தொடர்
Published:Updated:

அந்தப்புரம் - 27

அந்தப்புரம் - 27
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தப்புரம் - 27

ஓவியம்: ஸ்யாம்குடும்பம்

அந்தப்புரம் - 27

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்ட மாலினி- மகேந்திரனுக்கு `எந்தக் குறைபாடும் இல்லை’ என டாக்டர்கள் தெரிவித்தனர். மாலினிக்கு முட்டை வெளிப்படும் நாளைக் கண்டறியும் `ஃபாலிக்கிள் ஸ்டடி’ அடிப்படையில் மாதவிலக்கு வந்ததில் இருந்து, 10-வது நாள் முதல் 18-வது நாள் வரை தினமும் உடலுறவு கொள்ளும்படி டாக்டர் பரிந்துரைத்தார். அதிலும் குறிப்பாக, 14, 15, 16 என மூன்று நாட்கள் கட்டாயம் தம்பதி ஒன்றுசேர வேண்டும் எனச் சொல்லியிருந்தார். இப்படி `கட்டாயமாக...’ என்று சொன்னது மகேந்திரனுக்கு ஒரு மனத்தடையை ஏற்படுத்தியது. மற்ற நாட்களில் இயல்பாக இருக்கும் மகேந்திரனால், அந்தக் குறிப்பிட்ட நாட்களில் இயல்பாக இருக்க முடியவில்லை. மனப்பதற்றம் அதிகரித்தது.

அவனால், முழுமையாக தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை.

இப்படியே, சில மாதங்கள் சென்றன. ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணத்தைச் சொல்லி, தன்னால் முழுமையாக தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை எனக் கூறிவிடுவான். இதனால், இருவருக்கும் இடையே பிரச்னை ஆரம்பமானது. குழந்தை இன்மைக்கு ஒருவரை ஒருவர் குறைகூற ஆரம்பித்தனர். இதனால், குறைகள் குறைய வாய்ப்பு இல்லாமல் போனது. மகேந்திரனுடன் சண்டை போட்டுக்கொண்டு மாலினி தன் அம்மா வீட்டுக்குப் போனாள். இருவரது பெற்றோர்களும் சமரசம் பேசினர். ஆனாலும், இருவரும் `இனி இணைந்து வாழ முடியாது’ என தீர்க்கமாக இருந்தனர். சிறிது நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் எனக் காத்திருந்தனர். ஆனால், பிரச்னை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. எஸ்.எம்.எஸ். சண்டை  வாட்ஸ்அப்பில் வளர்ந்தது. மிகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் ஆரம்பித்த அவர்கள் திருமண வாழ்வு கொஞ்சம் கொஞ்சமாக முற்றுப்புள்ளி நோக்கி நகர்ந்தது.

அந்தப்புரம் - 27

ஏன்... எதற்கு... எப்படி?

`கருத்தரிக்க ஆண், பெண் என இரு தரப்பிலும் சாதகமான சூழல் இருக்க வேண்டும்’ என்று சொல்லியிருந்தேன். கடந்த இதழில், ஆண்களுக்கு குழந்தையின்மை பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள பிரச்னைகள் பற்றிச் சொல்லியிருந்தேன். இந்த இதழில் பெண்களுக்கு குழந்தையின்மைப் பிரச்னை ஏற்பட என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்பதைப் பற்றிச் சொல்கிறேன்.

காரணங்கள்

1. சினைப்பையில் முட்டை வெளிப்படாமை.

2. கருத்தரித்த முட்டையானது கர்ப்பப்பை சுவரில் வெற்றிகரமாகப் பதியாமை.

3. விந்தணுக்கள் கருமுட்டையைச் சென்றடையும் பயணத்தில், தடைகள் இருத்தல்.

4. ஃபெலோபியன் குழாயில் அடைப்பு.

5. இனப்பெருக்க மண்டல உறுப்புகளில் பாதிப்பு.

6. தாம்பத்தியக் குறைபாடுகள்.

7. தாம்பத்தியச் செயல்பாட்டில் தவறான நுட்பங்கள்.

1.முட்டை வெளிப்படாமை

ஹார்மோன் சீரற்ற தன்மை அல்லது ஏதேனும் நோய், மன அழுத்தம் காரண மாக பெண்ணின் முட்டை வளர்ச்சி தடைப் படலாம். இதன் காரணமாக குறித்த காலத்தில் சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படாத பிரச்னை ஏற்படலாம்.

2.கருத்தரித்த முட்டையானது  கர்ப்பப்பை சுவரில் வெற்றிகரமாகப் பதியாமை


இதுவும் ஹார்மோன் சீரற்ற தன்மை காரணமாக நிகழலாம். அல்லது நோய்த் தொற்று காரணமாக `எண்டோமெட்ரியம்’ எனப்படும் கர்ப்பப்பை உட்சுவர் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனால், கருத்தரித்தாலும், கர்ப்பப்பையில் பதிந்து வளர முடியாத நிலை ஏற்படலாம்.

3.விந்தணுக்கள் கருமுட்டையைச் சென்றடையும்

பயணத்தில், தடைகள் இருத்தல் சில பெண்களுக்கு வெஜைனல் திரவம் மிகவும் அமிலத்தன்மைகொண்டதாக இருக்கும். நோய்த்தொற்று காரணமாக அவர்களுக்கு இந்தத் திரவத்தில் அமிலத்தன்மை அதிகரித்திருக்கலாம். இப்படி இருந்தால், அந்த திரவத்தில் விந்தணுவால் பயணிக்க முடியாத நிலை ஏற்படலாம். சில பெண்களுக்கு இந்தத் திரவத்தில் `ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு செல் அதிக அளவு இருக்கலாம். இதுகூட விந்தணுக்களை அழித்துவிடும். இந்த ஆன்டிபாடியை ‘ஆன்டி ஸ்பேர்ம் ஆன்டிபாடி’ என்று சொல்வோம்.

4.ஃபெலோபியன் குழாயில் அடைப்பு இருத்தல் 


ஃபெலோபியன் குழாய் என்பது மிக முக்கியமானது. இது சினைப்பையை கர்ப்பப்பையுடன் இணைக்கும் குழாய். இதில் அடைப்பு இருந்தால், விந்தணுவால் முட்டையை அடைய முடியாது; கருத்தரிக்க முடியாது. இந்த அடைப்புக்கு பிறவிக் குறைபாடு காரணமாக இருக்கலாம் அல்லது காசநோய் உள்ளிட்ட கிருமித் தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கலாம்; விபத்து காரணமாகவும் அடைப்பு ஏற்படலாம். மன அழுத்தம் காரணமாகக்கூட குழாய் இழுத்துக்கொண்டு அடைப்பு ஏற்படலாம். இதன் காரணமாகவும் விந்தணுவால் முட்டையை அடைய முடியாமல் போகலாம்.

5.இனப்பெருக்கமண்டல உறுப்புகளில் பாதிப்பு

நோய்த்தொற்று காரணமாக இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். சிபிலிஸ் (Syphilis), கொனேரியா (Gonorrhea), டி.பி போன்ற தொற்றுநோய் கிருமிகள் தொற்று, புற்றுநோய், சினைப்பை, கர்ப்பப்பையில் கட்டிகள் என இனப்பெருக்க மண்டல உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக கருத்தரித்தல் தடைப்படலாம். மிகவும் சுருக்கமான வெஜைனா இதழ், மிக தடிமனான கன்னித்திரை எனப்படும் சவ்வு, குறுகிய அல்லது பிளவுபட்ட வெஜைனா, திரும்பிய அல்லது பிளவுபட்ட கர்ப்பப்பை காரணமாகக்கூட கருத்தரித்தல் நிகழாமல் இருக்கலாம்.

6.தாம்பத்தியக் குறைபாடுகள்


தாம்பத்திய உறவுகொள்ளும்போது சில இனப்பெருக்க உறுப்புகள் சரியாகச் செயல்படவில்லை எனில் கருத்தரிப்பில் பிரச்னை ஏற்படலாம். ஆண் இனப்பெருக்க உறுப்பு உள்ளே செல்லும்போது, அதை எதிர்கொள்ள முடியாமல் வெஜைனா இறுக்கமாகிவிடுதல் (Vaginismus) பிரச்னையைச் சொல்லலாம். தாம்பத்தியத்தின்போது வலி ஏற்படுகிறது என்றால், அந்தப் பெண்ணின் வெஜைனல் தசையானது சுருக்கம் அடைந்து, ஆண் உறுப்பை உள்ளே செல்ல அனுமதிக்காது. `குழந்தை இல்லை’ என்று வரும் பெண்களில் 15 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, உடல் பருமன், நோய்கள், ஊட்டச்சத்து குறைவு, மது அருந்துதல், புகையிலை மெல்லுதல், போதைப் பழக்கம் உள்ளவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் வரலாம்.7. தாம்பத்தியச் செயல்பாட்டில் தவறான நுட்பங்கள்வாய்ப்புள்ள நாளில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளாதது, தாம்பத்திய டெக்னிக்குகளைத் தவறாகப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் கருத்தரித்தல் நிகழாமல் போகலாம்.

