்கம்!

இழந்த மார்பகத்தை மீண்டும் உருவாக்குதலில், அந்தப் பெண்ணின் உடலின் பிற பகுதிகளிலிருந்து தசையை எடுத்து, அல்லது செயற்கை சிலிக்கான் மார்பகத்தைப் பொருத்தி சிகிச்சை செய்ய முடியும். இப்படிப் புதிதாக உருவாக்கப்படும் மார்பகம், மற்றொரு மார்பகத்தைவிட வித்தியாசமாக இருக்கலாம். அதோடு புதிதாக உருவாக்கப்பட்ட மார்பகத்தில் எந்தவித தொடு உணர்ச்சியும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. நம் உடம்பின் வேறு பகுதியில் இருந்து தசைகள் எடுத்துச் செய்தாலும் உணர்ச்சி இருக்காது. சிலருக்கு மார்பக அறுவை சிகிச்சை செய்யும் அதே நேரத்திலேயே இந்த மறு உருவாக்க அறுவை சிகிச்சையையும் செய்யமுடியும். ஒரு சிலருக்கு சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து இந்த மறு உருவாக்கத்தைச் செய்ய வேண்டிவரும். இதில் அந்தப் பெண்ணின் உடல்நிலை, வயது, என்ன வகையான மார்பகப் புற்றுநோய், இதுவரை என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இனி என்ன விதமான சிகிச்சை தேவைப்படும் என எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்தான் எப்போது, என்னவிதமான மறு உருவாக்கம் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். இந்த சிகிச்சையின் விளைவுகள் பின்வருமாறு...

• அறுவை சிகிச்சைத் தழும்புகள் இயல்பு நிலைக்குத் திரும்ப, கூடுதலாக சில நாட்கள் ஆகலாம்.

• புதிதாக உருவாக்கிய மார்பகத்துக்கு ரத்த ஓட்டம் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் அதில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ இழக்க நேரிடலாம்.

• கிருமித் தொற்று ஏற்படக்கூடும்.

• புண் ஆறுவதற்கு சற்று அதிக காலம் ஆனால், அடுத்தகட்ட சிகிச்சையைத் தொடர்வதும் தாமதப்படும்.

• மார்பக மறு உருவாக்கலில் இந்தியாவின் நிலை!

• இந்தியாவில் மார்பக மறு உருவாக்க சிகிச்சை கோரும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காரணங்கள்...

• நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் மார்பக மறு உருவாக்கத்தைச் செய்ய முடியாது.

• இந்த அறுவை சிகிச்சைக்கு செலவு மிக அதிகம்.

• நம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் பலர் பலவிதமான யோசனைகளைச் சொல்வார்கள். அவர்களுடைய புரிதல் எல்லாம் முழுமையானதாக இருக்காது. ஆனால், அவை நோயாளியின் முடிவை வலுவாகப் பாதிக்கக்கூடியதாக இருக்கும்.

• சிலிக்கான் செயற்கை மார்பகம் எளிதில் கிடைப்பதில்லை. நிறைய செலவும் ஆகும். அதோடு மார்பகத்தின் வடிவம் நன்றாக அமைய மறுபரிசீலனை செய்யும் நோக்கில் பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கின்றன. இதற்கு ஆகும் செலவும் மிக மிக அதிகம்.

• அறுவை சிகிச்சை நிபுணர்கள் மார்பக மறு உருவாக்கத்தை ஆர்வத்துடன் பரிந்துரைப்பதில்லை.

- நோய் நாடி வெல்வோம்....

சா.வடிவரசு

உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறையும்!

எந்தவொரு நோயாக இருந்தாலும் உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். அதுபோலத்தான் மார்பகப் புற்றுநோய்க்கும் அது அவசியமானது. குறிப்பாக, கீமோ தெரபி சிகிச்சையின்போது நோயாளி தன் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

• சமச்சீரான உணவே மிகச்சிறந்த மருந்து. அதை உண்டால்தான் நோய் சீக்கிரம் குணமாகும். அதோடு உடம்பும் சிகிச்சையை சந்திக்கும் அளவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். பிடித்த உணவை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம்.

