தொடர்
Published:Updated:

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 10

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 10
News
வைட்டமின் சீக்ரெட்ஸ் - 10

பி6 பைரிடாக்ஸின்உணவு

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 10

செல்களின் கட்டுமானத்துக்குப் புரதச்சத்து அவசியம். பால், முட்டை, கோழி இறைச்சி, பருப்பு வகைகளில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. இந்தப் புரதச்சத்தை உடல் செரிமானம்செய்து கிரகிக்கவும், உடல் பயன்படுத்தும் வகையில் மாற்றவும் தேவைப்படும் வைட்டமின்தான் பி6 எனப்படும் பைரிடாக்ஸின்.

ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு, இந்த வைட்டமின் அவர்கள் உட்கொள்ளும் உணவுகளில் இருந்தே கிடைத்துவிடும். கட்டுடல் வேண்டும் எனக் கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, அதிகப் புரதச்சத்துகொண்ட டயட் பரிந்துரைக்கப்படும். இவர்கள், பைரிடாக்ஸின் மீது கவனம்கொள்ள வேண்டும். ஏனெனில், எவ்வளவுதான் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டாலும், பைரிடாக்ஸின் சத்து இல்லை என்றால், புரதச்சத்து உடலில் கிரகிக்கப்படாமல் வெளியேறிவிடும்.

மூளையின் செயல்பாடுகளுக்கு அமினோ அமிலங்கள் அவசியம். உடலில் ஹார்மோன்கள் சீராகச் சுரப்பதற்கும், மூளையின் செயல்பாடு மேம்படவும் இந்த வைட்டமின் உதவுகிறது.

வைட்டமின் பி6, இனப்பெருக்க ஹார்மோன்களைச் சீராக வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம், மெனோபாஸ் காலகட்டம், மாதவிடாயின்போது ஒரு சிலருக்கு  மார்பகங்களில் கடுமையான வலி, மனநிலை ஊசலாட்டம் (Mood Swings) ஏற்படும் சமயங்களில், இந்த வைட்டமின் அவசியம் தேவைப்படும். மனஅழுத்தத்தைப் போக்கும் வைட்டமின் இது.

எல்லோருக்கும் ஒரேவிதமான அலர்ஜி இருக்காது. ஒரு சிலருக்கு புகை அலர்ஜியாக இருக்கும்; சிலருக்கு, சாப்பிடும் பட்டாணி அலர்ஜியாக இருக்கும். இந்த அலர்ஜிகளைக் கட்டுப்படுத்துவதில் மறைமுகமாக வைட்டமின் பி6 உதவுகிறது. 

மது அருந்துதல், புகைபிடித்தல், கருத்தடைக்குச் சாப்பிடும் மருந்துகள், மிக அதிக அளவு புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால், வைட்டமின் பி6 குறைபாடு ஏற்படலாம்.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 10

எந்த உணவுக்கு பதில் எதைச் சாப்பிடுவது?

சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு கூட்டு அல்லது தக்காளிச் சட்னிக்குப் பதில், தால் (பருப்புக் கூட்டு), பட்டாணி மசாலா, காலிஃபிளவர் கூட்டு, ராஜ்மா என ஏதாவது ஒரு சைடுடிஷ் செய்து சாப்பிடலாம்.

பிரெட்டுக்கு ஜாம்வைத்துச் சாப்பிடுவதற்குப் பதில், கோதுமை அல்லது மல்டி கிரெய்ன் பிரெட்டுடன் ஆம்லெட் அல்லது பீனட் பட்டர் (வேர்கடலை, வெண்ணெய்) அல்லது சீஸ் சேர்த்துச் சாப்பிடலாம்.

முறுக்கு, சிப்ஸ், குளிர்பானங்களுக்குப் பதில், நட்ஸ், சுண்டல், பழங்கள், லஸ்ஸி எடுத்துக்கொள்ளலாம்.

பைரிடாக்ஸின் எதில் இருக்கிறது?

அசைவ உணவுகள், ஈரல், முழு தானியங்கள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், மிளகு, வாழைப்பழம், புரக்கோலி, சிவப்பு கிட்னி பீன்ஸ், வெங்காயம், நட்ஸில் நிறைவாக உள்ளது.

பைரிடாக்ஸின் குறைபாடு?

கனவில் கண்டது, நடந்த சம்பவங்கள்போல நினைவுக்கு வரும். உடலில் அதிக அளவு நீர் சேரும். கைகளில் ஒருவிதமான சிலிர்ப்புத்தன்மை வரும். மன அழுத்தம், பதட்டம், உடலில் சத்து குறைதல், தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படும்.

உணவில் கவனம்

பைரிடாக்ஸின் வைட்டமினைப் பெற அதிகம் மெனக்கெட வேண்டாம். அன்றாடம் உணவுகளில் சிறு மாறுதல்கள் செய்தால் போதுமானது.

- பு.விவேக் ஆனந்த்