சில தம்பதிகளில் இருவருக்குமே எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனாலும், அவர்களுக்கு குழந்தையின்மைப் பிரச்னை இருக்கலாம். இதை `இடியோபதிக்’ அல்லது `அன் எக்ஸ்பிளைண்டு இன்ஃபெர்ட்டிலிட்டி’ என்போம். தற்போதுள்ள டெக்னிக், தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தியும் எதனால் குழந்தையின்மை பிரச்னை ஏற்படுகிறது என்று கண்டறிய முடியாத நிலை.

- ரகசியம் பகிர்வோம்

டவுட் கார்னர்

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், சென்னை.

“என் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளும்போது எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை. வீட்டில் சுய இன்பம் செய்து விந்தணுவை எடுக்கும்போதும் பிரச்னை ஏதும் இல்லை. ஆனால், செமன் பரிசோதனைக்காக மருத்துவமனையில் விந்தணுவை வெளியே எடுத்துத் தரும்படி கேட்கும்போது, என்னால் சரியாகச் செய்ய முடியவில்லை. ஏன் இப்படி நிகழ்கிறது?”

“மருத்துவமனை அல்லது ஆய்வுக்கூடத்தில் செய்யும்போது, `பாலியல் சந்தோஷங்களுக்காக இதை செய்வது இல்லை’ என்ற எண்ணம் எழுகிறது. பாலியல் உறவுக்குச் சுற்றுப்புறச் சூழலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வீட்டில் இருக்கும்போது, மனது ஓய்வாக இருக்கிறது. எந்தத் தொந்தரவும் இருப்பது இல்லை. இதனால், உங்களால் எளிதில் செய்ய முடிகிறது. இதுவே, ஆய்வுக்கூடத்தில் சுற்றுப்புறச் சூழல் தாக்கம் ஏற்படுத்துகிறது. இது உங்களுக்குத் தடையாக இருக்கிறது.”

கணேஷ் குமார், சென்னை.


“எந்த பொசிஷனில் உடலுறவு கொண்டால், குழந்தைப்பேறுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்?”

“பெண் கீழே இருந்து, விந்தணு எளிதில் உள்ளே செல்லும் பொசிஷன் பரிந்துரைக்கப்படுகிறது. படுக்கையில் பெண்ணின் இடுப்புப் பகுதியில் கூடுதலாக ஒரு தலையணையை வைத்து தாம்பத்திய உறவுகொள்ளும்போது, விந்தணு பெண்ணின் இனப்பெருக்க உறுப்புக்குள் பாயும். உறவுகொண்டு குறைந்தது அரை மணி நேரத்துக்கு இந்த நிலையிலேயே பெண் இருக்க வேண்டும்.”

சரளா, ஈரோடு.

“எங்களுக்கு ஐந்து ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. இதனால், நான் பெண்மை இழந்தவளாகவோ அல்லது என்னுடைய கணவர் ஆண்மையற்றவர் என்றோ அர்த்தமா?”

“நிச்சயமாக இல்லை. ஒரு குழந்தையை உருவாக்க, கருத்தரிக்கும் தன்மை என்பதும் மிகவும் மகிழ்ச்சியான தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது என்பதும் வெவ்வேறானவை. இந்த இரண்டுக்கும் ஒரே உறுப்பு பொறுப்பு என்பதால், மக்கள் தவறாகக் கருதுகின்றனர். மிகவும் மகிழ்ச்சியாக தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடிந்த தம்பதியால், குழந்தை பெற முடியாமல் போகலாம். ஒரு குழந்தையைப் பெற முடிந்த தம்பதியால், மகிழ்ச்சியான தாம்பத்திய உறவுகொள்ள முடியாமல் போகலாம். எனவே, இரண்டையும் ஒன்று சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம். மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம், நிச்சயம் உங்களால் குழந்தைப்பேறு அடைய முடியும்.”