Published:Updated:

சிசேரியன் பற்றி பெண்களிடம் இருக்கிற பயங்களும் உண்மைகளும்... #Caesarean

சிசேரியன் பற்றி பெண்களிடம் இருக்கிற பயங்களும் உண்மைகளும்... #Caesarean
சிசேரியன் பற்றி பெண்களிடம் இருக்கிற பயங்களும் உண்மைகளும்... #Caesarean

சிசேரியன் மூலம் குழந்தைப் பிறப்பது அதிகரித்துவரும் இன்றைய சூழ்நிலை பற்றி, 'பச்சிளம் சிசுவைக் காப்பாற்ற'; 'மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க' என இருவேறு கருத்துகள் உள்ளன. ஒரு பிரசவம் சிக்கலாகும்போது, தாயையும் சேயையும் நல்லபடியாகப் பிரிப்பதில் சிசேரியனின் பங்கு, அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. 

இந்தியாவில் 55% பெண்களுக்கு சிசேரியன் முறையில்தான் குழந்தை பிறப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் சிசேரியன் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது என்றும் தேசியக் குடும்ப சுகாதார அமைப்பு சொல்கிறது. இதில், மருத்துவ ரீதியாகத் தேவைப்பட்ட சிசேரியன், தேவைப்படாத சிசேரியன் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம். கடைசி வரை சுகப்பிரசத்தை எதிர்பார்த்து, எமர்ஜென்சியாக சிசேரியன் ஆனவர்கள், மனதளவில் பயந்துபோய் இருப்பார்கள். அவர்களுக்கான சில 'டோன்ட் வொர்ரி' உண்மைகளைத் தெளிவுபடுத்துகிறார், மகப்பேறு மருத்துவர் நிவேதா. 

பயம்: சிசேரியன் செய்துகொண்டவர்களுக்கு கையால் செய்யப்படும் தையலே பாதுகாப்பு. ஸ்டேபிள், அப்படியே கரைந்துபோகிற தையல் எல்லாம் பாதுகாப்பு இல்லையாமே? 

உண்மை: கையால் தையல் போடுவது, ஸ்டேபிள், கரைந்துபோகிற தையல் எல்லாமே வயிற்றின் மேல் பகுதியில் போடும் விஷயங்கள்தான். கருப்பை, வயிற்றின் உள் லேயர்களில் கைகளால்தான் தையல் போடுவோம். அதனால், பயம் வேண்டவே வேண்டாம். 

பயம்: சிசேரியன் நடந்தவர்களுக்கு கையாலேயே தையல் போடலாமே... ஸ்டேபிள், கரைகிற தையல் போடுவது எதனால்? 

உண்மை: பெரும்பாலானவர்களுக்கு கைத் தையல்தான் போடுவோம். தையல் போட்டு, பிரிக்கும் பிரச்னையைத் தவிர்க்க  அப்சார்பபிள் தையலும் போடுவோம். இது அப்படியே கரைந்துவிடும். அப்படியென்றால், ஸ்டேபிள் எதற்கு? சில பெண்கள் உடல் பருமனாக இருப்பார்கள். சிலருக்கு மூன்றாவது டிரைமெஸ்டரின்போது கை, கால்களில் நீர் கோத்துக்கொண்டு வீங்கிவிடும். இப்படிப்பட்டவர்களின் வயிற்றுச் சுவர்களிலும் நீர் சேர்ந்திருக்கும். இவர்களுக்கு சிசேரியன் செய்த பிறகு, வயிற்றில் இருக்கும் தேவையற்ற நீரை வெளியேறுவதற்காக வேறு வழியின்றி ஸ்டேபிள் போடுவோம். ஸ்டேபிள் செய்யும்போது, ஆங்காங்கே இடைவெளி இருக்கும். தேவையற்ற நீர் இதன் வழியாக வெளியேறிவிடும். இதை ஒரு வாரம், பத்து நாள்களில் எடுத்துவிடுவோம். 

பயம்: சிசேரியன் தையல் பிரிந்துவிடுமா? 

உண்மை: நிச்சயம் பிரியாது. பயப்பட வேண்டாம். கருப்பையில் தொடங்கி வயிற்றின் வெளித்தோல் வரை தோலின் தன்மைக்கு ஏற்ற மெல்லிய உபகரணங்களைத் தைப்பதற்குப் பயன்படுத்துவதால், தையல் பிரியும் என்ற பேச்சுக்கு இடமில்லை. யாருக்காவது அப்படி நிகழ்ந்திருந்தால், உடனே மருத்துவரிடம் சென்று, தையல்போட்ட இடத்தில் இன்ஃபெக்‌ஷன் ஆகியிருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.  

பயம்: எத்தனையோ பேருக்கு சிசேரியன் நடக்கிறது. ஒரு சிலருக்கு மட்டும் ஏன் புண் ஆறாமல் இன்ஃபெக்‌ஷன் ஆகிறது? 

உண்மை: சிசேரியனைப் பொறுத்தவரை, வெளிக்காயம் ஒரு வாரத்தில் ஆறிவிடும். உள்காயங்கள் 6 வாரங்களில் சரியாகிவிடும். மற்றபடி, இப்படி இன்ஃபெக்‌ஷன் ஏற்பட இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தையல் போட்ட இடத்தில் தண்ணீரே படக்கூடாது என்ற பயத்தில், சிலர் அந்த இடத்தையே அழுக்காக்கி வைத்திருப்பார்கள். சிலர், புண்ணுக்கு மஞ்சள் தடவுகிறேன், தேங்காய் எண்ணெய் தடவுகிறேன் எனச் செய்வதோடு, குளிக்கும்போது சுத்தம் செய்யவும் மாட்டார்கள். இதனால் இன்ஃபெக்‌ஷன் ஏற்படுகிறது. 

இரண்டாவது காரணம், பெரிய தொப்பை, டயபடீஸ், சிசேரியன் செய்த வயிற்றில் பெல்ட் போடுவது, பிளட்பிரஷர் காரணமாக உடல் திசுக்களில் நீர் அதிகம் சேர்ந்திருக்கும். இதில், எந்த வகை பிரச்னை எனத் தெரிந்து, மருத்துவர் ஆலோசனைப்படி செயல்பட்டால், இன்ஃபெக்‌ஷன் தொல்லை வராது. 

பயம்: நார்மல் டெலிவரிபோல, சிசேரியர் செய்துகொண்டவர்கள் பால் ஊறுவதற்காக சுறா, கருவாடு சாப்பிட்டால் அலர்ஜி வருமாமே? 

உண்மை: தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், சிலருக்குக் கடல் உணவுகள் இயல்பாகவே அலர்ஜியை ஏற்படுத்தும். குழந்தைப் பிறப்பதற்கு முன்னாலும் அப்படிப்பட்ட அலர்ஜி உள்ளவர்கள், அவற்றைச் சாப்பிட வேண்டாம். அதேபோல, சுறா மற்றும் கருவாடு சாப்பிட்டுப் பழக்கம் இல்லாதவர்களும் தவிர்த்துவிடுவது நல்லது. திடீரென சாப்பிடுவதால், அலர்ஜி ஏற்படலாம். மற்றவர்கள், பயப்படாமல் சாப்பிடலாம்.