Published:Updated:

ஸ்வீட் எஸ்கேப் - 5

ஸ்வீட் எஸ்கேப் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வீட் எஸ்கேப் - 5

சர்க்கரையை வெல்லலாம்ஹெல்த்

ஸ்வீட் எஸ்கேப் - 5

ந்தியாவில் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளுக்குப் பஞ்சம் இல்லை. அதிலும் குறிப்பாக, சர்க்கரை நோய் வந்துவிட்டால், இன்னும் அதிக ஆலோசனைகள் நான்கு திசைகளில் இருந்தும் கொட்ட ஆரம்பித்து விடுகின்றன. இனிப்பைத் தவிர்க்கும்படியும் டயட் பின்பற்றும்படியும் அவரைச் சந்திப்பவர் ஒவ்வொருவரும் ஓர் ஆலோசனை கூறுவர். சர்க்கரை நோய்க்கு எனப் பிரத்யேகமான டயட் ஏதும் இல்லை. டாக்டர்கள் பரிந்துரைப்பது சமச்சீரான ஆரோக்கியமான டயட் மட்டும்தான்.

சர்க்கரை நோயாளிகள் கார்போஹைட்ரேட் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் என நம் சமூகத்தில்  தவறான கருத்து நிலவுகிறது. நம் பெரும்பான்மையான உணவுகளில் கார்போஹைட்ரேட்தான் உள்ளது. உடனடி ஆற்றலைத் தருவதாக இருப்பதால் கார்போஹைட்ரேட்டைப் புறக்கணிக்கக் கூடாது. கார்போஹைட்ரேட்தான் அன்றாடச் செயல்கள் ஆரோக்கியமாக நடைபெற செல்களுக்கு ஆற்றலைத் தருகிறது. பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் போன்றவை கார்போஹைட்ரேட்டுக்கு ஆதாரமாக விளங்குவதுடன், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின், தாதுஉப்புக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றன.அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான கார்போஹைட்ரேட் தேவை இருக்காது. அவர்கள் எடை, உடற்பயிற்சி, எடுத்துக்கொள்ளும் மருந்தின் அடிப்படையில் தேவை வேறுபடும்.

ஸ்வீட் எஸ்கேப் - 5

கிளைசெமிக் இண்டெக்ஸ்

ஓர் உணவுப்பொருள் ரத்தத்தில் சர்க்கரை அளவில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்ற குறியீட்டால் அளவிடுகிறோம். இதில், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து டயட் பின்பற்றுவது ஆரோக்கிய வாழ்வுக்கு ஆரம்பம். எளிய கார்போஹைட்ரேட் உடனடியாகச் சிதைக்கப்பட்டு, ரத்தத்தில் கலந்து, சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். இது ஆபத்தானது. உதாரணத்துக்கு சர்க்கரை, மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை எல்லாம் கிளைசெமிக் இண்டெக்ஸ் 70-க்கு மேல் உள்ளவை.

சிக்கலான கார்போஹைட்ரேட் உணவுகள் குறைந்த அல்லது நடுத்தர அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டதாக இருக்கும். இவை மெதுவாகச் சிதைக்கப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கும். இதனால், திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தாது. உதாரணத்துக்கு, பப்பாளி, கொய்யா போன்றவற்றைச் சொல்லலாம். மாம்பழத்தைச் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்ற முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுவே, ஆரஞ்சாக இருந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யாததுடன், பல்வேறு நுண்ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். எனவே, இதில் எதைத் தேர்வுசெய்வது என்பதை நாமே முடிவு செய்யலாம்.

ஸ்வீட் எஸ்கேப் - 5

ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது அனைவருக்குமான விஷயம் இது. எனவே, சர்க்கரையைக் கட்டுக்குள்வைக்க, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினாலேபோதும். அது சரிவிகித உணவாக இருக்கும்போது இலக்கை நம்மால் அடைய முடியும். சிறப்பு உணவுகள் அல்லது சர்க்கரை நோயாளி களுக்கான உணவுகள் என்பவை தேவையற்ற ஒன்று, இதனால் ஒரு பலனும் இல்லை. ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுவோம், ஆரோக்கியமாக வாழ்வோம்!

- தொடரும்

ஸ்வீட்டர்: ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்றால், வெள்ளை உணவை (அரிசி, மைதா, சர்க்கரை) தவிர்த்து, வானவில் உணவுகளை (கீரை, பழங்கள், காய்கறிகள், முழுதானிங்கள்) பின்பற்றுவதுதான்.

டயாபடீஸ் டவுட்

நான் ஒரு சர்க்கரை நோயாளி. நான் நோன்பு இருக்கலாமா?

சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரை விருந்தும் நோன்பும் பரிந்துரைக்கப்படுவது இல்லை. நீண்டகால சர்க்கரை நோயாளிகள், இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் நோன்பு இருக்கும்போது சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும். இதுவே, அவர்கள் விருந்து உணவு உட்கொண்டால், சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்காக, சிலர் நோன்பு இருப்பது உண்டு. அதுவும், நோயாளிகள் நோன்பு இருக்க விலக்கு அளிக்கின்றனர். அப்படியும் நோன்பு இருக்க வேண்டும் என்றால், உங்கள் சர்க்கரைநோய் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதன்படி நடப்பது நல்லது.