தொடர்
Published:Updated:

ஒரு சுவை அதிகம் பிடித்திருந்தால் பிரச்னையா?

ஒரு சுவை அதிகம் பிடித்திருந்தால் பிரச்னையா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு சுவை அதிகம் பிடித்திருந்தால் பிரச்னையா?

உணவு

ஒரு சுவை அதிகம் பிடித்திருந்தால் பிரச்னையா?

ர்ப்பிணிகளுக்குப் புளிப்புச் சுவை பிடிக்கும். குழந்தைகளுக்குப் பல்பம் பிடிக்கும். ஆனால், ஏன் இவர்களுக்கு இது எல்லாம் பிடிக்கின்றன என்பது நமக்குத் தெரியாது. இது ஏதாவது நோயா... நோயின் அறிகுறியா என்ற சந்தேகம் மட்டும் இருக்கும். கொஞ்ச நாளில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நாமும் மறந்துவிடுவோம்.

அதிகமாகப் பசி எடுப்பதும், இனிப்பு, புளிப்பு என ஒரு சுவையை விரும்பி அதிகமாகச் சாப்பிடுவதும், என்ன பிரச்னை... ஏன் இந்த திடீர் மாற்றம் எனக் கவனிக்க வேண்டியவை.

பிரதிக்‌ஷாவுக்கு 22 வயது. சமீபத்தில் திருமணமாகி இருந்தது. திடீரென அளவுக்கு அதிகமாகச் சாப்பிட ஆரம்பித்தார். எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்கவில்லை. நாளுக்கு நாள் அவரின் உணவு மோகம் அதிகரித்துக்கொண்டே சென்றது. மாதவிலக்கும் வரவில்லை. பின்னர், பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

ஒரு சுவை அதிகம் பிடித்திருந்தால் பிரச்னையா?

இப்படி உடலில் ஏற்படும் சின்னச்சின்ன மாற்றங்களுக்குப் பின்னால், ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.

பொதுவாக, பெண்கள், கருவுற்ற சமயத்தில் ஏதாவது சில வகை உணவுகள் அல்லது சில சுவைகளில் அதிகமாக ஆர்வத்தைச் செலுத்துவர். இதற்கு அவர்கள் உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள் காரணம். இதுவரை கேள்விப்பட்டிருந்த கட்டுக்கதைகள்கூட அப்படி உணவின் மேல் ஈர்ப்பு வரச் செய்யலாம். பசி, தாகம் போன்றவற்றில் மாற்றம் ஏற்படலாம். இது இயல்பான மாற்றம்தான். இது குறித்து பயம் தேவை இல்லை.

மனம் சார்ந்த பிரச்னைகளான  கவலை, மனச்சோர்வு, மனஅழுத்தம், குழப்பம் போன்ற பிரச்னைகள் அதிகப் பசியை ஏற்படுத்தலாம்; சிலருக்குப் பசியே இல்லாமலும் இருக்கலாம். அறுசுவைகளில் ஏதேனும் ஒரு சுவையை அதிகமாகச் சுவைக்கவும் தூண்டும்.

மருத்துவர், சர்க்கரை நோயாளிகளிடம், ‘உணவைக் கட்டுப்படுத்துங்கள்’ என்ற பிறகுதான், உணவுப் பொருட்கள் மீது மோகம் தொடங்கும். அதாவது எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்கிறார்களோ, அந்த உணவுகளின் மேல்தான் அதிக ஆர்வம் ஏற்படும்; அதைச் சுவைக்க நாவும் துடிக்கும். இதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்புகளின் மேல் அதீத மோகம் ஏற்படுகிறது.

காய்ச்சல், மஞ்சள்காமாலை, நீண்ட நாட்களாக உட்கொள்ளும் மருந்து வகைகள்கூட திடீரென உணவு மோகத்தை அதிகரிக்கலாம்.

வைட்டமின் குறைபாடு அதாவது ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், சில சமயம் தன்னை அறியாமல் ஏதோ ஓர் உணவை அதிகளவில் சுவைக்க நா தூண்டும். மனம், எண்ணங்கள் போன்றவையும் மூளையும் அதுபோல குறிப்பிட்ட உணவுகளின் மீது ஆசையை ஏற்படுத்துகின்றன.

தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்குக்கூட, அதிக அளவில் இனிப்பையோ அல்லது வேறு சுவையையோ சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும்.

நோய்களோ, நோய் அறிகுறிகளோ இல்லை எனில், மனம் சார்ந்த பிரச்னை என்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.

அடிக்டிவ்ஸ் கலந்த உணவுகள்

 உணவில் சுவையை அதிகரிக்க சர்க்கரை, உப்பு, ரசாயனங்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. தற்போது சூப்பர் மார்க்கெட், நவீன பேக்கரி உணவுகளில் சுண்டி இழுக்கும் சுவைக்கு இந்த ரசாயனங்களே காரணம்.

குளிர்பானங்கள், கேக், சிக்கன் ஃப்ரை, ஃப்ரைடு ரைஸ், ஐஸ்க்ரீம், சாக்லேட், பற்பசை போன்ற பல்வேறு உணவுகளை அதிக அளவில் சுவைக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. உணவுகளில் கலந்திருக்கும் அடிக்டிவ்ஸால் ஏற்படும் மோகம் இது.

வீட்டில் குழந்தைகள் அடிக்கடி பற்பசையை சுவைக்கிறார்கள் என்றால், அந்த பற்பசையை மாற்றிவிட வேண்டும்.  அதுபோலத்தான் சாக்லேட், குளிர்பானங்கள் போன்றவற்றை திரும்பத் திரும்ப சுவைக்கத் தூண்டுகிறது எனும்போது, அந்த உணவு இல்லாமல் இருக்க முடிகிறதா எனக் கவனியுங்கள். உங்களால் அந்த உணவை அவசியம் சுவைத்திட வேண்டும் என கட்டுக்கடங்காத ஆர்வம் பிறந்தால், மருத்துவ உதவி உங்களுக்கு அவசியம் தேவை.

சிகரெட்டில் உள்ள நிகோட்டின் எப்படி நம்மை அடிமைப்படுத்துகிறதோ, அதுபோல தற்போது சில மேலைநாட்டு உணவு வகைகளில் அடிக்டிவ்ஸ் கலக்கப்பட்டு நம்மை அவ்வகை உணவுகளுக்கு அடிமையாக்குகின்றன.

சர்க்கரை நோயாளிகள் கவனம்!

நாம் சாப்பிடும் உணவுகள் குளுக்கோஸாக மாறும். அந்த குளுக்கோஸை திசுக்கள் பயன்படுத்துவதற்கு உதவியாக இன்சுலின் சுரக்கிறது. ஒரு நாளைக்கு 3 இட்லி போதும் என்றால், 5 இட்லி சாப்பிடும்போது உடலுக்கு தேவையான அளவு குளுக்கோஸை பயன்படுத்திவிட்டு, மீதம் உள்ளதை கல்லீரலில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். இதனால் பிரச்னை ஏற்படும். இப்படி இட்லி, தோசையையே அதிக அளவில் சாப்பிட்டால் பிரச்னை எனும்போது, நேரடியாக சர்க்கரை கலந்த உணவுகளைச் சாப்பிட்டால் பிரச்னை பெரிதாகவே மாறும். இனிப்பு உணவுகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

பழச்சாறுகள், கிழங்கு வகைகள், மாவுச்சத்துள்ள உணவுகள், குளிர்பானங்கள், பாலில் சேர்க்கப்படும் ஹெல்த் டிரிங்க் போன்றவற்றை அளவோடு சாப்பிட வேண்டும். முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியமான நபர், ஒரே நேரத்தில் இரண்டு லட்டு சாப்பிட்டால்கூட பிரச்னை இல்லை. இதுவே சர்க்கரை நோயாளி எனில், உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். மீண்டும் இயல்புநிலைக்கு மாற ஓரிரண்டு நாட்கள் ஆகலாம். இதனுடன் மருந்துகள் உட்கொள்வதும் அவசியம்.

என்ன சிகிச்சை?

வயதுக்கு ஏற்ப, உடலில் வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா எனக் கண்டறிந்து அதற்கு ஏற்றதுபோல சிகிச்சை அளிக்கப்படும். அதாவது மருந்துகள் பரிந்துரைக்கப்படும். கல்லீரல் பிரச்னை, சிறுநீரகப் பிரச்னை, தைராய்டு, சர்க்கரை நோய், வைட்டமின் குறைபாடு, அதிகக் கொழுப்பு என பல்வேறு காரணங்களில் எது பிரச்னை எனக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

- ப்ரீத்தி, படங்கள்: மா.பி.சித்தார்த்

திடீரென்று ஒரு சுவையை அதிகமாகச் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்தால், நம் உடலில் ஏதோ குறைபாடு, அதை சரிசெய்யும் முயற்சியாக குறிப்பிட்ட சுவையை உடல் தேடுகிறது எனப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறது அக்குபஞ்சர் மருத்துவம். அறுசுவைகளும் சமச்சீராக எடுத்துக்கொண்டால் பிரச்னையே இல்லை. ஒரு சுவை அதிகமாகவும், இன்னொரு சுவை குறைவாகவும் எடுத்துக்கொள்வதுதான் தவறு. எந்தச் சுவையை உடல் கேட்கிறது என்பதைப் பொருத்து, என்ன பாதிப்பாக இருக்கலாம் என்று அக்குபஞ்சர் மருத்துவர்கள் கணிக்கின்றனர்.

கசப்பு     -     இதயம் தொடர்பான பிரச்னை

துவர்ப்பு     -     மண்ணீரல் தொடர்பான பிரச்னை

இனிப்பு     -     வயிறு மற்றும் இரைப்பை பிரச்னை

காரம்    -     நுரையீரல் தொடர்பான பிரச்னை

உப்பு    -     சிறுநீரகங்கள் தொடர்பான பிரச்னை

புளிப்பு    -     கல்லீரல் தொடர்பான பிரச்னை

என்றென்றும் ஆரோக்கியத்துக்கு...

பிரிஸ்க் வாக்கிங் பயிற்சி, மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

பருப்பு, பயறு, காய்கறிகளை தட்டில் மூன்று பகுதியாகவும், அரிசியை ஒரு பகுதியாகவும் எடுத்துக்கொண்டால், சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.

ஒரே நேரத்தில் சாப்பிடாமல் ‘பிரேக்கிங் அண்ட் ஈட்டிங்’ என ஐந்து அல்லது ஆறு முறையாகப் பிரித்து சாப்பிடுவது நல்லது.

ஜி.சண்முகம், மதுரை.

``என் வயது 45. உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருக்கிறேன். ஆனால், தொப்பை சிறிது உள்ளது. சமீபமாக, தினமும் காலையில் எழுந்ததும் இடுப்புப் பகுதியும் முதுகும் வலிக்கின்றன. முதுகெலும்பு இறுக்கமானதுபோல உணர்கிறேன். இது ஏதாவது பிரச்னையா... இதற்கு என்ன தீர்வு?”

டாக்டர் எஸ்.ராஜசேகரன்,

ஒரு சுவை அதிகம் பிடித்திருந்தால் பிரச்னையா?முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர்.


``பொதுவாக, பருவநிலைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்போது, காலையில் எழுந்ததும் சிலருக்கு முதுகுவலியும், முதுகெலும்பு இறுக்கமானதுபோன்ற உணர்வும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. போதுமான அளவு ஓய்வு எடுப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம். தசைப்பிடிப்பு, வைட்டமின் டி குறைபாடு, சர்க்கரை நோய், ஸ்பாண்டிலைட்டிஸ் (Spondylitis) எனும் முதுகெலும்புப் பிரச்னை போன்றவற்றின் அறிகுறியாகவும் இது இருக்கக்கூடும். பெண்களுக்கு முன்கூட்டியே ஏற்படும் மெனோபாஸ் (Early menopause) காரணமாகவும் இப்படி ஏற்படலாம்.

   காலையில் எழும்போது எல்லா தசைகளும் தளர்ந்து இருக்கும். முதுகெலும்பை வயிற்றுப்பகுதியின் தசைகளும் முதுகின் தசைகளும் சேர்ந்தே தாங்குகின்றன. உங்கள் பி.எம்.ஐ அளவு சரியாக இருந்தாலும், தொப்பை இருப்பதால் அதில் உள்ள அதிகத் தசைகளால் உங்கள் உடலின் நிலை மாறுபட்டு, முதுகெலும்பு முன்பக்கமாக அழுத்தம் பெற வாய்ப்புள்ளது. இதனால், முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் தரப்படும். இதுவும் காலையில் முதுகுவலி ஏற்படுவதற்கும், முதுகுத்தண்டு இறுக்கமானதாகத் தோன்றுவதற்கும் காரணமாக இருக்கக்கூடும். வாரத்துக்கு நான்கைந்து நாட்களுக்காவது தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது, முதுகுத்தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகள் செய்வது, தொப்பை குறைப்புக்கான பயிற்சிகள் செய்வது, டயட் பின்பற்றுவது மூலம் இதற்குத் தீர்வு கிடைக்கும். 45 வயதாகிவிட்டது என்பதால், உங்களுக்கு எலும்பு தேய்தல் போன்ற வேறு ஏதேனும் தீவிரமான பிரச்னை உள்ளதா என்று உங்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.’’