• உணவில் தினமும் ஐந்து வகைப் பழங்களும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் நார்ச்சத்து உட்பட அனைத்துவிதமான சத்துக்களும் கிடைத்துவிடும்.

• சரியான உணவுப் பழக்கமும், முறையான உடற்பயிற்சியும் மார்பகப் புற்றுநோயாளிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சி, கலிஃபோர்னியா மாகாணத்தில் லா ஜோலாவில் உள்ள `UCSD' புற்றுநோய் மையத்தில் இயங்கும் புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. 1,490 பெண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் 30 பெண்கள் மட்டுமே ஐந்து விதமான காய்கறிகள் மற்றும் பழங்களுடன் உணவு உண்பதாகவும், வாரத்தில் ஆறு நாட்கள் தினமும் 45 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். நோய் பாதிப்பில் இந்தப் பெண்களுக்கு, மற்ற பெண்களைவிடக் குறைவான அபாயமே உண்டு என்று, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

• புற்றுநோயாளிகள் பால் பொருட்கள் சாப்பிடக்கூடாது என்று ஜோன் பிளான் என்ற விஞ்ஞானி சொல்லியிருக்கிறார். ஆனால், அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. கோதுமைப் புல் சாறு அல்லது பவுடர், காளான் போன்றவற்றைச் சாப்பிடலாம். ஆனால், கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்படும்போது மட்டும் இவற்றைச் சாப்பிடக்கூடாது.

• அதிகப் புரதச்சத்து கொண்ட உணவான சோயாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும் என்று சொல்லப்பட்டாலும், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

• மீன், கோழி போன்றவற்றை எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்த சமையலாகச் சாப்பிடலாம். மாட்டுக் கறி வேண்டாம்.


துணை சிகிச்சைகள்!

நோய் நாடி!

மார்பகப் புற்றுநோயாளிகள் பலருக்கு வலியைக் குறைக்கவும், பக்கவிளைவுகளைக் குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் துணை சிகிச்சைகள் ஏராளமாக உள்ளன. அந்தப் பட்டியல் இங்கே. இது முழுமையான பட்டியல் கிடையாது. மேலும், இதைச் செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டியது மிக மிக அவசியம்.  

• தியானம்

• பிரானிக் ஹீலிங் 

• ரெய்கி

• யோகா

• யோகா நித்ரா

• சுவாசப் பயிற்சி

• பிரணாயாமம்

• மந்திரம் ஜெபித்தல்

• ரெஃப்ளெக்ஸாலஜி

• அரோமா தெரபி

• ஆயுர்வேத மசாஜ்

• அக்குபஞ்சர்

• இசை சிகிச்சை

• கலை சிகிச்சை

• ஜர்னலிங்

• உணர்ச்சிபூர்வ சிகிச்சைசிகிச்சையும் தாம்பத்ய உறவும்!

மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததில் இருந்து சிகிச்சை முடியும்வரை பெண்கள் பல வகைகளில் பாதிக்கப்படுவார்கள். அதில் தாம்பத்ய உறவும் அடங்கும். இது பற்றி மருத்துவர்கள்கூட வெளிப்படையாக எதுவும் பேசுவதில்லை. இதைக் காரணம் காட்டி சில திருமண உறவுகள் முறிவதைக்கூட நாம் பார்த்திருக்கலாம். அதற்கான காரணங்களாக... உடல் அழகு போய்விடுவதால் ஏற்படும் பதற்றம்,  மார்பகம் மற்றும் பிறப்புறுப்பில் வரக்கூடிய வலி, சிகிச்சை காலகட்டத்தில் வரக்கூடிய மன அழுத்தம்... இன்னும் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும் இவையெல்லாம் கடந்த ஒரு புரிதல் இருந்தால் அது கொடுக்கும் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டுவர மிகப்பெரிய மருந்தாக விளங்கும்!