Election bannerElection banner
Published:Updated:

குறையை வெல்லும் ஆடைகள்!

குறையை வெல்லும் ஆடைகள்!
குறையை வெல்லும் ஆடைகள்!

ஸ்பெஷல் டிரஸ்!

சென்னை, பெசன்ட் நகரில் இருக்கும் ‘வேலன்டினா ஆட்ரிகா’ பொட்டிக், வெற்றிகரமாக தனது எட்டாவது ஆண்டில் நடைபோடுகிறது. டிசைனர் பிளவுஸில் இருந்து பிரைடல் ஆடைகள்வரை வடிவமைத்துத் தரும் இவர்களின் பாராட்டுக்குரிய சிறப்பம்சம், மார்பகப்புற்றால் மார்பக நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு, அந்தக் குறையை வெல்லும் விதமான பிரத்யேக ஆடைகள் தயாரித்துக் கொடுப்பது! பொட்டிக் உரிமையாளர், 31 வயதே ஆன வேலன்டினா இரீனா.

குறையை வெல்லும் ஆடைகள்!

‘‘பிறந்தது கேரளா. வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். எங்களோடது டாக்டர் குடும்பம். நானும் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஃபார்மசியூட்டிகல்ஸ் படிச்சேன். ஆனாலும் ஃபேஷன் டிசைனிங்கில் இருந்த ஆர்வத்தால் ‘வேலன்டினா ஆட்ரிகா’ தொடங்கிட்டேன். காக்ரா, அனார்கலி, லெஹங்காவில் இருந்து பட்டுப்புடவைகள் வரை இங்கே வடிவமைக்கிறோம். இதுவரை 40 லட்சம் டிசைன்களை உருவாக்கியிருப்போம். கலிஃபோர்னியா, மலேசியாவரையிலும்கூட எங்களுக்கு `ஸ்கைப்' கஸ்டமர்கள் இருக்கிறாங்க. `ராம்ப் வாக்' நிகழ்ச்சிகளுக்கு டிசைனிங் செய்ற

திலும் பிஸி. கௌதமி, அனு ஹாசன் உள்ளிட்டோர் எங்கள் வாடிக்கையாளர்கள்’’ என்று பட படவெனப் பேசியவர்,  தன் கேன்சர் கஸ்டமர்கள் பற்றிக் கூறினார்...

‘‘கேன்சரால் மார்பகங்கள் அகற்றப்பட்ட 20 பெண்கள் எங்களோட ரெகுலர் கஸ்டமர்ஸ். பொதுவா அந்த உடைநிலையில் இருக்கிறவங்க ஒரு ஷால், ஸ்டோலால் தங்களை சங்கடத்துடன் மறைச்சுக்குவாங்க. சிலர் டர்க்கி டவல் போன்றவற்றைப் பயன் படுத்துவாங்க. அவங்களுக்குனு பிரத்யேக ஆடைகள் வடிவமைக்க நான் முடிவெடுத்தேன். களத்தில் இறங்கியதும்தான், அதற்கான தேவை அதிகம் இருப்பது புரிந்தது.

மார்பகங்கள் அகற்றப்பட்ட பெண்களுக்குத் தயார் செய்யும் பிளவுஸ்கள்ல பெரும்பாலும் சிலிக்கான் பயன்படுத்தப்படும். ஆன்லைன் ஆர்டர்களிலேயே கிடைக்கும். ஆனா... உறுத்துறது, சருமத்தில் அலர்ஜி, கனத்த எடையால் முதுகுவலி உண்டாவதுனு நாளடைவில் பிரச்னை ஏற்படுத்தும். நாங்க வடிவமைக்கும் ஆடைகள்ல சிலிக்கானுக்குப் பதிலா பஞ்சைப் பயன்படுத்துறோம். இதில் எந்தப் பிரச்னையும் வந்ததா இதுவரை எங்க வாடிக்கையாளரும் சொன்னதில்லை. மூணு மாதங்களுக்கு ஒருமுறை பஞ்சை மாற்றிக்கொண்டால் போதும். விலையும் 350-450 ரூபாய் வரைதான்’’ என்கிறார் வேலன்டினா. இவர் கணவர், ஏர்கிராஃப்ட் இன்ஜினீயர்.

குறையை வெல்லும் ஆடைகள்!

‘‘மருத்துவம் சார்ந்த படிப்பு படிச்சிருக்கிறதால, மனித உடற்கூறு மற்றும் அமைப்பைப் பற்றிய அறிவும் என் டிசைனிங்குக்கு நுட்பங்கள் சேர்க்க உதவுது. சிலருக்கு இரண்டு மார்பகங்களும் அகற்றப்பட்டிருக்கும். சிலருக்கு ஒன்று மட்டும் அகற்றப்பட்டிருக்கும். அவங்கவங்க உடல்வாகுக்கு ஏற்றமாதிரி வடிவமைக்கணும். ஒருமுறை டிரெஸ்ஸை ட்ரையல் பார்த்த என் க்ளையன்ட் ஒருவர், கண்ணாடியில் தன்னைப் பார்த்ததும் கண்ணீரோட என்னைக் கட்டித் தழுவி, ‘மார்பகம் அகற்றுவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ, அப்படியே உணர்றேன்’ என்றார். என்னால் மறக்க முடியாத அனுபவம் அது.

இது ஒரு பக்கம்னா, மற்ற உடற்குறைபாடுகளையும் சரிசெய்யும் விதமான ஆடைகள் டிசைன் செய்வதும் உண்டு. இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து தோள்பட்டை இறங்கிப்போன ஒரு பெண்மணிக்கு ஆடை தயார்செய்தது சவாலான காரியமா இருந்தது. வழக்கமான டிசைனிங்கில் கிடைப்பதைவிட 100 சதவிகிதம் திருப்தியும் நிறைவும் இதுபோன்ற கஸ்டமர்களுக்கு டிசைன் செய்யும்போது கிடைக்குது’’ எனும்போது நெகிழ்கிறார்.

‘‘புற்றுநோயால் மார்பகங்கள் அகற்றப்பட்ட பெண்கள், அதன் காரணமாகவே உளவியல் ரீதியா சோர்ந்துபோகத் தேவையில்லை. ஆடையில் சரிசெய்யலாம் அனைத்தையும்’’ என்று புன்னகை மாறாமல் சொல்கிறார், வேலன்டினா.  

மு.சித்தார்த் படங்கள்:மா.பி.சித்தார்த் 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு