Published:Updated:

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 11

வைட்டமின் பி7 (பயோட்டின்) உணவு

பிரீமியம் ஸ்டோரி
வைட்டமின் சீக்ரெட்ஸ் - 11

யோட்டின்’ எனப்படும் வைட்டமின் பி7-ஐ `முடிக்கான வைட்டமின்’ என்றும் சொல்லலாம். இதற்கு, வைட்டமின் எச் அதாவது ஹேர் (hair) வைட்டமின் என்றுகூட ஒரு பெயர் உண்டு. இன்றைக்கு 20 வயதிலேயே முடி கொட்டும் பிரச்னை அதிகரித்திருக்கிறது. முடி கொட்டுவதற்குச் சுற்றுச்சூழல், நீர், ஊட்டச்சத்துக் குறைபாடு, தவறான வாழ்க்கைமுறை, மனஅழுத்தம் எனப் பல காரணங்கள் உள்ளன. ஊட்டச்சத்தைப் பொறுத்த அளவில் முக்கியமானது வைட்டமின் பி7 குறைபாடு.

வைட்டமின் பி7, நீரில் கரையக்கூடிய வைட்டமின். இது துணை என்சைமாகவும்  செயல்படுகிறது. மூளையின் செயல்பாட்டுக்கு பேஃட்டி அமிலங்கள் இன்றியமையாதவை. நாம் சாப்பிடும் முட்டை போன்ற உணவுகளில் இருக்கும் பேஃட்டி அமிலங்களை உடல் கிரகிப்பதற்கு பயோட்டின் துணைபுரிகிறது. சர்க்கரை நோயாளிகள் மற்றும் நகங்கள் சிறிது சிறிதாகத் தானாகவே உடையக்கூடிய பிரச்னை (Brittle Nails) உள்ளவர்களுக்கு, பயோட்டின் பரிந்துரைக்கப்படுகிறது.

பயோட்டின், வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய டயாபடிக் நியூரோபதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் பயோட்டின் பயன்படுகிறது.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 11

எதில் பயோட்டின் இருக்கிறது?

பயோட்டின் பெரும்பாலான உணவுகளில் சிறிதளவு இருக்கிறது. எனினும், முழு கோதுமை, மைதா கலக்காத கோதுமை பிரெட், முட்டை, பால் பொருட்கள், வேர்க்கடலை, சோயா நட்ஸ், கீரைகள், சாலமன் மீன், கோழி இறைச்சியில் சற்று அதிக அளவு உள்ளது.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 11

பயோட்டின் சப்ளிமென்ட் சாப்பிடலாமா?

உணவுகளில் இருந்தே இந்தச் சத்தை நாம் பெற முடியும். இந்தியாவில் பயோட்டின் சத்துக் குறைபாடு மிகமிகக் குறைவு என்பதால், கவலைப்படத் தேவை இல்லை. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் மட்டும் மருத்துவர்கள் பரிந்துரைத்தால் பயோட்டின் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 11

பயோட்டின்... கவனம் தேவை!

சில மருந்துகளின் வீரியத்தை பயோட்டின் குறைத்துவிடும் என்பதால், பயோட்டின் மாத்திரை எடுப்பதற்கு முன்னர் மருத்துவர் ஆலோசனை பெறவேண்டியது அவசியம். முட்டையைச் சமைக்காமல் பச்சையாகக் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, பயோட்டின் சத்து உடலில் தங்காது. இதனால், பயோட்டின் குறைபாடு ஏற்பட்டு முடி கொட்டுதல், நகங்கள் உடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, முட்டையை வேகவைத்தோ அல்லது அரைவேக்காடாகவோ, ஆம்லெட்டாகவோ சாப்பிடலாம்.

- பு.விவேக் ஆனந்த்

சி.ராதிகா, அரசூர்.

“என் மகளுக்கு எட்டு வயது. பிறந்த சில மாதங்களிலிருந்தே விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறது. எட்டு வயதாகியும் இன்னும் இந்தப் பழக்கத்தை நிறுத்தவில்லை. இதனால், உடலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? இதை நிறுத்த வழி சொல்லுங்கள்!”

சீ.சிவகுமார்,

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 11குழந்தைகள் நல மருத்துவர், பெரம்பலூர்.


“குழந்தை பால் குடி வழக்கத்தைத்தான் விரல் சூப்பும் பழக்கமாகக் மாற்றிக்கொள்கிறது. பிறந்த குழந்தைகள் தாங்கள் தனியாக இருப்பதாக எண்ணி, அந்த தனிமையைப் போக்குவதற்குத்தான் விரல் சூப்புகின்றனர். சில குழந்தைகள் புட்டிப்பால் குடிக்கும் பழக்கத்தை நிறுத்தும்போது, அந்தப் பழக்கத்துக்கு மாற்றாக விரல் சூப்புகின்றனர்.

பெரும்பாலான குழந்தைகள் இரண்டு முதல் நான்கு வயதில், பள்ளி மற்றும் வசிப்பிடச் சூழலில் கேலிக்குப் பயந்தாவது விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்திவிடுவர். ஆனால், சில குழந்தைகளுக்கு அதற்குப் பிறகும் இந்தப் பழக்கம் இருக்கும். இதனால் பயப்பட வேண்டாம். குழந்தைக்கு  எது நல்ல பழக்கம், எது கெட்ட பழக்கம் என்பதைப் புரியவைக்க வேண்டும். பெற்றோர்களிடம் இருந்து தனியாக இருக்கின்றனரா? மற்ற குழந்தைகளுடன் இயல்பாக விளையாடுகின்றனரா என்பதைக் கவனிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பெற்றோரிடம் இருந்து சரியான அரவணைப்பு இல்லாமல் இருப்பதாலும், குழந்தைகள் இந்தப் பழக்கத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். எனவே, பெற்றோர் குழந்தைகளுக்குப் போதிய முக்கியத்துவம் தந்து அரவணைக்க வேண்டும். குழந்தையிடம் “நீ விரல் சூப்பக் கூடாது” என்று கண்டிக்கவோ, திட்டவோ கூடாது. அவர்களுக்குப் புரியும்படி அன்பாக எடுத்துக் கூறி, கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழக்கத்தை விட வைக்க வேண்டும். மேலும், குழந்தைகள் விரல் சூப்பக் கூடாது என்பதற்காக கையில் அல்லது விரலில்  கார்ப்புத்தன்மையுடைய எந்தப் பொருளையும் தடவக் கூடாது. இதனால், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவர். குழந்தை எதனால் இவ்வாறு செய்கிறது என்பதை அறிந்துதான் இந்தப் பழக்கத்தைப் போக்க வேண்டும். விரல் சூப்பும் பழக்கத்தால் குழந்தைக்கு தெற்றுப்பல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த ஆக்கப்பூர்வமான வழிகளைப் பின்பற்றுவது நல்லது. அவசியம் என்றால், குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, ஆலோசனைகளைப் பெற்று பின்பற்ற வேண்டும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு