Published:Updated:

ஸ்ட்ரெஸ் விரட்ட எம்.எஸ்.பாஸ்கர் நினைவில்வைத்திருக்கும் பாடல் வரி! #LetsRelieveStress

ஸ்ட்ரெஸ் விரட்ட எம்.எஸ்.பாஸ்கர்  நினைவில்வைத்திருக்கும் பாடல் வரி! #LetsRelieveStress
ஸ்ட்ரெஸ் விரட்ட எம்.எஸ்.பாஸ்கர் நினைவில்வைத்திருக்கும் பாடல் வரி! #LetsRelieveStress

ம்.எஸ்.பாஸ்கர்... சிறந்த குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்... எனப் பல்வேறு திறமைகளைக்கொண்ட வித்தியாசமான கலைஞர். பழகுவதற்கு எளிமையான, இனிமையான மனிதர். அவரிடம், ``டென்ஷன், ஸ்ட்ரெஸ் ஏற்பட்டால், அதிலிருந்து விடுபட நீங்கள் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டோம். அதுகுறித்து விரிவாக விளக்குகிறார் இங்கே... 

``பால்யகாலத்துலயோ, பள்ளிக்கூடத்துல படிக்கிற காலத்துலயோ நமக்குப் பெரிய கவலைகள் இருக்காது. டென்ஷனை உணரக்கூட நமக்குத் தெரியாது. 'பிள்ளையாய் இருந்துவிட்டால், இல்லை ஒரு தொல்லையடா'ங்கிற பாடல் வரி மாதிரி, அந்த வயசுல எந்தக் கவலையும் இருக்காது. நாம பெரியவங்களாக ஆன பிறகுதான் டென்ஷனுக்கு ஆளாகவேண்டியிருக்கும். 

ரோட்டுல வண்டியில போய்க்கிட்டு இருப்போம்... எதிர்பாராதவிதமா எவனாவது குறுக்கே வருவான்... டென்ஷனாயிடுவோம். ஷூட்டிங் கேன்சலானா, கால்ஷீட் பிரச்னையானாக்கூட சில நேரத்துல டென்ஷன் வந்துடும். இப்படி எத்தனையோ விஷயங்கள் பல சமயங்கள்ல, டென்ஷனாக்கி மனச்சோர்வை ஏற்படுத்திடும்.

டென்ஷன் ஏற்பட்டா, முதல்ல அந்த இடத்தைவிட்டு விலகி, அப்பால போயிடணும். தனியாப் போய் நம்மை டென்ஷனாக்கினவங்களை நமக்குத் தோன்றின மாதிரியெல்லாம் மனசார, வாய்விட்டுத் திட்டித் தீர்த்துடணும். ஆனா, அது அவங்களுக்குத் தெரியக் கூடாது. நாம திட்டித் தீர்த்ததும், 'ஏன் இப்பிடி நாம முட்டாள்தனமாகப் பேசிக்கிட்டிருக்கோம்’னு நமக்குத் தோணும். அப்போ உடனே அந்த இடத்தைவிட்டுக் கிளம்பி வந்துடணும். இது ஒரு வழி.

இன்னொரு வழி இருக்கு. நமக்குப் பிடிச்ச ஒரு கோயிலுக்கோ, இல்லைன்னா பிடிச்ச ஏதாவது ஒரு இடத்துக்கோ போயிடணும். செல்போனை ஆஃப் பண்ணிடணும். ஏன்னா, உங்களை டென்ஷனாக்கினவர், ஸ்ட்ரெஸ்ஸைக் கொடுத்தவர் மறுபடியும் உங்களைத் தொடர்புகொண்டு வசைபாடலாம்; தொல்லைப்படுத்தலாம். அதனால, ஒரு கால் மணி நேரமோ, அரை மணி நேரமோ போனை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சுவெச்சிடுறது நல்லது.

அப்போதான் நம்மை வசை பாடியவருக்கும், தன் தவற்றை உணரும் வாய்ப்புக் கிடைக்கும். இல்லாவிட்டால், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பேசி, சண்டை வந்து பிரச்னை மேலும் பெரிதாகிவிடும். மீண்டும் அவரைச் சந்திக்கும்போது, இருவருக்குமிடையே எந்தப் பிரச்னையும் நடக்காததுபோல் அவரிடம் சகஜமாகப் பேசிப் பழக வேண்டும். அப்போதுதான் தொடர்புடையவருக்கு, `இவரைப் போய் இப்படிப் பேசிவிட்டோமே...' எனத் தோன்றும்.

“இன்னா செய்தோரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல்'' என்பது வள்ளுவன் வாக்கு. 
என்னைப் பொறுத்தவரை, நான் டென்ஷனானால் காரில் ஏறி, 'லாங் டிரைவ்' ஒன்று போய் வருவேன். போகும்போது பிரச்னையை நினைத்து திட்டிக்கொண்டே போவேன். பிறகு, சாதாரணமாயிடுவேன்.

ஒருமுறை என்னுடைய சகோதரருக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரியில இருந்தார். ஹாஸ்பிட்டல் கட்டணத்துக்குப் பணம் செலுத்துறதுக்காக, அங்கேயும் இங்கேயும் அலைஞ்சு ரெடி பண்ணிக்கிட்டு அவசர அவசரமாப் போய்கிட்டிருந்தேன்.

அப்போ ஒரு பெரியவரும், அவர் சம்சாரமும் எதிரே வந்தாங்க. என்னைப் பார்த்ததும் சிரிச்சிட்டே நின்னாங்க. நானும் அவங்களைப் பார்த்து வணக்கம் சொல்லிட்டு, “என்ன விஷயம்?’’னு போகிற அவசரத்தையும் விட்டுட்டுக் கேட்டேன்.  

`சின்னப் பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் பார்த்ததுலருந்து, என் ஒயிஃபுக்கு ஒரு சந்தேகம். நீங்க எப்பவுமே காதுல கையைவெச்சிக்கிட்டுத்தான் இருப்பீங்களா''னு கேட்டார். அவர் ஏதோ ஜோக்கடிக்கிறதா நெனைச்சுக்கிட்டு கேட்டிருக்கார். உடனே நான் கேட்டேன். 

``ஏன் சார்... உங்க ஒயிஃப் சமைக்கும்போது கரண்டியைக் கையில வெச்சிருப்பாங்க. அதுக்காக ரோட்டுல போகும்போதும் கரண்டியைக் கையில எடுத்துக்கிட்டே போவாங்களா...  என்னை இப்படி நீங்க கேட்கலாமா?''னு கேட்டுட்டுப் போயிட்டேன். 
சினிமாவிலும் இப்படித்தான் சிலபேர் சம்பந்தா சம்பந்தமில்லாம, சூழ்நிலையைப் புரிஞ்சுக்காம டென்ஷனாக்குவாங்க. அந்த நேரத்துல அவங்ககிட்ட உட்கார்ந்து வாக்குவாதம் பண்ண மாட்டேன்.

அந்த மாதிரி நேரத்துல, கிளம்பி நீச்சலடிக்கப் போயிடுவேன். வேளச்சேரி நீச்சல்குளம் இல்லைனா வேற எங்கேயாவது இருக்குற நீச்சல்குளத்துக்குப் போய்விடுவேன். நீச்சல் அடிக்க ஆரம்பிச்சிட்டோம்னா, நம்ம மனசு, உடம்பு எல்லாமே ரொம்ப ரிலாக்ஸ் ஆயிடும். 

அப்படியில்லைன்னா வயிறு ஃபுல்லா சாப்பிட்டுட்டு தூங்கிடுவேன். இதுதான் இருக்கணும்னு இல்லை. பழையசோறு இருந்தாக்கூட நல்லா சாப்பிட்டுட்டு தூங்கிடுவேன். எப்பவுமே உடற்பயிற்சி செய்வேன். இன்னொரு முக்கியமான விஷயம்...

வாழ்க்கையில பெரிசா திட்டமிட மாட்டேன். என்ன நடக்கிறதோ அதை அப்படியே ஏத்துக்குவேன். ஆறு போற போக்கில கரையேற வேண்டியதுதான். அதானே வாழ்க்கை.  

என்ன பெரிய லட்சியம்... என்ன ஏக்கம்... என்ன ஆதங்கம்? தகுதியில்லாதவர்களுக்குக் கிடைப்பதும் தகுதியுள்ளவர்களுக்குக் கிடைக்காமல் போறதும் பல சமயங்கள்ல நடக்கிறதுதான். அதையெல்லாம் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தாதான் ஏமாற்றம் வரும். இதை நாம் பலபேர்களுடைய வாழ்க்கையிலும் நாம் பார்க்கலாம். 

லட்ச ரூபாய் கிடைக்க வேண்டிய இடத்துல 10 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்குதுன்னா நமக்கு விதிச்சது அவ்வளவுதானு ஏத்துக்குவேன். பசிக்குச் சோறு, உடுக்க உடை, இருக்க இடம் இருந்தா போதும். அன்பாக, ஆதரவாக இருக்க இனிமையான குடும்பம், ஆதரவான நண்பர்கள் இருந்தால் போதும்... அவ்வளவுதான்சார் வாழ்க்கை. 

ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கலாம். தினமும் தங்க பஸ்பம் சாப்பிடலாம். காலையில சிங்கப்பூர்ல டிபன், மாலையில் ஹைதராபாத்துல டிபன் சாப்பிடலாம். ஆனா, தொண்டைக்குழிக்குக் கீழே போனது எதுக்களிச்சுக்கிட்டு மேலே வந்ததுன்னா, அது தங்கபஸ்பமா இருந்தாலும் சாப்பிட முடியாது. பிறந்தால் குழந்தை... வளர்ந்தால் மனிதன்... இறந்தால் பிணம் இவ்வளவுதான் சார். அதனால நான் எதையும் பெரிசா எடுத்துக்க மாட்டேன்.

எனக்கு மேலே உள்ளவங்க, நிறைய சம்பளம் வாங்குறவங்களைப் பார்த்து பொறாமைப்படவும் மாட்டேன். என் நிலையில் இருக்குற பலபேர் கஷ்டப்படுறதையும் பார்க்கிறேன். அதனால கடவுள் நமக்கு ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கான். அதை சிறப்பாக வாழ்வோம்னு இருப்பேன். அதனால்தான் என்னோட பி.பி 80-130 ஆக இருக்கு. 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு'ங்கிற வரிகளை எப்பவும் ஞாபகம் வெச்சுக்குவேன்'' எனக்கூறி எம்.எஸ்.பாஸ்கர் விடை கொடுத்தார்.