
பி9 ஃபோலிக் அமிலம்உணவு

பிகாம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் மிகவும் முக்கியமானது ஃபோலிக் அமிலம். இது, `வைட்டமின் பி9’, `ஃபோலிக் அமிலம்’, `ஃபோலேட்’ என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மரபணுக்கள் உருவாக்கத்தில் ஃபோலிக் அமிலத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. நமது உடல் பல்லாயிரம் கோடி செல்களால் ஆனது. செல்கள் ஒன்றுக்கொன்று இறுக்கமான பிணைப்போடு, நல்ல கட்டுமானத்தோடு இருப்பதற்குக் காரணம் புரதச்சத்துதான். நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து புரதச்சத்தை, உடலுக்கு ஏற்ப மாற்றுவதற்கு ஃபோலிக் அமிலம் உதவுகிறது. உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் உருவாவதிலும் ஃபோலிக் அமிலத்துக்குப் பங்கு உண்டு.

ரத்தத்தில் ஹோமோசிஸ்டின் அளவு அதிகரிக்கும்போது இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஃபோலிக் அமிலம், ரத்தத்தில் இருக்கும் அதிக அளவிலான ஹோமோசிஸ்டினைக் குறைக்கிறது. இதன் மூலம், பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்.
உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் போன்றவற்றைத் தடுப்பதற்கும் ஃபோலிக் அமிலம் பயன்படுகிறது. மறதி நோயான அல்சைமர், வயாதானவர்களுக்கு ஏற்படும் காது கேளாமைக் குறைபாடு, ஆஸ்டியோபொரோசிஸ், முறையான தூக்கமின்மைப் பிரச்னை, மனஅழுத்தம், தசை வலிகள், தோல் நோய்கள் போன்ற பல பிரச்னைகளுக்கான மருந்துகளில் ஃபோலிக் அமிலம் தேவைப்படுகிறது.

கர்ப்பிணிகள், நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தவிர்க்க, ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். குழந்தைப்பேறுக்கு திட்டமிடும் பெண்கள் மற்றும் கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் உள்ளவர்கள் தினமும் 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.
ஃபோலிக் அமிலம் நீரில் கரையக்கூடிய வைட்டமின். எனவே, இந்த சத்து நிறைந்த உணவுகளை முடிந்தவரை அப்படியே சாப்பிட வேண்டும். ஏனெனில், சமைக்கும்போது உணவில் உள்ள ஃபோலிக் அமிலம் பெருமளவு சிதைந்துவிடும். கர்ப்பத்தடைக்குச் சாப்பிடும் மாத்திரைகள், உடலில் ஃபோலிக் அமிலம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். இதனால், ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டாலும், உடலில் கிரகிக்கப்படாமல் ஃபோலிக் அமிலக் குறைபாடு ஏற்படும்.

ஃபோலிக் அமிலக் குறைபாடு ஏற்பட்டால், வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு, மனக் குழப்பம், பெரிஃபெரல் நியூரோபதி எனச் சொல்லப்படும் நரம்புக் கோளாறுகள் போன்ற அறிகுறிகள் தெரியும்.
- பு.விவேக் ஆனந்த்
ஃபோலிக் அமிலம் எதில் இருக்கிறது?

கீரைகள், புரோகோலி, வாழைப்பழம், தர்பூசணி, எலுமிச்சை, பீன்ஸ், காளான், ஆரஞ்சு, தக்காளி, வேர்க்கடலை, எள், முந்திரி, வால்நட், காலிஃபிளவர், அசைவ உணவுகள்.